Sun. Nov 24th, 2024

எச்சில் கையால் கூட காக்காய் ஓட்ட மாட்டார் அமைச்சர் துரைமுருகன்..

இப்படியொரு பட்டத்தை வழங்கியவர் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை எதிர்த்து 2021 காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக வேட்பாளர் ராமுதான்.

ராமுவின் கூற்றுக்கு ஏற்பதான் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கைகள் இருப்பதாக மனம் நொந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள். தந்தை பெயருக்கு எந்த விஷயத்திலும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற சபதத்துடன் அவரது மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த்தும் திமுக நிர்வாகிகளை மட்டுமல்ல, பொதுமக்களையும் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அவற்றை உண்மை எனும் நிரூபிக்கும் வகையில்தான் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்பியான பிறகு பொதுமக்களையே சந்திக்காத கதிர் ஆனந்த் எம்பி, கடந்த ஒரு மாதமாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அடிக்கடி தலைக்காட்டி வருவதைக் கண்டு திமுக நிர்வாகிகளே தங்கள் கையை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்கள்.


வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் கதிர் ஆன்ந்த் எம்பி அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து வருவதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.


நல்லரசுக்கு அறிமுகமான அமைச்சர் துரைமுருகன் குடும்பத்து திமுக நிர்வாகி ஒருவர், கதிர் ஆனந்தின் திடீர் மக்கள் சேவை குறித்து மனம் திறந்து பேசினார்.
“2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று எம்பி ஆன பிறகு கதிர் ஆனந்த்தை திமுக நிர்வாகிகள் சந்தித்து பேசுவது என்பது அரிதாகிப் போனது. அவரது தந்தை துரைமுருகன், திமுகவில் இரண்டாம் இடத்தில் இருப்பதால், வேலூர் திமுக நிர்வாகிகளை உதாசீனப்படுத்தியே வந்தார். அவருக்காக தேர்தல் வேலைப் பார்த்த திமுக முன்னணி நிர்வாகிகளின் குடும்ப விழாக்கள், துக்க நிகழ்வுகள் போன்றவற்றில் கூட நிகழ்வு நாளின் போது தலையைக் காட்டாமல், அவருக்கு சவுகரியமான நாட்களில்தான் வந்து செல்வார்.

காட்பாடியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றாலோ, அல்லது அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களுக்குச் சென்றாலோ அவரை எளிதாக சந்தித்து விட முடியாது. தப்பித்தவறி சந்தித்தாலும்கூட, தேநீர் உள்ளிட்ட எந்தவிதமான விருந்தோம்பலும் கிடைக்காது. தொகுதி சார்ந்த பிரச்னை, திமுக நிர்வாகிகளின் சொந்த பிரச்னை என எந்தவொரு விஷயமாக அவரை சந்தித்தாலும், அவர்களது குடும்பத்து விசுவாசிகளாக இருந்து வரும் திமுக நிர்வாகிகள்தான் தங்கள் சொந்த கை காசை செலவழிக்க வேண்டும்.

கடந்த 2019 முதல் 2021 மே மாதம் வரை அதிமுக ஆட்சி என்பதால், மக்கள் கோரிக்கைகள் மீதோ, திமுக நிர்வாகிகளின் தனிப்பட்ட கோரிக்கைகள் மீதோ கதிர் ஆனந்த் எம்பியால் தீர்வு காண முடியவில்லை. பாவம் அவர் என்ன செய்வார் என்று நாங்கள் சமாதானம் ஆகி கொண்டோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியுள்ள நிலையிலும் கூட, மக்கள் பணியில் அக்கறையில்லாமலே இருந்து வந்தார்.

ஆனால், கடந்த ஒரு மாத காலமாக கதிர் ஆனந்திடம் தலை கீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை துரைமுருகன் தொகுதியான காட்பாடி மற்றும் அவரது எம்பி தொகுதியில் அடங்கியுள்ள6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அடிக்கடி தலையைக் காட்டி திமுக நிர்வாகிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 354 பேரை தனது சொந்த பணத்தை செலவழித்து அவரது கல்லூரி பேருந்துகளில் சென்னைக்கு அழைத்துச் சென்று சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்வையிட கதிர் ஆனந்த் ஏற்பாடு செய்தார்.


என்னடா திடீரென்று பள்ளிக் குழந்தைகள் மீது அன்பு காட்டுகிறார் கதிர் ஆன்ந்த் என்று விசாரித்த போதுதான், 2024 ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை குறி வைக்கிறார் கதிர் ஆனந்த் என்ற தகவலே கிடைத்தது.


வார நாட்களில் மட்டுமல்ல வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் காட்பாடியில் இருந்தால் கூட கண்ணில் சிக்காத கதிர் ஆனந்த் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி கண்ணில் தென்படுகிறார். மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். திமுக முன்னணி நிர்வாகிகளின் சுக, துக்க நிகழ்வுகளில் உடனுக்குடன் தலை காட்டுகிறார். அரசு கல்வியல் கல்லூரி நிகழ்வில் பங்கேற்று ஆசிரியர்களை குஷிபடுத்துகிறார். அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் புதிய கட்டுமானப் பணியை திறந்து வைத்து, அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் அரசு அலுவலர்கள்தான் என்று ஐஸ் மழை பொழிகிறார்.

அதேபோல, திமுக நிர்வாகிகளின் குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பாச மழை பொழிகிறார். ஏழ்மைநிலையில் உள்ள திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு தந்தை நிதியுதவி தர சொன்னார் என கூறி பண கொடையும் வழங்கி நவீன கர்ணனாக காட்சியளிக்கிறார் கதிர் ஆனந்த்.
6 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்கள், நகரங்களில் அடிக்கடி வலம் வந்து கட்சி நிர்வாகிகளை அழைத்து கலந்துரையாடுகிறார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் மக்கள் தொண்டராக மாறியிருக்கிறார் கதிர் ஆனந்த்.
கதிர் ஆனந்த்தின் அன்றாட மக்கள் சேவைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மத்தை போட்டு உடைக்கும் அவரது விசுவாசிகள், திமுக தலைமையில் இருந்து கிடைத்த ரகசிய தகவலையடுத்துதான் பொது சேவையில் பம்பரமாக சுழல ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.


வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய திமுக எம்பிக்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே. அவரவர் தொகுதியில் யார் யாரெல்லாம் சிறப்பாக பணியாற்றி மக்களின் செல்வாக்கு பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தலைமை கூறியிருப்பதாகவும், வெற்றி வாய்ப்பு இல்லாத தற்போதைய எம்பிக்களுக்குப் பதிலாக அந்தந்த தொகுதியை உள்ளடக்கிய மாவட்ட அமைச்சர், மாவட்டச் செயலாளர் ஆகியோரின் வாரிசுகளுக்குதான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் திமுக தலைமை கூறிவிட்டதாகவும் முணுமுணுக்கிறார்கள் கதிர் ஆன்ந்த் எம்பியின் விசுவாசிகள்.


வேலூர் தொகுதியைச் பொறுத்தவரை கதிர் ஆனந்த் எம்பிக்கு இணையாக பணம் செலவழிக்கும் அளவுக்கு செல்வாக்குப் படைத்தவர்கள் திமுகவில் இல்லை என்றாலும் கூட, தனது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இப்போது இருந்தே கதிர் ஆனந்த் எம்பி, தனது தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம்போட்டு 6 எம்எல்ஏ தொகுதிகளின் திமுக நிர்வாகிகளை மனம் குளிர செய்யும் வேலையிலும், எம்பி தொகுதி மக்களிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானித்து இப்போதிருந்தே லட்சக்கணக்கில் பணம் செலவிழக்க தயாராகிவிட்டார் என்பதுதான் எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான அம்சமாக இருக்கிறது.

வேலூர் எம்பி தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் கதிர் ஆனந்த்தின் விசுவாகிகள், அங்குள்ள அரசு அதிகாரிகளிடம் புதிதாக எந்தவொரு அரசு திட்டம் துவக்கி வைத்தாலும் கதிர் ஆனந்த் எம்பியை அழைத்துதான் செய்ய வேண்டும் என அன்பு கட்டளையிட்டு வருகிறார்கள். அதன் காரணமாகவே, 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் கதிர் ஆனந்த் எம்பி இல்லாமல் ஒரு நிகழ்வும் தற்போது நடப்பதில்லை.


தேர்லை மனதில் வைத்து மக்கள் பணியாற்றுவதைவிட, உண்மையான மக்கள் சேவகராக கதிர் ஆன்ந்த் தன்னை மாற்றிக் கொண்டால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அவரது தந்தை துரைமுருகனைப் போல, அவரும் செல்வாக்குமிக்க தலைவராக மிளிர முடியும். இல்லையெனில் சொல்வதற்கே கஷ்டமாகதான் இருக்கிறது. வேறு வழியில்லை சொல்லிதான் ஆக வேண்டும். சேலம் மாவட்ட சிங்கமாக இருந்த வீரபாண்டியாரின் வாரிசுகளுக்கு ஏற்பட்ட கதிதான் கதிர் ஆனந்த்திற்கும் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எங்களை எல்லாம் கவலை கொள்ள செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்து விசுவாசி.

திமுக தலைமை எச்சரிக்கையால்தான் திமுக எம்பிக்கள் தற்போது அடிக்கடி தொகுதியில் தலையைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் போல…