அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் , பாலாஜி சீனிவாசனும் ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமாரும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர் உச்சநீதிமன்ற அமர்வு பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம் இதோ.:
ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தனி நீதிபதி தெளிவாக கூறியுள்ளார். பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்ட முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிட விரும்பவில்லை. அதிமுக கட்சி விவகாரங்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்தது ஏன்? நட்போ சண்டையோ உங்களுக்குள் நீங்களே பார்த்து கொள்ளுங்கள். உங்கள் கட்சி தொடர்பான எல்லா பிரச்னைகளை பொது குழுவில் விவாதியுங்கள், நீதிமன்றத்தில் விவாதிக்காதீர்கள். சென்னை உயர்நீதிமன்ற அதிகாரத்தை நாங்கள் எடுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது?
இந்த விவகாரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும். 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் எப்படி தலையிட முடியும்? அதிமுக.,வின் பொதுக்குழுவிற்கு எங்களால் தடை விதிக்க முடியாது. அக்கட்சியின் உள்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தை நாடலாம். பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்ற அமர்வு தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.