Mon. Nov 25th, 2024

ஆம்பூரில் மே 13 முதல் 15 ஆம் தேதி வரை 3 நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையொட்டி, அந்த நிகழ்வை திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது, மாநிலத்தை கடந்து நாடு முழுவதும் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது தலைமையிலான திமுக அரசும் பலவீனமானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக, இந்து மத எதிர்ப்பாளர்கள் ஆவேசமாக விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒருபடி மேலே சென்று, தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி ஆணையமும், பிரியாணி திருவிழா ஒத்திவைப்புக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், மாட்டு இறைச்சி பிரியாணிக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மக்களிடையே பாகுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக தீண்டாமை கொடுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இஸ்லாமியர் உள்ளிட்ட 2 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் இதுபோன்ற பாகுபாடு காட்டும் செயல்களில் ஈடுபட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிப்பதுடன், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தீண்டாமை உணர்வை வெளிப்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தளவிற்கு ஆம்பூர் பிரியாணி திருவிழா சர்ச்சையை எதிர்நோக்கியுள்ளதற்கு அடிப்படை காரணமே திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல், சிறிய அளவிலான குழுவினரின் எதிர்ப்புக்கு பயந்து பிரியாணி விழாவை ஒத்திவைத்ததுதான், திராவிடமாடல் ஆட்சியை முன்னெடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் விதமான அமைந்துவிட்டது என்கிறார்கள் எந்தவித அரசியல் சார்பும் அற்ற உணவுப் பிரியர்கள்.

மேலும், பட்டியல் சமூக மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக தீண்டாமை கடைப்பிடித்தற்காக விசாரனை மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.

பொதுவாக பிரியாணி என்றாலே, அசைவ உணவைத்தான் பெரும்பாலும் நினைவுப்படுத்தும். அதுவும் வழக்கமான கோழி, ஆட்டு இறைச்சியை விட மாட்டு கறியில் தயாரிக்கப்படும் பிரியாணியைதான் பெரும்பாலான அசைவ உணவுப்பிரியர்கள் தேடிச் சென்று ஆர்வமாக உட்கொள்வார்கள். சென்னைப் போன்ற பெருநகரங்களில் கூட இன்று வீதிக்கு வீதி மாட்டுப் பிரியாணி மற்றும் உணவு வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதையும் அந்த இடங்களில் நீண்ட வரிசையில் நின்று அசைவ உணவுப்பிரியர்கள் வாங்கி உட்கொள்வதையும் கண்கூடாக பார்க்கலாம்.

விளிம்பு நிலை மக்களின் உணவு வகைகளில் முக்கிய இடத்தை மாட்டு இறைச்சி பிடித்திருந்தாலும் கூட , இன்றைக்கு நகர மக்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்வதிலும் மாட்டு இறைச்சி முக்கிய பங்கு வகித்து வருகிறது. மலிவான விலையில் கிடைக்கிறது என்பதை விட மாட்டு வாலில் இருந்து தயாரிக்கப்படும் சூப்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதும், கொரோனா தொற்று காலத்தில் பலருக்கு கிருமிகளை முழுமையாக எதிர்கொள்ள, மாட்டு வால் சூப் தான் அருமருந்தாக இருந்ததாகவும், பலர் வெளிப்படையாக தெரிவித்ததை சமூக ஊடகங்களில் வாசிக்க முடிந்தது.

இதைவிட முக்கியமாக, அசைவ உணவுப் பிரியர்களை ஈர்க்கும் விதமாக நடத்தப்படும் ஒரு திருவிழாவுக்கும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பும் உணவுப் பிரியர்கள், இதுபோன்ற எதிர்ப்புகள் வடமாநிலங்களில் இந்துத்துவா குழுக்களால் எழுப்பப்பட்டு, அவை வன்முறை கலாச்சாரமாக மாறி வரும் இன்றைய நிலையில், தமிழகத்திலும் இதுபோன்ற குரல்கள் செல்வாக்குப் பெறுவதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது என்பதுதான் முக்கியமான கேள்விகயாக உள்ளது என்கிறார்கள்.

ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக நடந்து கொள்ளும் சிறு குழுவின் அடாவடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை மூலம் பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, எதிர்ப்பு வருகிறது என்பதற்காக பணிந்து போவது எந்தவகையில் நியாயம் என்கிறார்கள் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள்.

பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சி பிரியாணி வழங்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒரு குழுவினர் கச்சைக்கட்ட, அதற்கு போட்டியாக விழா நடைபெறும் ஆம்பூர் வர்த்தக மையத்தின் வெளிப்பகுதியில் மாட்டு பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆவேசம் காட்ட, இருதரப்பினருக்கும் இடையே சிக்கிக் கொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, ஒரு தரப்பினருக்கு சாதகமாக நடந்து கொள்ளும் வகையில், பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சிக்கு அனுமதியில்லை என்று அறிவித்ததுதான், தமிழக அரசுக்கு அவப்பெயரை தேடித் தந்துவிட்டது என்கிறார்கள் இந்துத்துவா எதிர்ப்பாளர்கள்.

நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தைப் போல உணவுப் பழக்கமும் எங்கள் உரிமை என்ற முழக்கத்தை நரம்புகள் புடைக்க ஆவேசமாக குரல் எழுப்பும் தனித்த அடையாளம் கொண்ட இயக்கங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்துத்துவா எதிர்ப்பு குறித்தே சந்தேகக் கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கெனவே, பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, அந்த நிகழ்வுக்கு அனுமதி அளித்து, ஆன்மிக வாதிகளிடம் பணிந்து போய்விட்டது திராவிட மாடல் ஆட்சி என்று கிண்டலடிக்கும் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள், தற்போது ஆம்பூரில் பிரியாணி விழாவுக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து, மழையைக் காரணம் காட்டி, அந்த நிகழ்வை ஒத்திவைத்துள்ளதன் மூலம் பலவீனமான ஆட்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி திகழும் அளவுக்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அமைந்துவிட்டது என்று வேதனையோடு கூறுகிறார்கள் விளிம்புநிலை மக்களிடையே களமாடும் சமூக ஆர்வலர்கள்.

https://twitter.com/NeelamSocial/status/1524675314948861953?s=20&t=kZ5y5h9vWU2QLUSdA7yPtg