Sat. Nov 23rd, 2024

அதிமுக அலுவலகத்தில் வரலாறு காணாத அளவுக்கு வன்முறையில் ஈடுபட்ட ஓபிஎஸ்ஸுக்கும், அதற்கு துணை போன திமுக அரசுக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்…

வன்முறை

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை பூந்தமல்லி அருகே வானகரம் திருமண மண்டத்தில் துவங்கிய அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின்தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அங்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டிருந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. கற்கள், கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது. அதேநேரத்தில், அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், அலுவலகத்தின் கதவுகள் பூட்டு போட்டு மூடியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், அவருடன் வந்தவர்கள், கம்பு மற்றும் இரும்பு குழாய்களால் நுழைவு கதவை அடித்து தகர்த்தனர். இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அங்குள்ள பொதுச் செயலாளர் அறைக்கு சென்று அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தீ வைப்பு…

நுழைவு வாயிலின் முன்பு திரண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமியின் பதாகைகளை தீயிட்டு கொளுத்தியதுடன் கல்வீசி தாக்குதல் உள்ளிட்ட வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டவாறே, இபிஎஸ் ஒழிக, ஓபிஎஸ் வாழ்க என முழக்கமிட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, காவல்துறையினர் விரைந்து வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

ஓபிஎஸ் நீக்கம் – சீல் வைப்பு..

ஓபிஎஸ் தரப்பினர் தாக்குதலில் ரத்த காயமடைந்த அதிமுக மாவட்டச் செயலாளர் விருகை ரவி, வேளச்சேரி அசோக் உள்ளிட்டோர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்திய வருவாய் துறையினர், ஓபிஎஸ் உள்ளிட்டோரை வெளியேற்றிவிட்டு அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

மறைந்த முதல்வர்களுக்கு மரியாதை..
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து முன்னாள் அமைச்சர்கள் படை சூழ புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மருத்துவச் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

நலம் விசாரிப்பு – ஆறுதல்
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசிய எடப்பாடி பழனிசாமி. திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு கொடூர செயல்களை அரங்கேற்றி அதிமுகவுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இபிஎஸ் ஆவேசம்..


இபிஎஸ் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி, 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவுக்கே இந்த நிலை என்றால், தமிழ்நாட்டில் சாதாரண மக்களின் நிலை எப்படி பாதுகாக்கப்படும் என்று எண்ணி பார்க்க வேண்டும். அதிமுகவை அழிக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு துரோகிகளோடு இன்றைய ஆளும்கட்சியின் முதல் அமைச்சர் மு.க.ஸ்நிலையடாலின் இணைந்து போட்ட திட்டம்தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை என்பது இன்றைய தினம் நிரூபணமாகியிருக்கிறது. இந்த வன்முறை செயலை வண்மையாக கண்டிக்கிறோம். ஒரு நாட்டின் முதல் அமைச்சர், காவல்துறையை தனது கையில் வைத்திருப்பவர்,

கொடுமையான நிகழ்வு…

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி பாதுகாப்பு கேட்டு புகார் செய்தவுடனேயே அதற்கு தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் சிறப்பான முதல் அமைச்சர் என்று பாராட்டி இருக்கலாம். அதற்கு மாறாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அலுவலகத்திற்குள் சமூக விரோதிகள் ஊடுருவார்கள் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் அதிமுக முன்னணி நிர்வாகிகள் காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தார்கள். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல, தலைமைக் கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கொடுமையான நிகழ்வு தமிழ் மண்ணில்தான் இன்றைக்கு அரங்கேறியிருக்கிறது.

சுயநலவாதி…

இதற்கான முழு பொறுப்பையும் ஆளும்கட்சியான திமுகவும் துரோகியமாக மாறியிருக்கிற ஓபிஎஸ்ஸும் தான் ஏற்க வேண்டும். ஓபிஎஸ் எந்த காலத்திலும் மக்களுக்கு நன்மை செய்தது கிடையாது. தேனி மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்தது கிடையாது. ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி. தனக்கு கிடைக்காத பதவி எவருக்கும் கிடைக்காது என்று உள்ளம் படைத்த ஒருவர்தான் ஓபிஎஸ். தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை எல்லாம் அள்ளி சென்றிருக்கிறார்கள். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ரவுடிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து வாகனத்திற்கு அள்ளி சென்றுள்ளது. அதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது எவ்வளவு கேவலமான செயல். ஏதோ இவர்கள் தான் நிலையாக ஆட்சியில் இருப்பதைப் போல எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக காலம் மாறும். மேலே எறிகிற கல் கீழே விழுந்துதான் ஆக வேண்டும். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். காவல்துறை அலுவலர்கள் அதிமுக தொண்டர்களை தாக்கியிருக்கிறார்கள். அதிமுக வழங்கிய புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அலுவலர்கள் மீது நீதிமன்றம் மூலம் சரியாக பாடம் புகட்டுவோம்.

அதிமுக வீறுநடைபோடும்..


நீதிமன்றத்தின் மூலம் நியாயத்தை பெற்று அதிமுக அலுவலகம் மீண்டும் திறக்கப்படும். புதுப்பொலிவுடன் அதிமுக வீறு நடைபெறும். அதிமுக வலிமையுடன் எங்களுடன் இருக்கிறது. திமுகவுக்கு வக்காலத்து வாங்கியதால்தான் ஓபிஎஸ்ஸுக்கு இன்றைய நிலை ஏற்பட்டிருக்கிறது. 3 மீன்பாடி வண்டியில் கற்களை கொண்டு வந்து தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் ஓபிஎஸ்ஸால் அழைத்து வரப்பட்ட ரவுடிகள்தான். எதற்காக அதிமுக அலுவலகத்தில் இருந்து அவர்கள் ஆவணங்களை தூக்கிச் சென்றனர். அதிமுக என்ன அவர்களின் சொந்த சொத்தா, கார்ப்பரேட் கம்பெனியா? அதிமுகவும் தலைமைக் கழகவும் தொண்டர்களின் சொத்து. பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் கொடுத்த சொத்து. இதற்கு முன்பு எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களைப் போல ரவுடிகளை அழைத்துச் சென்று ஆவணங்களை தூக்கிச் சென்றார்களா.. ஓபிஎஸ் எல்லாம் ஒரு தலைவரா.? கேவலமாக இருக்கிறது.

இவ்வாறு இபிஎஸ் தெரிவித்தார்.

11 thoughts on “ரவுடிகளை வைத்து ஆவணங்களை திருடிச் சென்ற ஓபிஎஸ் தலைவரா? கேவலமாக இருக்கிறது என இபிஎஸ் ஆவேசம்….”

Comments are closed.