சொத்து வரி உயர்வு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக, வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் சட்டப்பேரவையில் இருந்தும் வெளிநடப்பு செய்துள்ளது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
நகராட்சித்துறை அமைச்சர் திடீரென்று சொத்து வரியை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 25 சதவீதம் முதல் 150 சதவீதம் என மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் திமுக அரசு சொத்து வரியை இன்றைக்கு உயர்த்தி இருக்கிறது. இது கண்டனத்திற்குரியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனோ தொற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையிழந்து வாழ்வாதாரத்தை மக்கள் இழந்துள்ள நிலையில், இந்த சொத்து வரி உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கிறது, மக்கள் மீது திமுக அரசு பெரும் சுமையை சுமத்துகிறது என்று அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் அமைச்சருக்கும் திமுக அரசின் கவனத்திற்கும் இதை கொண்டு வந்தோம்.
ஆகவே, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அதிமுக சார்பில் திமுக அரசை வலியுறுத்தினோம். அதே சமயம், மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று சொல்லியிருப்பதால், திமுக அரசு உயர்த்தியுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று ஒருபோதும் மத்திய அரசு கூறவில்லை. உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்துவிட்டு தேர்தல்கள் முடிந்தவுடன் வாக்களித்த மக்களுக்கு பரிசாக சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியிருக்கிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்த சொத்து வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாடகை வீட்டில் வசிக்கும் மக்களும் இந்த சொத்து வரி உயர்வால், வாடகை தொகையை அதிகமாக கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சொத்து வரி உயர்வை நியாயப்படுத்தி பேசும் முதல்வர்தான், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்றும் கூறியுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒருபேச்சு, ஆளும்கட்சியாக மாறிய பிறகு ஒரு பேச்சாக தான் இருக்கிறது. சொத்துக்கு வரியா அல்லது சொத்தை பறிக்கிற வரியா என்று கேட்டவர்தான் தற்போதைய முதல்வர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது மு.க.ஸ்டாலின் கேட்டதைதான் மக்கள் இப்போது கேட்கிறார்கள்.
மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிற இன்றைய தேதியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திமுக அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. அதிமுக முன்வைத்த வரி உயர்வு திரும்ப பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு ஏற்காததால், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுகவைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து பாஜகவும் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தது.