Thu. Nov 21st, 2024

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொருளாளர் நியமனம் ஏற்பு…

கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொருளாளர் பதவியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

இதனையடுத்து, அதிமுகவின் வங்கிக் கணக்குகளை புதிய பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன்தான் இனிமேல் மேற்கொள்வார் என்று எடப்பாடி பழனிசாமி, அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது. தான்தான் பொருளாளர் பதவியில் நீடித்து வருவதாகவும், அதிமுக வங்கிக் கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசன் பணபரிவர்த்தனையில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வமும் வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இரண்டு தரப்பினரின் கடிதங்களையும் ஆய்வு செய்த வங்கி நிர்வாகம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் சமர்ப்பிக்க ஆவணங்கள் வங்கி நடைமுறைகளுக்கு ஏற்றவகையில் இருப்பதாக கூறி, திண்டுக்கல் சீனிவாசன் வங்கிகளில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.