சென்னை திருவான்மியூரில் இன்று காலை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா இல்லத் திருமண விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மணமகனிடம் மங்கல நாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் எப்படிபட்ட சூழ்நிலை உருவாகியிருக்கிறது, சாதனைகள் மட்டுமல்ல ஏற்கெனவே நடைபெற்று கொண்டிருந்த சோதனைகளுக்கு முடிவு கட்டியிருக்கிறோம். அதேபோல சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு காலம்தான் முடிந்திருக்கிறது. ஆனால், இந்த ஓராண்டு காலத்தில் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ,அதைவிட பலமடங்கு சாதனைகளை நாம் இன்றைக்கு சாதித்து காட்டியிருக்கிறோம்.
இல்லம் தேடி கல்வியாக இருந்தாலும், மக்களை தேடி மருத்துவமாக இருந்தாலும், நான் முதல்வன் என்கிற திட்டமாக இருந்தாலும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்கிற அந்த திட்டமாக இருந்தாலும் சமத்துவபுரங்களாக இருந்தாலும் உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் என்கிற திட்டமாக இருந்தாலும் ஏறக்குறைய 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு என்கிற அந்த பணியாக இருந்தாலும் தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகள் அளித்தோமோ அந்த வாக்குறுதிகளை மட்டுமல்ல சொல்லாத பல வாக்குறுதிகளையும் செய்து முடித்திருக்கிற ஆட்சிதான் நம்முடைய ஆட்சி.
சட்டமன்றமாக இருந்தாலும் மக்கள் மன்றமாக இருந்தாலும் அல்லது அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிற கூட்டமாக இருந்தாலும் ஆய்வுகள் நடத்துகிற கூட்டங்களாக இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டிருப்பது இது என்னுடைய ஆட்சி என்று சொல்ல மாட்டேன் நம்முடைய ஆட்சி என்றுதான் சொல்வேன் என்ற அடிப்படையில் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது பத்திரிகையாளர்களிடம் பேசுகிற நேரத்தில் கூட நான் குறிப்பிட்டு சொன்னது வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களும் நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக நம்முடைய ஆட்சியாக இருக்கும் என்று சொன்னேன்.
வாக்களித்தவர்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய வகையிலும் வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படுகிற அளவுக்கு நாம் ஆட்சியை நடத்துவோம் என்று உறுதியாக சொன்னேன். அதைதான் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆகவே தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னென்ன உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் புத்தகமாக வெளியிடுவது வழக்கம். ஆனால் இப்போது நாம் தேர்தல் அறிக்கை வெளியிட்டது மட்டுமல்ல, இந்த ஓராண்டு காலத்தில் என்னென்ன திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம் என்பதையும் புத்தகமாக வெளியிட்டு மக்களிடையே எடுத்துச் சொல்லக் கூடிய அளவிற்கு பல காரியங்களை நாம் செய்து முடித்திருக்கிறோம்.
செய்திருக்கிற சாதனைகளில் அளப்பரிய சாதனை என்னவென்றால் மகளிருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பேருந்து கட்டண சலுகை. இந்த திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலின பெண்கள் அதிகளவில் பயன்பெறுகிற வகையில் இந்த திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்கிற பெண்களின் அன்றாட செலவுகளில் பெரும்சுமையை நாம் குறைத்திருக்கிறோம். புள்ளி விவரத்தோடு சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு மகளிருக்கும் சராசரியாக 600 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ரூபாய் வரை மிச்சமாகிற வகையில் ஒரு சாதனையை நாம் செய்து முடித்திருக்கிறோம். ஆகவே இப்படி மிச்சமாகும் பணத்தை சேமித்து வைக்கிற அளவுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக பெண்கள் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்கள். நாங்கள் போட்ட கையெழுத்தின் காரணமாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றியிருக்க கூடிய ஆட்சிதான் கழக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.