Sat. Nov 23rd, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கிண்டலும் கேலியாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

மதுரை மாநகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணையர், ஏற்கெனவ இருந்த ஆணையரை போல் மெத்தனமாக இல்லாமல் வேகமாக செயல்பட வேண்டும். மாநகராட்சியின் வருவாய் பற்றாக்குறையை விரைந்து வசூல் செய்யவும், கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் எந்தவொரு மாநகராட்சியிலும் இல்லாத அதிசயமாக மதுரை மாநகராட்சி மேயருக்கு உதவியாளர் என்ற பெயரில் ஒரு “சூப்பர் மேயர்” ஒருவரை நியமித்து உள்ளார்கள். நகராட்சி நிர்வாகச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கை இதுவாகும். இந்த நியமனத்திற்கு சட்ட ரீதியாக இடமே கிடையாது. மேயருக்கு உதவி செய்வதற்காக ஆணையர், அதிகாரிகள் இருக்கும் போது ஒரு தனி நபரை நியமித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

பாதாள சாக்கடை பணி விபத்தின் போது அனுபவம் இல்லாத பொக்லைன் இயந்திர ஓட்டுனரை ஈடுபடுத்தியதால் தான் ஊழியர் தலை துண்டாகும் பரிதாப நிலை ஏற்பட்டது. கழிவு நீர் மேலாண்மைக்காக அதிமுக ஆட்சியில் ரூ.54 லட்சம் மதிப்பில் வாங்கிக் கொடுக்கப்பட்ட நவீன இயந்திரத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை.

முதல்வர் மீது ஐ.பெரியாசமிக்கு கோபம்.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, அமைச்சர் ஐ.பெரியசாமி செல்வாக்குமிக்க துறை கிடைக்காத கோபத்தில் முதலவர் மு.க.ஸ்டாலினை சிக்கலில் மாட்டி விடுகிறார். நீட் விலக்கு, எழுவர் விடுதலை, கல்விக்கடன் ரத்து, டீசல் மானியம் குறைப்பு உள்ளிட்ட எண்ணற்ற வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “ மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளதால் திமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் தொடர்பான விபரங்கள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கிடைக்கலாம். அதன் அடிப்படையில் திமுக அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேரின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை சொல்லி வருகிறார். தற்போதைய திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது என்பதை அதிமுக பல மாதங்களுக்கு முன்பிருந்தே சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக தான் எதிர்கட்சி. திமுக அரசின் குற்றங்களை அதிமுக தான் அதிகமாக சுட்டிக் காட்டிக்கொண்டு இருக்கிறது. சட்டப்பேரவையில் அதிமுக பேசும் பல பேச்சுக்கள் வெளியே வருவதில்லை. திரைப்படத்திற்கு ஒரு சென்சார் போர்டு இருப்பது போல சட்டப்பேரவைக்கும் ஒரு சென்சார் போர்டு உள்ளது. அமைப்புச் செயலாளர் பொன்னையன் அதிமுக வளர்ச்சிக்காக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது வெளியே வந்து விட்டது. பொன்னையன் பார்வையில் பாஜகவின் செயல்பாடு அப்படி தெரிந்திருக்கலாம். கட்சி எழுச்சிக்காகவே உறுப்பினர்கள் மத்தியில் பொன்னையன் அப்படி பேசினார்.

பாஜக கட்சியை வளர்ப்பதற்காக அண்ணாமலை அரசியல் செய்கிறார். எங்கள் கூட்டணியில் இருக்கிற கட்சி. நான் சொல்ல கூடாது. முருகன் ஜி வந்தார். வேலைப் பிடித்தார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. தமிழிசை வந்தார். சிறப்பாக பணியாற்றினார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அதுமாதிரி நமக்கும் ஒரு பதவி கிடைக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்போடு அவர் (அண்ணாமலை) இருக்கலாம். எங்களை விமர்சனம் செய்யும் போது நாங்கள் விமர்சனம் செய்வோம். வி.பி.துரைசாமி எல்லாம் எங்களை விமர்சனம் செய்வது நியாயமா…அவர் பாஜகவுக்கு எதற்காக போனார் என்று தெரியாதா. வி.பி.துரைசாமி பேசும் போது நாங்கள் பேசக் கூடாதா..நான் ஒரு மாவட்டச் செயலாளர். எங்கள் மீது ஒரு துரும்பு விழுந்தால் நாங்கள் தூணை கொண்டு எறிவோம். அதிமுக மீது எவன் ஒருவன் துரும்பை வீசினாலும் தூணை கொண்டு வீசுவோம்.

கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே அல்ல. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்; அதிமுகவுக்கு கூடுவது கொள்கைக் கூட்டம்.

அடுத்து வருகிற தேர்தலில் தனித்த நிற்க அதிமுக தயாராக உள்ளது. யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்ல ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தயாராக இருக்கிறார்கள். நாளைக்கே தேர்தல் என்று வைத்துக் கொள்ளலாம்.எல்லா கட்சியும் தனித்தே போட்டியிடுவோம். அதற்கு அதிமுக தயார், மற்ற கட்சியினர் தயாரா? இது என்னுடைய சொந்த கருத்து அல்ல, அதிமுகவின் கருத்து. அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு வி.பி.துரைசாமி வந்துவிட்டாரா? எங்கள் மேல் யாரும் துரும்பை வீசினால், பதிலுக்கு நாங்கள் தூணை கொண்டு எறிவோம்.
இவ்வாறு செல்லூர் கே.ராஜு ஆவேசமாகவும் பதிலளித்தார்.