Sat. Nov 23rd, 2024

உணவுத் திருவிழா என்ற பெயரில் தமிழக அரசும், மாவட்ட அளவிலான அரசு நிர்வாகமும் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் கேலிக்கூத்தாகிவிடுகிறது என்பதை அனுபவம் மூலம் உணர்ந்து கொண்ட பிறகும் கூட திரும்ப, திரும்ப தவறிழைத்தால், திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் எந்த லட்சணத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது என்று சராசரி மனிதர்கள் கூட கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை திமுக அரசே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

கடந்த மே மாதம் ஆம்பூரில் அறிவிக்கப்பட்ட பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

பாஜக மற்றும் இந்து மத அமைப்பினரின் எதிர்ப்புக்கு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அடிபணிந்தது மதநல்லிணக்கத்திற்கு எதிரானது என்று பெருங்குரல் எழுந்தது. அப்போதே மாவட்ட நிர்வாகத்தின் தடுமாற்றத்திற்கு நெற்றியடி கொடுக்கும் வகையில், தமிழர்களின் உணவுப்பழக்கத்தில் மாட்டிறைச்சி நெடுங்காலமாக இடம் பெற்றிருப்பதை பண்பாட்டு மானுடவியல் சார்ந்த ஆய்வுகள் நிறுவியுள்ளன. ஆனால், இந்த வரலாற்றுண்மையை மறைத்து மாட்டை புனிதமாகவும், மாட்டிறைச்சி உண்பதை இழிவாகவும் காட்டி பொதுவெளியில் புழங்கத் தகாததாகவும் இந்துத்துவவாதிகள் கட்டமைத்து வரும் அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மாவட்ட நிர்வாகம் அடிபணிந்துவிட்டதோ? என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

அதன்பிறகும் கூட பீப் பிரியாணியை உள்ளடக்கிய பிரியாணி  திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யாமல், அந்த திருவிழாவையே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஒத்திவைத்தது, இந்து மத ஆதரவாளர்களுக்கு களிப்பை ஏற்படுத்திவிட்டது.  

மேடைதோறும் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், திமுக இளைஞரணி சார்பில் மாவட்டங்கள்தோறும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், பீப் பிரியாணி விவகாரத்தில், திமுக அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல், திராவிட சித்தாந்தக் கொள்கையில் தெளிவு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் வேதனையளிக்க கூடிய ஒன்றாகும்.

பீப் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய பாஜக அரசுக்கு கோபம் வந்துவிடுமோ…தமிழக பாஜகவினர் போராட்டங்களை முன்னெடுத்து விடுவார்களோ… என்ற அச்சவுணர்வே திமுக அரசுக்கு அதிகமாக இருக்கிறது என்பது ஆம்பூர் மற்றும் சென்னை தீவுத்திடல் உணவுத்திருவிழா போன்ற நிகழ்வுகளின் மூலம் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.

விளிம்பு நிலை மக்களின் அத்தியாவசிய உணவாக ஒரு காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட மாட்டு இறைச்சி, இன்றைக்கு நாகரிக மக்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது என்ற தகவல் கூட ஆட்சியாளர்களுக்கு உரைக்காமல் போய்விட்டதே என்பதை விசித்திரமாக பார்க்கிறார்கள் அசைவ உணவுப் பிரியர்கள்.

மறைந்த முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி போல, திராவிடக் கொள்கைகளிலும், ஆட்சி நிர்வாகத்திலும் உறுதியான நிலைப்பாடு, மனவுறுதி உள்ளிட்ட நற்குணங்கள் அவரின் வாரிசான இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இல்லை என்பதை இளம்தலைமுறையினரும், குறிப்பாக ஊடகவியலாளர்களும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுதான் சோகம்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பாரிலானுங் கெடும்…

என்ற திருக்குறளுக்கு ஏற்ப, விடியல் அரசு, உண்மையான மக்களாட்சியாக மலர வேண்டும், வீறு நடை போட வேண்டும் என்ற அக்கறையோடு, ஆட்சியாளர்களுக்கு கோபம் வந்தாலும் கூட பரவாயில்லை என்று துணிச்சலுடன் தங்களின் ஊடக கடமையை செய்து கொண்டிருக்கும் இளம்தலைமுறை ஊடகவியலாளர்களைப் பார்க்கும் போது நிம்மதி பிறக்கிறது.

பீப் பிரியாணி விவகாரத்திலும் திராவிட சித்தாந்தத்தை முன்னெடுக்கும் அம்சங்களிலும் திமுக ஆட்சிக்கு எதிராக பாஜகவும், இந்து மத அமைப்புகளும் தொடர்ச்சியாக கண்டனக்குரல்களை ஓங்கி ஒலிக்கும்போது, திமுக அரசுக்கு பக்கபலமாக நிற்க வேண்டிய தோழமைக்கட்சியினர் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அண்மைக்காலமாக பட்டும்படாமலும் முழக்கங்களை எழுப்பி வருவதைக் கண்டு, மதவாத உணர்வுகளுக்கு எதிரானவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

பெரும்பான்மையான மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக பாஜகவும் இந்து மத அமைப்புகளும் துணிந்து எடுக்கிற போது, பெரும்பான்மை மக்களின் பண்பாடுகளை காப்பாற்ற தொடர்ச்சியாக போராடி வரும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள், ஆட்சி அதிகாரத்தில் கிடைக்க கூடிய ஆதாயங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அடக்கி வாசிக்கின்றார்களோ ? என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினரிடம் எழுந்து நிற்கிறது.

இப்படி, கொள்கை சார்ந்த விஷயத்தில், தமிழர்களின் குறிப்பாக ஆதி தமிழர்களின் பண்பாட்டில் கை வைக்கும் மதவாத சக்திகளை முறியடிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும், ஓங்கி குரல் எழுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் போலி பாசாங்கு கூடாது என்பதே பகுத்தறிவாளர்களின் முழக்கமாக இருக்கிறது. இப்படிபட்ட உணர்வு எழும்போதுதான், கொள்கை விஷயத்தில் திமுக தடுமாறும் போது, அதனையே முதலீடாக்கி பிழைப்பு நடத்தி வரும் சமூக விரோதிகளின் கொட்டம் அடக்கப்படும் என்றும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசை மிரட்டி ஒடுக்கிவிடலாம் என்று எண்ணத்தில் இருக்கும் இந்துத்துவாதிகளுக்கு சாவுமணி அடிக்க முடியும் என்று  ஆணித்தரமான வாதத்தை முன்வைக்கிறார்கள் திராவிட சித்தாந்த பற்றாளர்கள்.

இந்துத்துவா சக்திகளை எதிர்ப்பதில் சுணக்கம் காட்டினால், மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது வன்முறை தாக்குதலை நடத்தி அராஜகத்தில் ஈடுபட்ட கும்பலுக்கு மேலும் மேலும் துணிச்சல் அதிகமாகிவிடும். 5 சதவீத மக்களின் ஆதரவைக் கூட பெற முடியாத நிலையில் உள்ள மதவாத சக்தி, எஞ்சியுள்ள 90 சதவீத மக்களுக்கு எதிராக வன்மத்தை தொடர்ந்து கக்கி வருவதை திராவிட மாடல் ஆட்சியாளர்கள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய உரிய நேரம் வந்துவிட்டது என்பதை பிறர் சொல்லி முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டால், கலைஞரின் வாரிசுதானா முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற சந்தேகம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எழுந்துவிடும் ஆபத்து உள்ளது.

ஊடகவியலாளர்களின் ஆவேசங்கள்….கொ.அன்புகுமார்

உணவில் அரசியல் இருக்கிறதா ? அதில் என்னய்யா அரசியல் இருக்க முடியும் ? அதெல்லாம் சும்மா என்று தான் இதுவரை நினைத்திருந்தேன்.
நான் சாப்பிட்டதில்லை என்றாலும் “பீப்” பிரியாணியை விரும்பக்கூடிய நண்பர்கள் சாதி மதங்களை கடந்தும் நிறைய பேர் இருப்பதை அறிவேன்.
மாட்டு இறைச்சி குறித்து சிந்தித்தது இல்லை. அது எப்படியிருக்கும் என்று கூட நினைத்தது இல்லை. பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்கள் அதிகமாக தேடும் உணவு என்றே நினைத்திருந்தேன் ஆனால் எல்லா சாதியை சேர்ந்தவர்களும் பீப் பிரியாணிக்கடைக்குள் நுழைவதை பார்த்தபோது அது ருசிக்கான உணவாக இருக்கக்கூடும் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். சுக்குபாய் போன்ற புகழ்பெற்ற கடைகளில் நான் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தால் எதிரே இருப்பவர் பிப் பிரியாணி ஆர்டர் சொல்வார். ஒருவேளை விலை மலிவாக இருக்குமோ அதற்காக தான் இவ்வளவு பேர் அதை விரும்புகிறார்களோ , ஒரு ஆட்டை கூறுபோட்டு ரத்தம் உட்பட அனைத்தையும் பொறித்து உண்பது போல அவர்களும் மாடு இறைச்சி சாப்பிடக்கூடும் என்று நினைத்திருந்தேன். பெரும்பாலும் அது ஏழைகளுக்கான உணவாக கருதக்கூடும் ஆனால் மேலைநாடுகளில் அது தான் பிரத்தியேக உணவு எல்லோருக்குமான உணவாகவும் இருக்கிறது. ஏன் அங்கெல்லாம் போகவேண்டும் பக்கத்து மாநிலமான கேரளாவே சாட்சி. வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அதில் இவ்வளவு அரசியல் இருக்கிறது என்பது இப்போது தான் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

சென்னை உணவு திருவிழாவில் பீப் பிரியாணி ஸ்டால் அமைக்க யாரும் அனுமதி கோரவில்லை என்று நேற்று தான் ஒரு அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். இன்றைக்கு அனுமதி என்கிறார்கள். பீப் பிரியாணி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அதைவிடுங்க அதை பெரிதுபடுத்தாதீங்க என்று அமைச்சர் பேசியதைக்கண்டு சிரிப்பு தான் வந்தது. உண்மையை சொல்லவேண்டுமானால் கலைஞர் போல் தெளிவான ஒரே முடிவை இந்த அரசால் எடுக்கமுடியவில்லை என்பதன் வெளிப்பாடு தான் இதெல்லாம். ஏற்கனவே ஆம்பூர் அருகே நடந்த உணவு திருவிழாவிலும் இதே பிரச்சனை எந்த அளவுக்கு பெரிதாக வெடித்தது என்பதை அறிந்திருந்தும் நேற்றுவரை யாரும் அனுமதி கேட்கவில்லை என்றது வேடிக்கையிலும் வேடிக்கை. திருவாரூரில் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைப்பதில் பின்வாங்கியதில் தொடங்கி, சிதம்பரம் தீட்சிதர்கள் பிரச்சனை வரை என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்வியை முன்வைத்தால் கேள்விக்கணைகளே மிஞ்சும். அரசு மாற்றி மாற்றி பேசுவது அழகல்ல. யாரை நீங்கள் திருப்திபடுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

பாஜகவிலும்
முஸ்லிம்கள் இருக்கிறார்கள்
அமைச்சரே… சமஸ்…
.


உணவுத் திருவிழாவைப் பின்னின்று நடத்துகிறது தமிழக அரசு.

வெறுப்பரசியலின் ஓர் அங்கமாக மாட்டிறைச்சி ஆக்கப்பட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். பொதுச் சமூகத்திலிருந்தும், பொது அரங்கிலிருந்தும் நேரடியாக முஸ்லிம்களை விலக்குவதன் குறியீட்டு வெளிப்பாடுகளில் ஒன்றுதான் மாட்டிறைச்சி மீதான தீண்டாமை.

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி இல்லை என்று எழுந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக அப்படி ஒரு விழாவே ஏற்கெனவே ரத்துசெய்யப்பட்டுவிட்ட பின்னணியில், சென்னை உணவுத் திருவிழாவில் இதுகுறித்த முன்யோசனைகள் அரசுக்கு இருந்திருப்பது அவசியம்.

சென்னை உணவுத் திருவிழாவில் ஏன் மாட்டிறைச்சிக்கான அரங்கு இல்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் சொல்கிறபடி, ஒருவேளை அரங்கு அமைக்க யாரும் அனுமதி கேட்டிருக்காவிட்டாலும், அப்படி ஓர் அரங்கை அமைத்திட அரசே ஏற்பாட்டை முன்னெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், இது உணவு வகைமை தொடர்பானது இல்லை; சமூகப் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக அரவணைப்பு தொடர்பானது. மேலும், சென்னை உணவுக் கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் மாட்டிறைச்சி. அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை சுடச்சுட விருந்து படைக்கும் ‘தமிழகத்தின் பீஃப் ஃபுட் ஃபாரடைஸ்’ தாதாஷமக்கான் சென்னையில்தானே இருக்கிறது!

சர்ச்சைகள் தவிர்ப்பு நடவடிக்கை இல்லை இது; தேவையற்ற பின்வாங்கல்.

கேள்விகளைத் தவிர்க்க, “நானே பீஃப் சாப்பிடுவேன்” என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுடைய பதில் பொறுப்பற்றது. சிறுபான்மையினர் வாழ்வுரிமை தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பினால், பாஜகவில் உள்ள ஒரு முஸ்லிம் தலைவர் “நான்கூட முஸ்லிம்தான்… இதெல்லாம் ஒரு கேள்வியா!” என்று பதில் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருந்தது அது.

மா.சுப்பிரமணியனிடம் இதை எதிர்பார்க்கவில்லை.

நீங்கள் தேவையில்லாமல் பின்வாங்கும் ஒவ்வோர் அங்குலத்திலும் அவர்கள் தானாக முன்னகர்கிறார்கள்!