Thu. Apr 17th, 2025 11:59:45 PM

பன்னாட்டு அளவிலான 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் முதல்முறையாக, அதுவும் தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு பிரம்மாண்டமாக செய்துள்ளது.

187 நாடுகளில் இருந்து 343 சர்வதேச அணிகள் கலந்து கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனையொட்டி நடைபெறும் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.

அன்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்கிறார்.

இதற்கான அழைப்பிதழை நேரில் வழங்கவும், முறைப்படி விழாவிற்கு அழைக்கவும் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் டெல்லி சென்றார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பிரதமரை சந்தித்து துவக்க விழா குறித்து எடுத்துரைத்தனர்.

விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் வழங்கினார். போட்டியின் நினைவுச் சின்னமாக தம்பி சிலையை அமைச்சர் மெய்யநாதன், பிரதமரிடம் வழங்கினார்.