சிறப்புக் கட்டுரை பாண்டியன் சுந்தரம், மயிலாடுதுறை…
“உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இறைவன் மீது கூட உங்களுக்குக் கொஞ்சம் கூட கோபம் இல்லையா?” வேதனை தான் வாழ்க்கை என்று வாழும் ராமமூர்த்தி: “இல்லவே இல்லை! நாலு மாணவர்களுக்கு நல்லது செய்யும் நிலையில் என்னை படைத்திருக்கும் இறைவனுக்கு நான் நன்றி தானே சொல்லவேண்டும்?”அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் மருத்துவ உபகரணங்கள் மத்தியில் படுத்துக் கிடக்கும் 22 வயது மகனைப் பார்க்க உள்ளே நுழைகிறார் தந்தை. அறுவை சிகிச்சைக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்து தெளிந்து கண் திறக்கிறான் மகன். வலி உயிர் போகிறது. உடலை அசைக்க முயற்சிசெய்து தோற்றுப் போகிறான் அந்த வாலிபன். இடுப்புப் பகுதிக்குக் கீழே உணர்ச்சியே இல்லை.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை நோக்கி ஓடுகிறார் தந்தை.”என்னாச்சு டாக்டர்? பையனால் உடம்பை அசைக்கக் கூட முடியவில்லையே”என்று பதறியபடி கண்கலங்கி மருத்துவர் சொல்லும் பதிலுக்காக அவரையே பார்த்தபடி நிற்கிறார் வாலிபனின் தந்தை.”எப்படி இப்படி ஆச்சுன்னு தெரியலை. சில மாதங்களில் அதுவாகவே சரியாகிப் போகலாம்”என்கிறார் அந்த மருத்துவர்.ஒடிசாவின் அந்தப் பிரபலமான பெரிய மருத்துவமனைக்கு வரும்போது நன்றாக நடந்தபடியே தான் வந்திருந்தான் அந்த வாலிபன். தொடர்ந்து முதுகில் உயிர் போகிற வலி. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் தண்டுவடத்தை ஒட்டினாற்போல சின்னதாகக் கட்டி ஒன்று இருந்தது. சிறிய அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றி விட்டாலே போதும் ஒன்றும் இருக்காது என்று மருத்துவர்கள் சொன்னதை நம்பி தமிழ்நாட்டில் சொந்த ஊரில் இருக்கும் தன் மனைவியைக் கூட அழைக்காமல் அந்தத் தந்தை மட்டும் வாலிபனை அங்கே சேர்த்திருந்தார்.
“படிப்படியா இது சரியாகிவிடும் இல்லை டாக்டர்?”என்று கேட்டார் தந்தை.”எதையும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது. சரியாகலாம். ஆகாமலும் போகலாம்”என்று சொல்லிச் சென்றார் அந்த மருத்துவர்.கோவில்பட்டி அருகே உள்ள அழகிய சிறிய கிராமம் எம். துரைசாமிபுரம். அங்கே வாழ்ந்து வந்த ராமசாமி சண்முகத்தாய் இவர்களின் மூத்த மகன் தான் அந்த வாலிபன் ராமமூர்த்தி. மூன்று குழந்தைகள். மூத்த மகன்தான் ராமமூர்த்தி. அடுத்து நாகேஸ்வரி பரமேஸ்வரி என்று இரண்டு தங்கைகள்.
ராமசாமி ஒடிசா மின்சார வாரியத்தில் ஒயர்மேன் ஆக பணியாற்றி வந்தார். குடும்பம் மொத்தத்தையும் ஒடிசா அழைத்துச் சென்று வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலை. எனவே ஒடிசாவில் தான்மட்டும் தங்கி பணிபுரிந்து வந்தார் ராமசாமி.ராமமூர்த்தி பள்ளிப்படிப்பை கிராமத்தில் முடித்துவிட்டு கோவில்பட்டி தேசிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். தந்தை ராமசாமி பணி ஓய்வுக்குப் பிறகு ஒடிசாவிலேயே ஒப்பந்த அடிப்படையில் வயரிங் பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்தக்காரர் ஆக இருந்தார். மகன் ராமமூர்த்தி படிப்பை முடித்ததும் ஒடிசாவுக்கு வேலையின் நிமித்தம் அழைத்துச்சென்றார் ராமசாமி.
இருவரும் ஒடிசா சென்ற சில மாதங்களிலேயே ராமமூர்த்திக்கு முதுகில் திடீர் திடீரென தாங்க முடியாத வலி ஏற்பட்டது. தந்தைக்கு வயரிங் பணிகளில் உதவி செய்து வந்த ராமமூர்த்தி வேலை பளுவின் காரணமாக கட்டியையும் வலியையும் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தக்கட்டி முதுகுத் தண்டுவடத்தை அழுத்தத் தொடங்க வலியும் வேதனையும் அதிகரிக்கத் துவங்கியது.வலி பொறுக்க முடியாமல் துடிதுடித்த மகன் ராமமூர்த்தியை ஒடிசாவின் அந்தப் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் தந்தை ராமசாமி. கட்டியை அகற்றும் போது முதுகெலும்பிலும் சற்று சேதாரம் ஏற்பட்டுவிடுகிறது…
கோவில்பட்டியில் இருக்கும் தாய் சண்முகத்தாய் செய்தியறிந்து பதறியபடி ஒடிசா வந்து சேர்கிறார். ஒடிசா மருத்துவமனையில் சரியான கவனத்துடன் அறுவை சிகிச்சை செய்யாததால்தான் இப்படி ஆகியிருக்கிறது என்பதை அரைகுறையாகப் புரிந்து கொண்டாலும் அதை நிரூபிக்க வழி ஏதும் தெரியவில்லை, அந்த அப்பாவிப் பெற்றோருக்கு. மகன் ராமமூர்த்தியை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்கிறார்கள்.அதற்குள் மிக மோசமான நிலைக்கு ஆளாகி இருந்தார் ராமமூர்த்தி. பேச முடியும் கைகளை அசைக்க முடியும் வேறு ஏதும் அவரால் செய்ய இயலவில்லை.இயற்கை உபாதை உட்பட எல்லாவற்றுக்குமே பிறரின் உதவி தேவைப்பட்டது. போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வமில்லை. பார்க்காத மருத்துவர் இல்லை.
ராமமூர்த்தி குணமாக படாதபாடு படுகிறார்கள் தந்தையும் தாயும். மிகக் கொடுமையான நிலை. எந்த மருத்துவமும் பலனளிக்கவில்லை.கடைசியாக வேலூர் சிஎம்சி வந்து சேர்கிறார்கள்.”இதை சரி செய்யவே முடியாது. போன உணர்வுகள் போனதுதான். இந்த நிலையிலேயே வாழ்க்கையை பழகிக்கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை”என்று பெற்றவர்களை கண்ணீர்விட வைத்தார்கள் மருத்துவர்கள்.பிசியோதெரபிஸ்ட்கள் கொடுத்த பயிற்சியில் வீல் சேரில் இருந்து கட்டிலுக்கு இடம்பெயர்வது, கட்டிலிலிருந்து வீல் சேரை நகர்த்தி ஏறிக் கொள்வது போன்றவற்றுக்குத் தன்னைப் பழக்கிக் கொள்கிறார் ராமமூர்த்தி.
ஒரு குழந்தையைப் போல ராமமூர்த்தியை கவனித்து வளர்க்கிறார்கள் பெற்றோர்கள்.இதற்கிடையில் பல இடங்களிலும் கடனை வாங்கி ஒரு மகளை சேலத்திலும் இன்னொரு மகளை மதுரையிலும் திருமணம் செய்து கொடுக்கிறார் ராமசாமி. மகளின் திருமணக் கடன்கள் வீட்டோடு முடங்கி விட்ட ராமமூர்த்தியின் மருத்துவச் செலவுகள் இவற்றைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடி காரணமாக மறுபடியும் உழைப்பதற்காக ஒடிசாவுக்குப் பயணிக்கிறார் தந்தை ராமசாமி. மதுரைக்கு வந்து சேர்கிறார்கள் தாய் சண்முகத்தாயும் மகன் ராமமூர்த்தியும்.
உடலில் முக்கால் பாகம் முடங்கிப் போனாலும் கால் மனிதனாக உயிர்வாழும் ராமமூர்த்திக்கு வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. தனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தைக்கும் தாய்க்கும் எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று முடிவெடுக்கிறார் ராமமூர்த்தி. பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தபோது கணக்கில் சுமாரான மாணவனாகவே இருந்தார் ராமமூர்த்தி. அந்தக் கணக்கு தான் இப்போது அவருக்குக் கை கொடுத்து உதவுகிறது. வீல்சேரில் அமர்ந்தபடியே அக்கம்பக்கத்து பள்ளிப் பிள்ளைகளுக்கு கணக்கு டியூஷன் எடுக்க ஆரம்பிக்கிறார் ராமமூர்த்தி. வருமானம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனாலும் சொந்தக் கால்களில் நிற்கும் தைரியம் கிட்டுகிறது!
மகனைப் பற்றிய வேதனைத் துயர் மனதை அழுத்த, வியாதிகளின் பிடியில் சிக்கிக்கொண்ட சண்முகத்தாய் ராமமூர்த்தியை நிராதரவாக விட்டுவிட்டு ஒருநாள் காலமாகிப் போனார். ஒடிசாவில் தன்னுடைய பணிகளை அப்படியே நிறுத்திவிட்டு மகனை கவனிப்பதற்காக மதுரை வந்து சேர்கிறார் ராமசாமி. தாயும் தந்தையும் ஆக இருந்து மகனைக் கண்ணின் மணி போலப் பார்த்துக் கொள்கிறார் ராமசாமி, ஒருபக்கம் கடன்சுமை நெஞ்சை அழுத்தினாலும்.ராமமூர்த்தியிடம் டியூஷன் படிக்கும் பள்ளி மாணவர்கள் கணக்குப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதிக்கிறார்கள். இதனைப் பார்த்து மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. வீல்சேரில் பலமணிநேரம் பாடம் சொல்லிக் கொடுப்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகிறார் ராமமூர்த்தி.
இதைப் பூரணமாகக் குணமாக்கிக் காட்டுகிறேன் என்று சொல்லுகிற ஒரு மருத்துவரை நம்பி தன்னை ஒப்படைக்கிறார் ராமமூர்த்தி. அவரோ அதிக வலிநிவாரணி மாத்திரைகளை கொடுத்துக் கொடுத்து, சாப்பிட ஆரம்பித்த சில நாட்களிலேயே படுத்த படுக்கையாகி விடுகிறார் ராமமூர்த்தி.படுத்தபடி இருந்ததன் விளைவு உடலின் பின்புறம் முழுவதும் படுக்கைப் புண்கள்.வேறு வழியில்லை ஆறு மாதங்களுக்கு மேலாக குப்புற படுத்தபடியே கிடக்கிறார் ராமமூர்த்தி.படுத்துக் கிடந்தகாலங்களில் டியூஷன் எடுக்க முடியவில்லை. யோசித்து யோசித்து இரண்டு முடிவுகளை உடனே எடுக்கிறார்.
முதலாவது, இனி எந்தவித மருந்துகளையும் யார் சொன்னாலும் உட்கொள்வதில்லை. வலியையும் வேதனையையும் வாழ்நாள் பூரா அனுபவிக்க பழகிக்கொள்ளவேண்டும்.இரண்டாவது, பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் பாடம் எடுத்த நிலையை மாற்றி இனி கல்லூரி மாணவர்களுக்கும் பாடம் எடுக்கத் தயாராக வேண்டும்.ஓரளவு எழுந்து வீல்சேரில் அமர்கிற நிலமை வந்ததும், கல்லூரி மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பிக்கிறார் ராமமூர்த்தி. டியூசனுக்கு வந்த எல்லா மாணவர்களும் நிறைய மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறுகிறார்கள். ராமமூர்த்தியின் திறமை எல்லோராலும் கவனிக்கப்படுகிறது.எம்ஈ படிக்கும் மாணவர்களுக்கும் பாடம் எடுக்கிற நிலைக்கு உயர்கிறார் ராமமூர்த்தி.
கேரளா மாணவன் ஒருவன் தமிழக கல்லூரியில் படித்து 30 அரியர்களுடன் ராமமூர்த்தியைத் தேடி வருகிறான். கணிதம் முதல் தனக்குத் தெரிந்த பாடங்கள் அத்தனையையும் அவனுக்குக் கற்பிக்கிறார் ராமமூர்த்தி. இதர பாடங்களை அவனாகவே படித்துக் கொள்ளும் தன்னம்பிக்கையை அவனுக்குள் ஊட்டுகிறார்.’இப்போது 30 அரியர்களையும் ஒரே நேரத்தில் எழுதி உன்னால் தேர்ச்சி ஆக முடியாது. ஐந்து ஐந்து பாடங்களாக எழுதி தேர்வு ஆகும் வழியைப் பார்’என்று அந்த மாணவனுக்கு பெற்றோரும் கல்லூரிப் பேராசிரியர்களும் அறிவுரை சொல்லி அனுப்புகிறார்கள். ஆனால் ராமமூர்த்தியோ 30 தேர்வுகளையும் ஒரே செமஸ்டரில் எழுதும் மன உறுதியை அவனுக்குத் தருகிறார்.
முப்பது அரியர்சையும் ஒரே தடவையில் தேர்வு எழுதி தேர்ச்சி அடைகிறான் அந்தக் கேரளத்து மாணவன்.எத்தனை அரியர்கள் இருந்தாலும் ராமமூர்த்தியிடம் டியூசன் படிக்கச் சென்றால், ஒரே முயற்சியில் தேர்வு அடையலாம் என்ற நம்பிக்கை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவுகிறது. மதுரை பொன்மேனி பகுதியில் இ எம் எஸ் நகரில் வசிக்கும் ராமமூர்த்தியின் வீட்டைத் தேடி அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர் கூட்டம் ஓடி வருகிறது. இந்நிலையில் ராமமூர்த்தி அப்பா ராமசாமி இறந்து போகிறார். எந்தத் துணையும் இல்லாமல் நிலைகுலைந்து போகிறார் ராமமூர்த்தி.
தனி மனிதனாக இருந்தாலும் நிமிரத்தானே வேண்டும்? நிமிர்கிறார்.வீல்சேரில் உட்கார்ந்தபடியே மனதளவில் எழுகிறார். தன் பயணத்தை இன்று தனியாளாகவே தொடர்கிறார்…அதிகாலை நாலரை மணிக்கு பாடம் நடத்த ஆரம்பிக்கிறார். எட்டரை வரை டியூசன் எடுக்கிறார் வீல் சேரில் அமர்ந்தபடி. மீண்டும் பத்து மணிக்கு வகுப்புகள் தொடங்குகின்றன. மதியம் ஒன்றரை மணிக்கு காலை வகுப்புகள் முடிகின்றன. மீண்டும் மதியம் நான்கு மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை வகுப்புகள் தொடர்கின்றது. இந்தக் கால இடைவெளிகளில் தான் எண்ணற்ற மாணவரின் எதிர்காலம் சிறப்பாக நிர்ணயிக்கப்படுகிறது.
பள்ளிப் பிள்ளைகளுக்கு டியூசன் நடத்துவதற்கே ஆயிரக்கணக்கில் மாதக் கட்டணம் வாங்குகிற இந்தக் காலகட்டத்தில் தன்னிடம் ஆறு மாதம் படித்து அரியர் பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களிடம் மொத்தமாக ராமமூர்த்தி பெறுவது வெறும் 3,000 ரூபாய் மட்டும் தான். ஏழ்மை நிலையில் சிரமப்படும் பல மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி கொடுக்கிறார் ராமமூர்த்தி.
“ஒடிசா டாக்டர்களின் கவனக் குறைவு தான் உங்களை இப்படி வீல்சேரில் முடக்கிடுச்சு என்கிற வருத்தமும் கோபமும் உங்களுக்கு இல்லையா?”என்று கேட்டால்,”எனக்கு இப்படி ஆகணும் என்று முன்கூட்டியே முடிவு பண்ணிவிட்டு அவங்க அறுவை சிகிச்சை பண்ணியிருக்க மாட்டாங்க தானே! அவங்க மேலே கோபப்பட்டு என்ன ஆகப்போகுது?” என்கிறார் அமைதியே உருவாக. ராமமூர்த்தி வீட்டில் பல இடங்களிலும் அவரின் நம்பிக்கைக்கு அடையாளமாக கடவுள் படங்கள் மாட்டப்பட்டு இருக்கின்றன.”உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இறைவன் மீது கூட உங்களுக்குக் கொஞ்சம் கூட கோபம் இல்லையா?” என்று கேட்டால், கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொல்கிறார் ராமமூர்த்தி: “இல்லவே இல்லை! நாலு மாணவர்களுக்கு நல்லது செய்யும் நிலையில் என்னை படைத்திருக்கும் இறைவனுக்கு நான் நன்றி தானே சொல்லவேண்டும்?”
எத்தனை சோதனைகள் வந்தாலும் எல்லாவற்றையும் சாதனைகளாக மாற்றுகின்ற, வாழ்க்கையை நேர்மறையாகப் பார்ப்பவர்களால், மேலும் மேலும் அழகாய், அர்த்தம் உள்ளதாய் ஆகிக் கொண்டே இருக்கிறது இந்தப் பிரபஞ்சம்!