Fri. Apr 26th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் அங்கம் வகித்து வரும் அமைச்சர்களில் கண்ணியமானவர்களாக, இரண்டு பிரமுகர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். அதில் முதன்மையானவர் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. இரண்டாமவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். 90 சதவீதத்திற்கு மேல் மனசாட்சியோடு நடந்து கொள்ளும் இருவரும், மக்கள் சேவையில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவதாக, அரசு நிர்வாகத்தை கண்காணித்து வரும் ஓய்வுப் பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன், மிகுந்த வறுமையில் உழன்று படிப்படியாக உச்சத்திற்கு வந்திருப்பவர். கட்சிப் பணியிலும் அரசு நிர்வாகப்பணியிலும் தனது கடுமையான உழைப்பாலும், தீவிரமான விசுவாசத்தின் காரணமாகவும் நிலைத்து நிற்பவர். சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்த காலத்தில், நாள் தவறாமல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் நிலவும் பிரச்னைகளுக்கும் துரிதமாக தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றவர்.

அதைவிட முக்கியமாக, மாநகராட்சி நிர்வாகத்தையும் குறுகிய காலத்தில் கற்றுணர்ந்து, செம்மையாக வழிநடத்தியவர் என்று அவரை இப்போதும் கூட புகழ்ந்து பேசும் தூய்மை ஆர்வலர்கள் பலர் இருக்கிறார்கள்.

அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் வாழ்க்கை முறையோடு ஒப்பிடும் போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வாழ்க்கை முறை முற்றிலும் வேறுபட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு கிராமத்தை பூர்விகமாக கொண்ட அவர், பாரம்பரிய, செல்வாக்குமிக்க குடும்பத்தின் வாரிசாக வளர்ந்தவர். பேரறிஞர் அண்ணா காலத்திலேயே திராவிட தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த தங்கபாண்டியன், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் அன்பிற்கு, நம்பிக்கைக்கு, மதிப்பிற்கு பாத்திரமானவர். அவரின் மறைவுக்குப் பிறகு விபத்து போல 1998 ஆம் ஆண்டில் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டவர்தான் தங்கம் தென்னரசு.

2006 ஆம் ஆண்டில் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றுக் கொண்டார். அன்றைக்கு இளைஞராக இருந்த அவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டதை கண்டு மூத்த அமைச்சர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், முதல்வர் கலைஞரின் நம்பிக்கையை குறுகிய காலத்திலேயே பெற்று பள்ளிக் கல்வித்துறையை சிறப்பாக நிர்வகித்தார் என்று அந்த காலத்திலேயே கல்வியாளர்கள் பாராட்டினார்கள்.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும், தங்கம் தென்னரசுவின் தலைமைக்கு கட்டுப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்கள். 2006 முதல் 2011 வரை பள்ளிக்கல்வித்துறையில் புதுமையான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டதையடுத்து, பள்ளிக்கல்வியே மறுமலர்ச்சி அடைந்தது என்றும், அந்த 5 ஆண்டு காலமும் பள்ளிக்கல்வித்துறைக்ககு பொற்காலம் என்றும் கல்வியாளர்கள் பெருமிதமாக கூறி வந்தனர்.

கல்வியாளர்களின் பாராட்டுகள் எளிதாக கிடைத்துவிடவில்லை…கலைஞர் மு.கருணாநிதியும் விளையாட்டுத்தனமாக தன்னை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமித்துவிடவில்லை… அவரின் நம்பிக்கையை நிரூபிப்பதற்காக கடுமையாக பணியாற்ற வேண்டியிருந்தது என்றும் விகடன் யூ டியூப் சேனலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் உணர்ச்சிப்பூர்வமாக விவரித்துள்ளார்.

கலைஞர் மு.கருணாநிதி வழியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இளம்வயதுக்காரர்தான். ஆனால், கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள், கல்வியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகதான் தகவல்கள் தொடர்ந்து  வந்து கொண்டிருக்கின்றன.

பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஓராண்டில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள், கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் தரப்பிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன. அதுபோல, பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள துவக்க நிலை முதல் மேல்நிலை வரை பயிலும் மாணவர்கள், தாய்மொழியான தமிழில் பேசுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என்பதும் பொதுத் தேர்வுகளில் தமிழ் பாடத்திலேயே 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைகிறார்கள் என்பதும் கல்வியாளர்களை மிகவும் வேதனைப்பட வைத்துள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக தகவல் வந்து கொண்டிருக்கும் நேரத்தில், கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு வருகின்றன என்ற தகவல் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் கல்வியாளர்கள், மழைக்காலங்களில் பள்ளிக் கூடங்களில் வெள்ளம் புகுவதும், போதிய, பாதுகாப்பான வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவியர், மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கும் சூழல் நிலவுவதும் தமிழக கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்கிறார்கள் வேதனையுடன்.

துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணியாற்றி வரும் அரசு ஆசிரியர்களுக்கு பணிச்சுமைகளை அதிகரிக்கும் வகையில் கற்பிக்கும் பணியை தவிர வேறு பணிகளிலும் அதிகளவில் ஈடுபடுத்துவதுதான் கல்வி கற்பிக்கும் நேரத்தையும், திறனையும் குறைத்துவிடுவதாகவும் கல்வியாளர்களில் ஒருசாரார் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் குரல்கள் போலவே, பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள், உலகளவில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளையும் மாற்றியமைக்க வேண்டும். அதுவும் விரைந்து நிறைவேற்றிவிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் என திறமைப் படைத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தாலும்கூட, பள்ளிக்கல்வித்துறையில் வியக்கத்தக்க மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திடவில்லை என்று கூறும் ஓய்வுப் பெற்ற பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தற்போதைய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறையில் தனித்த ஆர்வத்தை காட்டுவதைவிட, முதல்வரின் மகன், மருமகன் ஆகியோரின் வளர்ச்சியில்தான் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார் என்றும் முதன்மையானவரின் குடும்ப ஆதரவு பின்னணியோடு திருச்சி மாவட்ட அரசியலில் மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் செல்வாக்கை குறைத்து அவரை விட உயர்ந்த அந்தஸ்தை தான் பெற்றுவிட வேண்டும் என்பதிலும் அதிக நேரத்தையும், உழைப்பையும் அன்பில் மகேஸ் செலவழித்து வருவதாகவும் வேதனையோடு கூறுகிறார்கள்.

கடந்த ஓராண்டு காலத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் செயல்பாடுகள் வெகுவாக பாராட்டும் வகையில் அமைந்துவிடவில்லை. அவரே எஞ்சிய நான்காண்டுகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நிடிக்கும் நிலை ஏற்பட்டால், தமிழக பள்ளிக்கல்வித்துறை மிகுந்த பின்னடைவை சந்திக்கும் என்றும் கவலையோடு பேசுகிறார்கள்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை மீண்டும் பொற்காலத்திற்குள் பயனிக்க, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு தர கலைஞரின் வாரிசான முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வேண்டுகோளாக மாறி வருகிறது….