Sun. Nov 24th, 2024

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்க முயன்ற மாணவன் சஸ்பெண்ட செய்யப்பட்டு உள்ளார். இதே குற்றச்சாட்டில் மேலும் 2 மாணவர்களும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்ட் சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார்.

ஆசிரியரின் அறிவுரையை உதாசீனப்படுத்திய சில மாணவர்கள் பொருட்படுத்தாதது மட்டுமின்றி ரெக்கார்டு நோட்டுகளையும் சமர்ப்பிக்காமல் இருந்துள்ளனர்.

வழக்கம்போல நேற்று வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய், ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை கண்டித்துள்ளார்.

அதை கேட்டு ஆத்திரமடைந்த ஒரு மாணவர், தான் அணிந்திருந்த சட்டையை கழற்றிவிட்டு, தகாத வார்த்தைகளால் ஆசிரியரை திட்டியுள்ளார். அவரின் செயலைப் பார்த்து ஆசிரியர் சஞ்சயும், மற்ற மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதைவிட கொடுமையாக மேலும் மேலும் ஆபாசமாக திட்டியவாறே ஆசிரியரின் இருக்கை அருகே சென்று அவரை கையால் தாக்கும் முயற்சியிலும் அந்த மாணவர் ஈடுபட்டுள்ளார். அவரைப் போலவே, மேலும் 2 மாணவர்கள் ஆசிரியரின் இருக்கை அருகே சென்று ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர்.

மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்‌. சஞ்சய்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி மற்ற ஆசிரியர்களும் அச்சம் கொண்டுள்ள நிலையில், அவர்கள் மத்தியில் இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சஞ்சய்க்கு விடப்பட்ட மிரட்டலை பள்ளி அறையில் இருந்த மாணவர் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ ஆசிரியர் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனையடுத்து, மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலன் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அண்மைகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கக்கோடாக நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

இதனிடையே, இன்று காலை வாணியம்பாடி உதவி ஆட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்று ஆம்பூர் வட்டாட்சியர் பழனி ஆகியோர் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் வேலனிடம் அடாவடி மாணவர்களின் மிரட்டல் நிகழ்வு தொடர்பாக விசாரித்தனர். பின்னர், பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசி தாக்க முயன்ற மாணவர்களிடம் உதவி ஆட்சியர் விசாரணை நடத்தினார்.

நேரடி விசாரணையை அடுத்து ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து இதே குற்றச்சாட்டில் சிக்கிய மேலும் 2 மாணவர்களையும் தற்காலிகமாக நீக்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம்..

மாதனூர் பள்ளி நிகழ்வு தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டன்ம் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ரெக்கார்ட் நோட் எழுதாததற்காக கண்டித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயலும் காணொலி வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்!

தாய், தந்தையருக்குப் பிறகு மாணவர்கள் வாழ்வில் ஆசிரியர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் தான் மாணவர்களை கரை சேர்க்கும் ஓடங்கள். கடவுளாக மதிக்க வேண்டியவர்களையே திட்டி, தாக்க முயலும் அளவுக்கு சில மாணவர்களிடம் ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது!

திரைப்படங்களில் ஆசிரியர்கள் தவறாக சித்தரிக்கப்படுவதும், சமூகச் சூழலும் தான் இதற்கு காரணம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிகளில் பாடங்களுக்கு இணையாக நீதி போதனைகளுக்கும், ஒழுக்க போதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.