Sun. Nov 24th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்.

கடந்த வாரத்தில் ஒருநாள் தலைமைச் செயலகத்திற்கு சென்றிருந்தபோது மூத்த செய்தியாளர் ரமேஷ் என்னிடம் தலைமைச் செயலாளரின் பிரசார பீரங்கியாகி (மவுத் பீஸ் ஆக) விட்டீர்? என்று புன்முறுவலோடு கூறினார். அதன் உள்ளர்த்தத்தை புரிந்துக் கொண்டாலும்கூட நேரடியாக பதிலளிக்காமல் சிறு புன்னகையோடு நகர்ந்தேன்.

அவர் தோழர் (அ) திராவிடர் (அ) தமிழர்…

 20 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அங்கீகரித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஹிந்து ஆங்கில நாளிதழின் முதன்மைச் செய்தியாளரும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தற்போதைய முதன்மைச் செய்தியாளருமான நண்பர் ஒப்புலி, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கைபேசியில் பேசுகிற போது நல்லரசுவில் வெளியிடப்படும் செய்திகளைப் பற்றி சில நேரங்களில் நினைவுக்கூர்வார்.

அறிவுரையாக அவர் கூறும் கருத்து, நேர்மையான ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை துணிந்து பரப்ப வேண்டும். அப்போதுதான் எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் இளம்தலைமுறையினர் நேர்மை பாதையில் இருந்து தடம் மாறாமல் பயணிப்பதற்கான உறுதி மனதில் பிறக்கும் என்பார்.

ஒப்புலி போன்ற பலரின் கருத்துகளுக்கு தமிழில் எழுத்து வடிவும் கொடுக்கும் வகையில்தான் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் நேர்மை தவறாத, கடுமையான உழைப்பைப் பற்றி அவ்வப்போது எழுதுகிறேனே தவிர, அவருக்கு பல்லக்கு தூக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு என்னால்தான் விளம்பரம் கிடைக்கிறது என்பதெல்லாம் பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடும் என்ற கதைதான்.

சரி, தலைப்புக்கு வருகிறேன். கடந்த பத்து நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றன. 

முதல் நிகழ்வு. மேயர், துணை மேயர் ஆகியோருக்கான பயிற்சி முகாம். இந்த முகாமின் நிறைவு விழாவின் கதாநாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸும் பங்கேற்று பேசினார்.

“வணக்கம் கூறி” பேச்சை துவங்கியது முதல் நிறைவு வரை அவர் பேசிய ஒரு வார்த்தை கூட பயனற்ற சொல் என்று தவிர்த்துவிட முடியாது. அந்த நிகழ்வுக்கு நான் நேரில் செல்லவில்லை. அரசின் அடையாள அட்டை வைத்திருக்கும் செய்தியாளர்கள்தான் முதல்வர் பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று செய்தி மக்கள் தொடர்புத் துறை கறார் காட்டுவதால் விழாவிற்கு செல்வதை நான்  தவிர்த்தேன். தனித்த ஆர்வமுடன் அந்த விழாவிற்குச் சென்றிருந்தால் கூட என்னை அறிந்த செய்தித்துறை உயரதிகாரிகள் கூட்டரங்கிற்குள் அனுமதித்து இருப்பர். இருந்தாலும் கூட செய்தித்துறை ஒளிப்பரப்பிய சமூக ஊடகத்தின் நேரலை மூலம் முழு நிகழ்வையும் பார்த்தேன்.

அந்த விழாவில் முதல்வர் முன்னிலையில் தலைமைச் செயலாளர் 20 நிமிடத்திற்கு குறையாமல் உரையாற்றினர். முதல்வர் அமர்ந்திருக்கும் மேடையில் இவ்வளவு நேரம் ஒருவர் பேசுவது என்பது அசாதாரணம். பொன்னான நேரத்தை வீணாக்காமல், திருக்குறள், தந்தை பெரியாரின் பொன் மொழிகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டியதுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆன்றோர்களின் கருத்துகளை எல்லாம் கோர்வையாக்கி தலைமைச் செயலாளர் ஆற்றிய உரையைக் கண்டு வியந்துதான், அவரின் உரையை ஒரு வார்த்தைக்கூட விடாமல் செய்தியாக்க வேண்டும் என்று நள்ளிரவு வரை நேரம் செலவிட்டு செய்தியாக்கினேன்.

அவரின் உரையில் பயன்படுத்திய திருக்குறள் உள்படவெளிநாட்டு இலக்கியவாதிகளின் பெயர்கள், த.செ. மேற்கொள் காட்டிய புத்தகங்களின் பெயர்களை எல்லாம் பிழையின்றி எழுத கூகுளின் உதவி தேவைப்பட்டது.

முதல்வர் அமர்ந்திருக்கும் மேடையில் இவ்வளவு சிறப்பாக பேசியிருக்கிறாரே? தலைமைச் செயலாளரின் பேச்சை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து இருப்பாரா? என்ற சந்தேகம் எனக்கு அதிகமாக இருந்தது. அதற்கு காரணம், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதி, 1996க்குப் பிறகு முதல்வராக பணிபுரிந்த காலத்தில் பல ஆண்டுகள் அவரின் விழாப் பேச்சுகளை செய்தியாக்கி இருக்கிறேன்.

இலக்கிய மேடையாக இருந்தாலும், அரசியல் மேடைகளாக இருந்தாலும், அரசு விழா மேடையாக இருந்தாலும், அனைத்து மேடைகளிலும் கலைஞரின் பேச்சுதான் முதன்மையாக இருக்கும். இருக்க வேண்டும் என்பதற்காகவே அதிகமாக மெனக்கெட்டு உரைகளை தயாரித்துக் கொள்பவர் கலைஞர்.

கலைஞரின் மேடை பேச்சுடன் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒப்பீடு செய்யக் கூடாது என்றாலும்கூட, விழா மேடைகளில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற குணத்தில் தந்தை போல இல்லாமல்  தனையன் பெருந்தன்மையோடு இருப்பது அதிசய பண்பாகவே தெரிகிறது.  

ஒரு வார இடைவெளியில் நகராட்சித் நிர்வாகத்துறை சார்பில் மீண்டும் ஒரு பயிற்சி முகாம் நடைபெற்றது. அதன் நிறைவு விழாவிலும் முதல்வர்தான் கதாநாயகர். இந்த விழாவில் தலைமைச் செயலாளரை உரையாற்ற அழைப்பார்களா?  என்று விழா காட்சிகளை செய்தித்துறையின் யூ டியூப் ஊடகம் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன். தலைமைச் செயலாளரை அறிவுரையாற்ற அழைத்தார்கள். நகராட்சி மன்றத் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற விழாவில் உரையாற்றினார் தலைமைச் செயலாளர். முந்தைய பயிற்சி முகாமில் பேசியதைப் போலவே 20 நிமிடங்களுக்கு மேலாக உரையாற்றினார்.

முந்தைய விழாவைப் போலவே, இந்த விழாவிலும் வெ.இறையன்பு ஐஏஎஸ் பேசிய ஒரு வார்த்தையைக் கூட புறக்கணிக்க முடியாத நிலைதான். அவரின் முழு உரையையும் இந்த முறையும் கூகுள் உதவியுடன்தான் முழுமையாக பதிவு செய்தேன். இந்த உரையில் சிலப்பதிகாரம்,இடைக்கால சோழர்களின் வரலாற்று நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி உரையாற்றினார் தலைமைச் செயலாளர்.

தலைமைச் செயலாளரின் உரையை ரசித்து கேட்கும் மனநிலையில்தான்  முதல்வர் இருக்கிறார் என்ற உண்மை இரண்டாவது விழாவில்தான் எனக்கு தெரிந்தது.

நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் பேசிய பேச்சில் இருந்து சில வார்த்தைகளை மேற்கோள் காட்டி பேசியதன் மூலம் தலைமைச் செயலாளரின் உரையை முழுமையாக அங்கீகரிக்கிறார் என்பதை புரிந்து கெள்ள முடிந்தது.

அரசு அதிகாரியாக அதுவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகிப்பவர், நாட்டு மக்களுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், அரசு பணியாளர்களுக்கும் தான் நினைத்ததை வலியுறுத்த வேண்டும் என்ற கடமையில் இருந்து ஒருபோதும் தவறிவிடக் கூடாது என்று அனுமதிக்கிற பண்பு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியைவிட  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தூக்கலாகவே இருக்கிறது என்பதை, இந்த இரண்டு நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.

பொது வெளிகளில் மட்டுமின்றி அமைச்சரவைக் கூட்டம், அரசுத் துறைச் செயலாளர்களை உள்ளடக்கிய ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் என அரசு நிர்வாகத்தை துரிதப்படுத்துகிற எந்தவொரு கூட்டமாக இருந்தாலும், தலைமைச் செயலாளருக்கு, இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில் அதீத சுதந்திரம் கொடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற தகவல்கள் கிடைத்தபோது மக்கள் பணியில் விஸ்வரூபமாகதான் உயர்ந்து நிற்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நிறைவாக, செய்திக்குறிப்பாக அனுப்ப வேண்டிய அரசு அறிவிப்புகளைக் கூட, நேரலை பேட்டியாகவும், தனித்த பேட்டியாகவும் நாள்தோறும் வழங்கிக் கொண்டிருக்கிற சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு கிடைக்கிற ஊடக வெளிச்சம், தலைமைச் செயலாளருக்கு வழங்கப்படுவதில்லை என்கிற போது, தலைமைச் செயலாளரின் பிரசார பீரங்கியாக நான் இருக்கிறேன் என்றால், அந்த விமர்சனத்தை என் வாழ்நாள் முழுவதும் ரசிக்கவே விரும்புகிறேன்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான இரண்டு பயிற்சி முகாமிலும் தலைமைச் செயலாளர் ஆற்றிய உரையை, இரட்டடிப்பு செய்த அனைத்து வகையான ஊடகங்கள் முன்பு ஊடகத் தர்மத்தோடுதான் நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு நேர்மையான மனிதர்கள் பலரிடம் இருந்து கிடைத்து கிடைத்து வருகிற பாராட்டுகளே நிம்மதி தருபவையாக இருக்கிறது.

வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு முன்பு தலைமைச் செயலாளராக பணியாற்றிய முன்னாள் தலைமைச் செயலாளர்களில் ஒருவர் கூட அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்தார்கள் என்ற வரலாறோ, பொதுமக்கள் முகம் சுளிக்காத வகையில் அரசு மருத்துவமனை மற்றும் வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதாகவோ, தூய்மை விவகாரத்தில் தொடர்ந்து கண்காணிப்புகளை மேற்கொண்டு வந்தார்கள் என்பதை பற்றிய ஒரு வரி செய்தி கூட வரலாற்று பக்கங்களில் இல்லை.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்றைய தினம் தூய்மைப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் கறாரான உத்தரவு தான் என்பது குறித்த செய்தி, உள்ளூர் அளவிலான ஊடகங்களில்கூட ஒருவரி செய்தியாககூட வெளியாகவில்லை என்று நேர்மை தவறாத மருத்துவர்கள் மனவருத்தத்தோடு கூறுவதையும் இங்கு பதிவு செய்கிறேன்.   

2 thoughts on “கலைஞரைவிட மிகுந்த பண்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின்….”
  1. //செய்திக்குறிப்பாக அனுப்ப வேண்டிய அரசு அறிவிப்புகளைக் கூட, நேரலை பேட்டியாகவும், தனித்த பேட்டியாகவும் நாள்தோறும் வழங்கிக் கொண்டிருக்கிற சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு கிடைக்கிற ஊடக வெளிச்சம், தலைமைச் செயலாளருக்கு வழங்கப்படுவதில்லை என்கிற போது,//
    100% உண்மையான கூற்று… இன்றைய பத்திரிகை உலகம் சென்று கொண்டிருக்கிற நவீன முறையான “காசு குடுத்தா நியூஸ் போடு இல்லைன்னா குப்பையிலே போடு” என்கிற பேக்கேஜ் முறையை கொண்டு வந்து செய்திக்கு பணம் வாங்கும் இந்த காலத்தில், பாவம்! தலைமைச் செயலாளரின் எத்தகைய அறிவுரை ஆயினும் அது அவர்களுக்கு செல்லாக்காசே..
    ஏதோ உங்களைப் போன்ற சிலராவது அவருடைய திறமையை அனைவரும் அறியத்தக்கதாக வெளி உலகத்திற்கு கொண்டுவந்து காட்டி பத்திரிகை தர்மத்தின் அச்சாணியாக திகழ்கிறீர்கள்… யார் என்ன சொன்னாலும் கடவுள் கொடுத்த ஒரு காதுவழியாக வாங்கி அடுத்த காதுவழியாக வெளியேற்றி விட்டு தங்கள் சீரிய பணியை தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

  2. சார், தாங்கள் இந்தப் பதிவு வாயிலாக சொன்ன கருத்துகளை 200% ஏற்று கொள்ளலாம். தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலாளர் இறையன்பு அவர்களின் சிறந்த உதாரணங்கள், குட்டிகதைகள் பொருந்திய கருத்துகளோடு உரையாற்றுவதை கூர்ந்து கவனிக்கிறார்.. மக்களுக்கானதாக மகிழ்ச்சி அடைகிறார். தங்களின் அற்புத பதிவுக்கு மனம் நிறைந்த நன்றிகள் சார். வாழ்த்துகள்!!!

Comments are closed.