தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற எளிய விழாவில், கலைமாமணி விருதுகள் மற்றும் வெகுமதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,வழங்கினார்.
நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகிபாவு, ரவி மரியா,பின்னணி பாடகி சுஜாதா, எடிட்டர் ஆண்டனி மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீதா, நகைச்சுவை நடிகை மதுமிதா, திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் இமான், சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.
மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா பெயரிலான சிறப்பு கலைமாமணி விருதுகள், நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பழம்பெரும் பாடகி பி.சுசிலா உள்ளிட்டோருக்கும், பாரதி விருது சுகி சிவத்திற்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வாணி ஜெயராமுக்கும், ஒரு லட்ச ரூபாய் காசோலையுடன் வழங்கப்பட்டன.
கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு பரிசாக 5 சவரன் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன. மேலும், கலைமாமணி விருது பெற்ற, வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.