வி.கே.சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்காக கட்சியில் யாரும் குரல் கொடுக்க கூட மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து வி.கே. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கி கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றிய பொதுக்குழுக் கூட்டமே செல்லாது என்று அறிவிக்ககோரி, விகே சசிகலா தரப்பில் சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில், வி.கே.சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
வி.கே.சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவுப் பெற்றதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலாவை நீக்கி அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்றும், இந்த வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அறிவித்தார்.
வி.கே.சசிகலா மேல்முறையீடு
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நாமக்கல்லில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வி.கே. சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று தெரிவித்தார்.
அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் கருதுவதாகவும், அதிமுக நிர்வாகிகள் தம்மை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களை தாம் தொடர்ந்து சந்திப்பேன் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
ஜெயக்குமார் ஆவேசம்
இதனிடையே வி.கே.சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கேட்டு ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.