Sat. Nov 23rd, 2024

தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி தர மாட்டேன்: நெருங்கிய நட்பு வட்டத்தில் உதயநிதி உருக்கம்…..

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அதிகார மையங்களாக அவரது குடும்பத்தினர்தான் திகழ்ந்து வருவதாக திமுக முன்னணி நிர்வாகிகளே வெளிப்படையாக பேசி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் அதிகாரம்தான் கட்சியிலும் ஆட்சியிலும் கோலோச்சி வருவதாகவும் முணுமுணுப்புகள் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்படிபட்ட நேரத்தில், “கட்சி விவகாரத்திலோ, ஆட்சி நிர்வாகத்திலோ தான் ஒருபோதும் தலையிடுவதில்லை. தாத்தா கலைஞர் காலத்தில் தந்தைக்கு ஏற்பட்ட மனவேதனைகளை எல்லாம் அறிந்தவன் நான். அதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒருபோதும் சிரமம் கொடுக்க விருப்பமில்லை” என்று நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உதயநிதி மனம் திறந்து உருக்கமாக பேசியதாக ஒரு தகவல் நல்லரசுக்கு கிடைத்தது. அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் விசாரித்தோம். தங்கள் பெயர், அடையாளங்களை மறைத்துக் கொண்டு ஒன்றிரண்டு பிரபலங்கள் பேசினார்கள். அவர்களின் வாக்குமூலம் இதோ….

மாதத்தில் ஓரிரு நாட்கள் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் இருந்தே ஆத்மார்த்தமாக பழகி வரும் ஒருசில நண்பர்களை சந்தித்து பேசுவது வழக்கம். மிகவும் நெருக்கமான நண்பர்களை அவரே தேடி வந்து பேசுவார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த நடைமுறை நீடித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் சந்திப்பு நடைபெறும்போது, அரசியலில் அவரின் பங்களிப்பு, திட்டங்கள் பற்றி நாங்கள் கேட்போம். அவரும் பல நேரங்களில் தானாக முன்வந்து பேசுவார்கள். ஒளிவு மறைவின்றி இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதால், அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட பலர் நண்பர்கள் குழுவில் உள்ளதால், அவரவர் கேள்விபட்ட தகவல்களை எல்லாம் சொல்லும் போது உதயநிதி பொறுமையாக பதிலளிப்பார். அதில், எந்தவொரு தப்பித்துக் கொள்ளும் எண்ணம் துளியும் இருக்காது. வெளிப்படையாகவே பேசுவார்.

அந்தவகையில், அண்மையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது, மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக பேச்சு எழுந்தது. உட்கட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லையே.. கட்சி பதவிகளான நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாநகர பகுதிகளில் பகுதி, வார்டு செயலாளர் போன்ற பதவிகளுக்கு குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாய் என்று பதவிகளின் தகுதிக்கு ஏற்ப மாவட்டச் செயலாளர்கள் பணம் வசூலித்துக் கொண்டிருப்பதாக புலனாய்வு இதழ்களில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி, இப்படியெல்லாம் உட்கட்சி தேர்தல் நடந்தால், திமுகவின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்குமா… பணம் கொடுத்து பதவிக்கு வரும் நிர்வாகிகள், நெருக்கடி ஏற்படும் போது உண்மையான உழைப்பை கொடுப்பார்களா.. அவர்களது தலைமையில் தொண்டர்கள் எப்படி திரள்வார்கள்? என்று எல்லாம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

உட்கட்சி தேர்தல் முறைகேடு குறித்து அண்ணா அறிவாலயத்திற்கே திமுக நிர்வாகிகள் திரண்டு வந்து புகார்கள் கொடுக்கிறார்களே.. அவையெல்லாம் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படுகிறதா ?என்றெல்லாம் கூட கேட்கப்பட்டது.

எல்லாவற்றுக்கும் பொறுமையாக செவிமடுத்த உதயநிதி ஸ்டாலின், நீங்கள் சொல்கிற அத்தனை விவகாரமும் என் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது. திமுக உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். தலைவரும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். தாத்தவின் நம்பிக்கைக்குரிய திமுகவில் முன்னணி நிர்வாகிகளில் பெரும்பான்மையானோர்தான் இப்போதும் பதவிகளில் இருந்து வருகிறார்கள். தலைவர் (மு.க.ஸ்டாலின்) வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் எல்லாம் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைவர் யார்யார் மீதெல்லாம் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறாரோ, அவர்களில் ஒருசிலர் பணத்திற்கு ஆசைப்பட்டோ அல்லது தங்களது விசுவாசிகளுக்கு மட்டுமே கட்சி பதவிகள் கிடைக்க வேண்டும் என்றோ எண்ணி செயல்படுகிறார்கள்.. மாநிலத்தின் பல பகுதிகளில், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உட்கட்சி தேர்தலில் முறைகேடுகள் அதிகமாக நடைபெற்று இருக்கின்றன. எனக்கு மிக மிக வேண்டிய இளைஞரணி நிர்வாகிகள் பலர் இந்த தேர்தலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையெல்லாம் தலைவரின் (மு.க.ஸ்டாலின்) கவனத்திற்கு கொண்டு சென்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், எனது தலையீட்டால் மூத்த தலைவர்கள் பாதிக்கப்படுவார்கள். தலைவர் மீது எரிச்சல்படுவார்கள். தாத்தா காலத்தில் (கலைஞர் மு.கருணாநிதி) இதுபோன்ற கட்சி விவகாரங்களில் கட்சி நிர்வாகிகளுக்கு அநீதி நடைபெறும்போது தலைவர்(மு.க.ஸ்டாலின்) நேரிடையாகவே முறையிடுவார். அப்போதெல்லாம் மூத்த தலைவர்களிடம் விசாரிக்க சொல்லி நடவடிக்கை எடுப்பார். ஆனால், பெரும்பாலான நேரங்களில் தலைவர் குற்றச்சாட்டிய தலைவர்கள் ஏதாவது ஒருவழியில் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வர்.

அப்படிபட்ட நேரங்களில் தலைவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாவர். அதிலிருந்து எளிதாக விடுபட முடியாமல் அவர் தவித்த காலத்தையெல்லாம் உடனிருந்து பார்த்தவன் நான். எங்கள் ஒட்டுமொத்த குடும்பமே தலைவரின் வேதனையை உள்வாங்கி கொண்டவர்கள்தான். தாத்தா காலத்தில் இளைஞரணி செயலாளராக, பொருளாளராக இருந்த நேரங்களில் கூட தலைவர் பரிந்துரைத்த அனைத்து சிபாரிசுகளும் வெற்றிப் பெற்றதாக கூறி விட முடியாது. பத்து நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று தலைவர் வலியுறுத்தினால் மூத்த தலைவர்களின் தலையீட்டினால் தாத்தா ஒன்றிரண்டு நிர்வாகிகளுக்கு மட்டுமே பதவிகளை வழங்குவார். அப்படிபட்ட நேரங்களில் தனக்கு ஏற்பட்ட புறக்கணிப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தலைவர் விரக்தியடைந்ததை எல்லாம் மாணவப் பருவத்திலேயே பார்த்து தவித்தவன் நான்.


அதனாலேயே, தலைவருக்கு என்னால் ஒரு சிரமமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று விலகியே நிற்கிறேன். இல்லத்திலோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ தலைவர் கூப்பிட்டு ஏதாவது சொன்னால், அப்போது மட்டும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பதில் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். என்னுடைய ஆதரவாளர்களுக்கோ அல்லது இளைஞரணி நிர்வாகிகளுக்கோ கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற வகையில் தலைவரை ஒருபோதும் தொந்தரவு செய்வது கிடையாது. நான் சொன்னதை செய்தே ஆக வேண்டும் என்றும் நெருக்கடி கொடுப்பதில்லை.

ஆட்சியையும் கட்சியையும் ஒருசேர வழிநடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை தாத்தா காலத்திலேயே பார்த்தவன். அதுபோன்ற சிரமம், நெருக்கடி தற்போதைய நிலையில் தலைவருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, நான் விலகி நிற்கிறேன். இதனால்தான் எனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்காக திரைத்துறையில் அதிகநேரத்தை செலவிடுகிறேன் என்று மனம் திறந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கடைசியாக சொன்ன இரண்டு விஷயங்கள்தான் எங்களை எல்லாம் கலங்க வைத்தது என்றனர் அவரின் கல்லூரி கால நண்பர்கள்.


பள்ளி, கல்லூரி நண்பர்கள் முதல் திரைத்துறையைச் சேர்ந்த மனதுக்கு நெருக்கமான நண்பர்கள் என நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். இவர்களில் பலர் ஆட்சியில் சில சலுகைகளை பெற அணுகிய நேரங்களில் எல்லாம் கூட, அவர்களின் மனம் வருத்தம் அடைந்தாலும்கூட பரவாயில்லை என்று தவிர்த்து இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம், தலைவருக்கு, முதல்வருக்கு எந்தவகையிலும் நெருக்கடி கொடுத்துவிடக் கூடாது என்ற விஷயத்தில் உறுதியாக இருப்பதால்தான் என்று வெளிப்படையாகவே பேசிய உதயநிதி ஸ்டாலின், முக்கியமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் என முக்கியத்துவம் வாய்ந்த பணியிட மாற்றங்களில் கூட தலையிடுவது என்று தீர்மானமாக இருக்கிறேன் என்று கூறியபோது அவர் மிகுந்த பண்பட்டவராக இருக்கிறார் என்பதையே வெளிப்படுத்தியது.
எங்களுக்கு தெரிந்தவரை உதயநிதி ஸ்டாலின் மூலம் ஆட்சியில் காரியம் சாதித்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவரோடு நெருக்கமான நட்பு கொண்டிருப்பவர்களில் ஒரு சிலர்தான் இருப்பார்கள் என்று மட்டுமே எங்களால் உறுதியாக சொல்ல முடியும் என்று கூறி விடை கொடுத்தனர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிற்கு நெருங்கமான நண்பர்கள்.

உதயநிதி ஸ்டாலின் இவ்வளவு நல்லவரா?