தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நள்ளிரவில் அப்பர் சதய விழா நடைபெற்றது. அதிகாலையில் நடந்த தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் வெளியானவுடன் இரங்கல் செய்தி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது பேசிய முதல்வர், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டதையும் நினைவுக்கூர்ந்ததுடன், மாலையில் இறந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்த தஞ்சாவூர் செல்வதாகவும், காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, பிற்பகலில் விமானம் மூலம் தஞ்சாவூர் சென்ற முதல்வர், களிமேடு கிராமத்திற்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, ரூ. 5 லட்சம் நிவாரண தொகையையும் வழங்கினார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறி சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தீ விபத்து நேரிட்ட இடத்திற்கும் சென்று முதல்வர் பார்வையிட்டார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர் விபத்து குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேட்டியளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
மக்களுடன் எப்போதும் இருப்பேன் –
சம்பவம் குறித்து அறிந்ததும், மீட்பு பணிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டேன்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐஏஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் துறை முதன்மை செயலாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.