Sat. Nov 23rd, 2024

பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருக்கு இணையாக போற்றி இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய அணிந்துரை, தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்த பலர், இளையராஜா போன்ற பிரபலங்கள் மூலம் தமிழகத்தில் பாஜக அழுத்தமாக கால் ஊன்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இளையராஜா, அவரது சகோதரர் கங்கை அமரன் உள்ளிட்டோர் பிரதமர் மோடி மீது காட்டி வரும் அதீத பக்திக்கு கைமேல் பலனான, இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து மத்திய பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநிலங்களை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டவுடனேயே இளையராஜாவுக்கு உடனடியாக வாழ்த்துச் செய்தி வெளியிட்ட பிரதமர் மோடி, அவரின் இசையுலக சாதனைகளை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அடுத்தடுத்த நிமிடங்களிலேயே திரையுலக பிரபலங்களும், பாஜக தலைவர்கள் மற்றும் இந்துந்துவா ஆதரவாளர்களும் இளையராஜாவுக்கு பாராட்டுகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் பதவிக்கே இளையராஜா தகுதியுடையவர். அவருக்கு நாட்டின் முதல் குடிமகன் என்ற கௌரவத்தையே வழங்கியிருக்கலாம். அதைவிட மதிப்பு குறைவான, பத்தோடு ஒன்றாக இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அவரை வாழ்த்துவோம் என்ற பொருளில் கமல்ஹாசன் மறைமுகமாக ஒன்றிய பாஜக அரசை கடுமையாக கிண்டலடித்துள்ளார் என்கிறார்கள் மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள்.

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துகளுக்கு இணையாக வசவுகளும் அதகளம் செய்கிறது..