Sat. Nov 23rd, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல்வேறு முறைகேடுகள் செய்ததால் நமது அம்மா நாளிதழில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மருது அழகுராஜ், தற்போது ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து கொண்டு கூலிக்கு மாரடிக்கிற வேலையைதான் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார். கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஏதாவது தியாகம் செய்து இருக்கிறாரா, இல்லை சிறைக்குச் சென்று இருக்கிறாரா, இல்லை ஆரம்ப காலத்தில் அதிமுகவில் இணைத்துக் கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீதும் அதேபோன்று புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா மீதும் விசுவாசம் கொண்டவராக என்றால் சிறிதளவும் இல்லை. அவருடைய ஒரே நோக்கம் கூலிக்கு மாரடிக்கிற அந்த பணியைதான் கடந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் செய்கின்ற குணம் படைத்தவர்தான்.
அவரை சர்வகட்சியைச் சேர்ந்தவர் என்று கூட சொல்லலாம். அவர் போகாத கட்சியில்லை.சமத்துவ மக்கள் கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தி துவக்கிய கட்சியில் பிரதான அங்கம் வகித்தவர், தேமுதிகவில் இருந்தவர், அதன் பிறகு நமது எம்ஜிஆர் நாளிதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர். அங்கேயும் நிதி கையாடல், முறைகேடுகளில் ஈடுபட்டவர். அதன் காரணமாக அங்கு இருந்தும் விலக்கி வைக்கப்பட்டவர். நமது அம்மாவில் பொறுப்பாசிரியராக சேருகிறார். இங்கு பணியில் சேர்ந்த பிறகாவது முறைகேடு எனும் சுருட்டிக் கொண்டு அமைதியாக இல்லாமல், நமது அம்மாவுக்கு வந்த விளம்பரத்திற்குரிய பணத்தில் முறைகேடு செய்து உள்ளார். அதன் காரணமாக விலக்கி வைக்கப்பட்டவர். அப்படிபட்டவர் களங்கம் கற்பிக்கிறார். நீதிமன்ற உத்தரவின் பேரில் முறையில் அடையாள அட்டையோடுதான் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அப்படி வந்தவர்களில் 98 சதவீதம் பேர் ஒற்றைத் தலைமை வேண்டும். அதுவும் எடப்பாடியார் தலைமை வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஒட்டுமொத்த பொதுக்குழுவும் அதிமுகவின் பை லா படியும் சட்டப்படியும்தான் நடந்தது. ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்துகிற வகையில் அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்திருக்கிறார் மருது அழகுராஜ். இந்த அவதூறு காரணமாக ஒட்டுமொத்த அதிமுக உறுப்பினர்களும் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.
கொடநாடு நிகழ்வின் போது எடப்பாடியார் முதல்வராக பதவியேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகியிருந்தது. அப்போதும் இந்த சம்பவத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியவர் எடப்பாடியார். ஆனால், அந்த குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தவர் திமுகவைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோதானே. குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்தவர்களே திமுக வழக்கறிஞர்கள்தானே. இதை ஏன் மருது அழகுராஜ் குறிப்பிடவில்லை.
இவ்வளவு குற்றச்சாட்டுகளை சொன்ன மருது அழகுராஜ் ஓ.பி.எஸ்.ஸின் கட்சி விரோத நடவடிக்கைகளை மனசாட்சிபடி சொன்னாரா..தர்மயுத்தம் நடத்தியவர் யார், விகே சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எந்தவகையிலும் அதிமுகவில் இருக்க கூடாது. செல்வி ஜெயலலிதாவின் மரணத்திற்கு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியவர்தானே ஓபிஎஸ். ஆனால், டிடிவி தினகரனை மறைமுக சந்தித்தாரா, அது குறித்து மருது ஏன் சொல்லவில்லை. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவுக்கு நல்ல சான்றிதழ் வழங்கியதுடன் தனிப்பட்ட முறையில் சசிகலாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியவர்தானே ஓபிஎஸ்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி முதல் அமைச்சரை பார்த்த போது அர்ப்பணிப்பு உணர்வோடு முதல் அமைச்சர் செயல்படுகிறார் என்ற கருத்தை முன்மொழிந்தாரே, அந்த பேச்சும் அவரின் நடவடிக்கையும் அதிமுகவினரிடம் எந்தளவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மருது அழகுராஜ் சொல்லவில்லையே ஏன்.
நியூஸ் 18 தொலைக்காட்சியில் கொடநாடு கொலை தொடர்பாக ஒளிப்பரப்பான செய்தியில் சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவனை விசாரிக்க வேண்டும் என்று தகவல் வெளியிட்டதை அடுத்து, அந்த தொலைக்காட்சி மீது இளங்கோவன் மான நஷ்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டிருக்கிறார்.
ஓபிஎஸ் தனிமரமாக இருக்கிறார். திமுகவிற்காக வேலை பார்க்கும் ஓபிஎஸ்ஸுடன் மருது அழகுராஜ் சேர்ந்து கொண்டுவிட்டார்.
நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தாலும் அதிமுக பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. நியாயம், தர்மம் எங்கள் பக்கம் இருக்கிறது. அதனால் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம்.
ஆட்சிக்கு வந்த திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதா ஆனால் அதற்கு மாறாக பொய்வழக்குகள் போட்டு அதிமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்ற காரியத்தைதான் ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்.
டிடிவி தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் தமிழக மக்களால் ஒதுக்கப்பட்ட சக்திகள். ஆள் ஆளுக்கு வேன் எடுத்துக் கொண்டு டூர் போகிறார்கள். அதனால் என்ன பயன், நேரம் வீண், பணம் வீண், சக்தி வீண், டீசல் வீண். டீசல் விக்கிற விலையில இந்த டூர் எல்லாம் தேவையா..அதிமுகவின் ஒரு நிலை என்னவென்றால் இன்றைக்கும் சரி என்னைக்கும் சரி ஒற்றை தலைமை முதலாவது நிலை. இரண்டாவது நிலை என்னவென்றால் சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்பதுதான்.
அதிகாரமிக்கதுதான் பொதுக்குழு. அதன் தீர்ப்பே இறுதியானது. பொதுக்குழுவில் யாருக்கு பலம் அதிகம் இருக்கிறது என்பதை நிரூபிக்கட்டும். 5 சதவீதம் கூட இல்லாமல் வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எள்ளி நகையாடக் கூடியதுதான். 95 சதவீத தொண்டர்களின் ஆதரவு எடப்பாடியார் பக்கம்தான் உள்ளது. அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஊர் கூடி தேர் இழுப்பதை போன்ற எண்ணம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.