தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 8 மண்டலங்களில் அரசுக்கு சொந்தமான 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆடவர், மகளிர் மற்றும் பொது ஆகிய பிரிவுகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களுக்கு கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மத்திய கல்வி வாரியத்தின் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, அவர்களும் விண்ணப்பிப்பதற்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
இடஒதுக்கீட்டில் குளறுபடி
பழங்குடியினர், தாழ்த்தப்பட்டடோர் (எஸ்.டி/எஸ்.சி), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்பிசி), பிறப்படுத்தப்பட்டோர்( பிசி) இதர வகுப்பினர் (ஓபிசி) என இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்தும் வகையில், ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கான பிரிவு மற்றும் சாதிப் பெயரையும் பிரத்யேகமாக குறிப்பிட்டு பதிவு செய்யும் வகையில் வசதிகளும் இணையத் தள விண்ணப்பத்தில் செய்யப்பட்டிருந்தன.
சாதி ரீதியாக விண்ணப்பிக்கும் முறையில் இணைய தளத்தில் காணப்பட்ட குறைப்பாட்டினால், பிறப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் என்று விண்ணப்பத்தில் உள்ள வசதியை தேர்வு செய்தால், அடுத்து சாதி பெயரை பதிவு செய்யுங்கள் என்ற கட்டம் வருகிறது. அதில், வடுகர் என்ற சாதியின் பெயரே இடம் பெறவில்லை.
அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள சாதி பட்டியலில் வடுகர் என்ற சாதி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் இடம் பெற்றுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வடுகர் சாதிப் பிரிவுக்கு விண்ணப்ப படிவத்தில் வசதி ஏற்படுத்தி தராததால், பிறப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) என்ற பிரிவில் விண்ணபிக்க வேண்டிய துரதிர்ஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களுக்குரிய இடஒதுக்கீடு பிரிவுக்கு மாறாக பொதுப் பட்டியல் போன்ற பிரிவில் விண்ணப்பத்தை பதிவு செய்த இத்தகைய மாணவர்களுக்கு, தர வரிசைப்பட்டியலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு வடுகர் சாதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், அவருக்கு உள்ள இடஒதுக்கீட்டின் உரிமைபடி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் விண்ணப்பித்திருந்தால், தர வரிசைப் பட்டியலில் முதல் ஆயிரம் பேரில் ஒருவராக இடம் பெற்றிருக்க முடியும். ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் விண்ணப்பித்ததன் மூலம் அந்த மாணவி முதல் 2000 பேரில் ஒருவராக தகுதி பெற்றவராகியிருக்கிறார்.
இதனால், மாணவ, மாணவியர் தங்களின் சாதிக்கு உரிய இடஒதுக்கீடு சலுகையை பெற முடியாமல் புறக்கணிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இணைய தள விண்ணப்பத்தில் உள்ள குறைபாட்டினால், அரசு கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டு விடுவதுடன், முதலாம் ஆண்டிற்கான வகுப்பு தொடங்கப்படவுள்ள நிலையில் தனியார் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் சேர முடியாமல் ஓராண்டு வீணாகிவிடும் ஆபத்து உள்ளதாக மாணவ, மாணவிகள் கதறுகின்றனர். கல்லூரியில்தான் சேரும் நிலை உருவாகியுள்ளது.
கல்லூரி முதல்வரின் அறிவுரை
சென்னையைச் சேர்ந்த வடுகர் சாதியை சேர்ந்த மாணவர் ஒருவர், இந்த குளறுபடி காரணமாக தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு தீர்வு கண்டிட, கடற்கரைச் சாலையில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியின் முதல்வரை நேரில் அணுகி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கண்ணீர் மல்க எடுத்துக் கூறியிருக்கிறார். மாணவரின் வேதனையை கனிவுடன் உள்வாங்கிக் கொண்ட கல்லூரியின் முதல்வர், இணைய வழி விண்ணப்பத்தில் உள்ள குறைகளை நீக்குவதற்கோ, களைவதற்கோ, தீர்வு காண்பதற்கோ தங்களுக்கு அதிகாரம் இல்லை. நீங்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகளையோ அல்லது கல்லூரி கல்வி இயக்குனரகத்தையோ நாடி நியாயம் பெற்றிடுங்கள் என்று அறிவுரை கூறி வழியனுப்பி வைத்துள்ளார்.
உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் தவறால், இடஒதுக்கீடு பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளை முழுமையாக ஆன் லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடாததால், வடுகர் சாதியைப் போல, பிற சாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகள் எழுந்துள்ளன.
திமுக நிர்வாகிகளிடம் பாய்ச்சல்…
இணைய வழியான விண்ணப்பத்தில் ஏற்பட்ட பிழையை சுட்டிக்காட்டி, நிவாரணம் பெறுவதற்காக கடந்த வாரத்தில் தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை நேரில் சந்தித்து முறையிட மாணவர்கள் சிலர் சென்றுள்ளனர்.
ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினை உணவு இடைவேளையில் வழியனுப்பி வைக்கும் பணியில் ஆர்வமாக இருந்த அமைச்சர் க.பொன்முடி, மாணவர்களைபுறக்கணித்துவிட்டு சென்றுள்ளார்.
சிறிதுநேரத்திற்குப் பிறகு தனது அறைக்கு திரும்பிய அமைச்சர் க.பொன்முடியை, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த ஒன்றிரண்டு திமுக முன்னோடிகள் சந்தித்தனர். அவர்களிடம் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கூட கேட்காமல், ஊரில் கட்சி வேலை பார்க்காமல், தலைமைச் செயலகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறீர்களா? என்று மரியாதைக் குறைவாக அமைச்சர் க.பொன்முடி பேச, பதிலடியாக அந்த முன்னோடிகளும், ஆட்சி அதிகாரத்தை வைத்து காசு,பணம் பார்ப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை. உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்காகதான் தலைமைச் செயலகத்திற்கு வந்திருக்கிறோம் என்று அவர்களும் பதிலுக்கு எகிற, அமைச்சர் அறையில் இருந்த மாணவர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
அதனைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட அமைச்சர் க.பொன்முடி, திமுக முன்னோடிகளை சமாதானப்படுத்தும் வகையில் சில வார்த்தைகளை கூறி, அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறி வழியனுப்பி வைத்துள்ளார்.
அதிகார திமிர் எப்போது குறையும்….
அடுத்ததாக, பலமணிநேரம் காத்திருந்த மாணவர்களிடம் என்ன விஷயம் என்று கூட கேட்காமல், கோரிக்கை மனுக்களை பி.ஏ.விடம் (தனி உதவியாளர்) கொடுத்து விடுங்கள் என்று அமைச்சர் க.பொன்முடி கூறிவிட்டு, அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாகி இருக்கிறார்.
அமைச்சர் நேரடியாக தலையிட்டு தனிக்கவனம் செலுத்தினால் மட்டுமே உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என்ற நிலையிலும் கூட, தனது உதவியாளர்களிடம் குறைகளை சொல்லுங்கள் என்று கூறி அமைச்சர் விரட்டியதால், மாணவர்கள் மனம் நொந்து போய்விட்டனர்.
அமைச்சர் க.பொன்முடியின் பண்பாடற்ற செயலால் மன வருத்தத்துடன் வெளியேறிய திமுக முன்னோடிகள், பத்தாண்டு காலத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், விசுவாசமிக்க திமுக நிர்வாகிகளிடம் கூட எரிந்து விழுவது எந்த வகையில் நியாயம்? அதிகார திமிர் எப்போதுதான் அடங்கும் என்றே தெரியவில்லை? என்று முணுமுணுத்தவாறே, உயர்கல்வித்துறை அமைச்சரின் அலுவலக அறையில் இருந்து வெளியேறினர்.
மாணவர்கள் விரக்தி….
திமுக முன்னோடிகளைப் போல, அமைச்சரின் புறக்கணிப்பால் மனம் நொந்து போன மாணவர்கள், தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 5 ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சாதி ரீதியாக விண்ணப்பத்ததில் ஏற்பட்டுள்ள குளறுபடியையும் போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்தால்தான், அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளபடி நேர்மையான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், தனது துறையில் ஏற்பட்டுள்ள குறைகளை காது கொடுத்து கேட்க கூட பொறுமையில்லாதவராக அமைச்சர் க.பொன்முடி செயல்பட்டால், பாதிப்பிற்குள்ளான மாணவர்கள் யாரிடம் முறையிட்டு நியாயத்தை பெற முடியும் என்று வேதனையோடு தெரிவித்தார்.
முதல்வரின் லட்சியத் திட்டத்திற்கு ஆபத்து…
முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தலைமையிலான திமுக ஆட்சியில் பள்ளி மற்றும் உயர்கல்விக்கு அதீத முக்கியத்தும் கொடுத்து வருகிறார். “இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், கல்லூரிக் கனவு, நான் முதல்வன்” என்று அற்புதத் திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர் சமுதாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறார். அவரின் லட்சியத் திட்டங்கள் நிறைவேற, கல்வித்துறைக்கு பொறுப்பு ஏற்றுள்ள அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் மிகுந்த பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய காலம் இது. ஆனால், முதல்வரின் லட்சியத் திட்டங்களுக்கு பெரும் கேடு விளைவிக்கும் வகையில் அமைச்சர் க.பொன்முடி அலட்சியம் காட்டி வருவதைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையளிப்பதாக கல்வியாளர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கலங்கும் கண்களோடு நின்றிருந்த மாணவர்களை பார்த்தும் அமைச்சர் க.பொன்முடிக்கு மனம் இரங்காமல் போனது ஏனோ?