Thu. Nov 28th, 2024

வி.கே.சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணம் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி துளியளவுக்கூட அச்சம் கொள்ளவில்லை என்ற பீடிகையோடு அவருக்கு மிகமிக நெருக்கமான சேலத்து பிரமுகர் நல்லரசுவை தொடர்பு கொண்டு பேசினார். அவரின் பேச்சு முழுவதும் எகத்தாளமாக இருந்தது. அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம்.
“பெங்களூர் சிறையில் இருந்து வி.கே.சசிகலா விடுதலையாகி வெளியே வந்து 14 மாதங்கள் கடந்துவிட்டன. 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒதுங்கியிருப்பதாக அவர் அறிவித்த போதும், ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதாக கூறி மறைமுகமாக அமமுக வெற்றிக்கு பாடுபட்டார். அந்த தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிப் பெறவில்லை என்றாலும் கூட மானத்தை காப்பாற்றிக் கொண்டோம். அதற்கடுத்த மாதங்களில் வி.கே.சசிகலா வெளிப்படையாகவே அதிமுகவின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றும் நோக்கில் பேசினார். பயணப்பட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் சிலர் செயல்பட்டதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இபிஎஸ் பணத்தை இறக்கவில்லை. கேவலமான தோல்வியைச் சந்தித்தாலும்கூட, அதிமுக பலவீனமடைந்துவிட்டது என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டபோதும் விகே சசிகலாவை நம்பி, அதிமுகவின் கிளைக்கழகச் செயலாளர்கள் கூட செல்லவில்லை என்பது இபிஎஸ்ஸுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது.
இப்படிபட்ட நேரத்தில் இபிஎஸ்ஸை பலவீனப்படுத்தி, தலைமைப் பதவியை கைப்பற்றிவிடலாம் என ஓபிஎஸ் ஆடிய அத்தனை சித்துவிளையாட்டுகளையும் தவிடிபொடியாக்குவதில் கண்ணும் கருத்தமாக இருந்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் இபிஎஸ்.

மேற்கு மண்டல அதிமுக முன்னணி நிர்வாகிகளை மிரட்டி, அடக்கி ஒடுக்கி வைக்க ஓபிஎஸ் எடுத்த சசிகலா எனும் ஆயுதத்தைக் கொண்டே, அவரது செல்வாக்கை அதிமுகவில் முற்றிலுமாக ஒழித்துவிட்டார் இபிஎஸ்.
ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் விகே சசிகலா மேற்கொண்ட தென்மாவட்ட பயணமாக இருந்தாலும் சரி, சேலம்,நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொண்ட பயணமாக இருந்தாலும் சரி, உண்மையான, துடிப்பான அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் அவர் பின்னால் செல்லவில்லை என்பதை நாள்தோறும் விசாரித்து அறிந்துகொண்டார் இபிஎஸ். அதைவிட முக்கியமாக, உளவுத்துறையின் முன்னாள், இன்னாள் காவல்துறை அதிகாரிகள் மூலம் அவர் திரட்டிய தகவல்கள்தான், விகே சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒருசேர எதிர்த்து அரசியல் செய்வது என்றும், அதிமுகவின் தலைமையை எந்த விலை கொடுத்தாவது அடைந்தே தீர்வது என்றும் உறுதியான நிலைக்கு வந்துவிட்டார் இபிஎஸ்” என்றார் அவருக்கு நெருக்கமான சேலம் மாவட்ட அதிமுக பிரமுகர்.
சில நொடிகள் இளைப்பாறுதலுக்குப் பிறகு மீண்டும் அவரே தொடர்ந்து பேசினார்.
“தென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் செய்த போது, அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட நிர்வாகிகளைக் கூட அவரால் அணி திரட்ட முடியவில்லை என்பதை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னணி தலைவர்கள் மூலம் அறிந்து கொண்டவர் இபிஎஸ். அதேபோல, தன்னெழுச்சியாக தொண்டர்கள் யாரும் சசிகலாவை பார்க்க வரவில்லை. திரட்டப்பட்ட கூட்டம் தானே தவிர, அதிமுகவில் புரட்சியை ஏற்படுத்த வந்தவர் என்றெல்லாம் நினைத்து கூட்டம் கூடவில்லை. சசிகலா செல்லும் ஊர்களில் எல்லாம் கும்பலாக கூடுபவர்கள் பெரும்பாலும் அதிமுகவினரே இல்லை என்பதைவிட, அண்மைக்காலமாக சசிகலாவை வரவேற்பவர்களில் அமமுகவினர் கூட இல்லை என்பதையும் அறிந்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


தென் மாவட்டங்களில் கூட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சிலர் தலையைக் காட்டியிருக்கலாம். ஆனால், சேலம், நாமக்கல் மாவட்ட பயணத்தின்போது சசிகலாவை வரவேற்றவர்களில் ஒருவருக்குக் கூட ஒருவர் அறிமுகமானவர்களாக இல்லை என்றும், அந்தக் கூட்டத்தில் பலர் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி எந்தவொரு விபரமும் உள்ளூர் அதிமுக நிர்வாகிகளுக்கு தெரியாதது மட்டுமல்ல, உள்ளூர் போலீசாருக்கும் கூட தெரியவில்லை என்ற தகவலையெல்லாம் கேட்டு, உற்சாகமாகிவிட்டார் இபிஎஸ்.


சசிகலா செல்லும் ஊர்களில் எல்லாம் அவரை யார் வரவேற்கப் போகிறார்கள், எங்கே தங்கப் போகிறார், யார் யாரையெல்லாம் சந்திக்கப் போகிறார் என்பன போன்ற தகவல்களை திரட்டுவதற்குள் உளவுத்துறை போலீசார் திணறி விடுகிறார்கள். இதுவரை சசிகலா சென்ற ஊர்களில் எல்லாம் அவரை வரவேற்றவர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து கூட்டி வரப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த ரிப்போர்ட்டை வைத்துதான், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோரையெல்லாம் தூண்டிவிட்டு, சசிகலாவை கடுமையாகவும், மிகமிக கேவலமாகவும் விமர்சனம் செய்ய தூண்டிவிட்டுள்ளார் இபிஎஸ்.
அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் முடிந்த கையோடு, விகே சசிகலாவுக்கு எதிராக ஏவப்பட்டுள்ள விமர்சன யுக்தியை ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவும் திருப்பி அவரது செல்வாக்கையும் குறைக்க இபிஎஸ் திட்டம் தீட்டியுள்ளார்.
விகே சசிகலாவிடம் எவ்வளவு பணம் இருக்கிறது. அவரது சொந்தபந்தங்கள் எங்கெல்லாம் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள் என விவரம் அனைத்தும் அறிந்தவர் இபிஎஸ். அதனால், ஆன்மிகப் பயணமோ, அரசியல் பயணமோ எப்படிபட்ட வேடத்தை போட்டாலும் அதிமுகவை ஒருபோதும் சசிகலாவால் கைப்பற்றிவிட முடியாது என்று திட்டவட்டமாக கூறிக் கொண்டிருக்கும் இபிஎஸ், விகே சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே எழுந்துள்ள மோதலை உள்ளூர ரசித்துக் கொண்டிருக்கிறார்.
2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனை கூட்டணிக் கட்சி என்ற பெயரில் அதிமுகவுடன் சேர்த்துக் கொள்ள கூட இபிஎஸ் தயாராக இருக்கிறார். ஆனால், விகே சசிகலா கைக்குள் மீண்டும் அதிமுக செல்வதை அவர் விரும்பவில்லை. அதே எண்ணத்தில்தான் வடமாவட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள், டெல்டா மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எல்லோரும் இருக்கிறார்கள்.
இபிஎஸ் அளவுக்கு மாநிலம் முழுவதும் அறிமுகமான தலைவர்கள், வடமாவட்டம், தென் மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் ஒருவர் கூட இல்லை. சி.வி.சண்முகம் தலையெடுப்பதை கே.பி.முனுசாமி விரும்ப மாட்டார். எஸ்.பி.வேலுமணி தலைவர் ஆவதை பி.தங்கமணி ரசிக்க மாட்டார். வைத்திலிங்கம் தனிப்பெரும் தலைவராக உருவாவதை நத்தம் விஸ்வநாதனோ, செல்லூர் ராஜூ, உதயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கரோ என அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இப்படி இரண்டாம் கட்ட தலைவர்களிடையே நிலவும் ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும் சிறுபுத்தியை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் இபிஎஸ். மேலும், விகே சசிகலாவின் செல்வாக்கு குறித்து டெல்லி மேலிடத்திற்கும் அவ்வப்போது ரிப்போர்ட் அனுப்பும் வேலையையும் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
முதல் அமைச்சராக இருந்த நான்காண்டுகளிலும் அரசு நிர்வாகத்தை லாவகமாக கையாண்டதைப்போல, ஆட்சியை இழந்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் அதிமுகவையும் தன் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டு வரும் வித்தையில் 75 சதவீதம் வெற்றிப் பெற்றுவிட்டார். 2023 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன்பாக, அதிமுகவின் ஒற்றை தலைமையாக தன்னை முன்னிறுத்திக் கொள்வார் இபிஎஸ் என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தார் சேலம் மாவட்ட அதிமுக பிரமுகர்…
அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா….

One thought on “வி.கே.சசிகலா ஒரு டம்மி பீஸ்.. உளவுத்துறை தகவலால் இபிஎஸ் குரூப் செம குஷி….”

Comments are closed.