திமுக என்றாலே அராஜகம்தான் என்று கூறும் போது எம்ஜிஆர் திரைப்பட பாடலான மாறாதையா மாறாது திமுகவின் குணம் மாறாது என்று உதாரணம் காட்டி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் செல்லூர் ராஜு.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
மதுரையில் 20 லட்சம் பேர் இருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என பலதரப்பு மக்களுக்கு பொழுதுப்போக்கு அம்சம் எதுவும் மதுரையில் இல்லை. எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மதுரையில் பொழுதுப்போக்கு அம்சம் உருவாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நான் கேள்வி எழுப்பினேன். அதனை ஏற்று சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆவன செய்வதாக பதிலளித்தார். இந்தநேரத்தில் தொழில்துறை அமைச்சர், என்னைப் பற்றி பேசினார். அவரின் பேச்சை ஒரு நகைச்சுவையாகதான் நான் எடுத்துக் கொண்டேன். இதுபோன்ற விஷயங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
மதுரை மாநகராட்சி மன்றக் கூட்டத்திலேயே பத்திரிகையாளர்களை தாக்குகிற அளவுக்கு குண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்றால், எப்படி எடுத்துக் கொள்வது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும் குண்டர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார். அப்படி முதல்வர் சொல்லி ஒருநாள் கூட ஆகவில்லை. ஆளும்கட்சி குடும்பத்தைச் சேர்ந்த சன் டிவி நிருபரையே அடித்திருக்கிறார்கள் என்றால், எப்படிபட்ட வன்முறைக் கும்பல் மதுரையில் இருக்கிறது என்பதை பொதுமக்கள்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே திமுக ஆட்சியில் இருந்த போதும் தினகரன் பத்திரிகை எரிக்கப்பட்டு மூன்று அப்பாவி ஊழியர்கள் பலியாகினர். இந்தநேரத்தில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்வு எனக்கு மிகுந்த மனவேதனையை தந்தது. இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்பு நடைபெற்றது இல்லை.
மேயர் அறையில் குண்டர்கள் இருந்திருக்கிறார்கள். மேயருக்கும் குண்டர்களுக்கும் என்ன தொடர்பு? மதுரை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவதே இல்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு எந்த மரபுபடி இருக்கைகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே போல மதுரை மாநகராட்சியிலும் 15 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை மூன்று மன்றக் கூட்டங்கள் நடந்து முடிந்த போதும் அதிமுகவுக்கு மரபுபடி இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. இப்படி பாரபட்சம் காட்டக் கூடாது என்று பலதுறை மாநகராட்சி ஆணையரிடம் சொல்லியபோதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதுபோல, மதுரை மாநகராட்சி வளாகத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு என்று தனியாக அறை ஒதுக்க வேண்டும். முதல் மன்றக் கூட்டத்தின் போதே அறை ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், இன்று வரை அதிமுகவுக்கு என அறை ஒதுக்கவில்லை. இதுகுறித்தும் மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டும் தீர்வு காணப்படவில்லை.
மன்ற அரங்கில் ஜனநாயக முறைபடி இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று மதுரை நகரின் முதல் குடிமகனான மேயரிடம் நியாயம் கேட்க அதிமுக உறுப்பினர்கள் சென்ற போது, செய்தி சேகரிக்கச் சென்று நிருபர்களை குண்டர்கள் தாக்கியதும், ஒளிப்பதிவு கருவிகளை உடைத்ததும் எந்த விதத்தில் நியாயம்? இது வரலாற்றுப் பிழை. குண்டர்களின் அநாகரிக செயலை நான் மட்டும் கண்டிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டித்துள்ளது.
மாறாதையா…மாறாது மனமும் குணமும் மாறாது என்று தலைவர் திரைப்படத்தில் வரும் பாடலைப் போல, திமுக என்றாலே அராஜகம் என்பதைப் போல திமுகவின் குணத்தை மாற்ற முடியாது. மாநகராட்சி மேயரைத் தேடி அனைத்து தரப்பு மக்களும் வருவார்கள். அப்படிபட்ட இடத்தில் ரவுடிகளுக்கு என்ன வேலை?