போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தாழ்த்தப்பட்ட அரசு அதிகாரியை சாதியை சொல்லி திட்டிய விவகாரத்தால், அவரிடம் இருந்து போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை.
இப்படிபட்ட நேரத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவரிடம் இருந்து ரூ. 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, திமுகவைச் சேர்ந்த முன்னணி அமைச்சர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி சரவணக்குமார், திருச்சியில் இருந்து காரில் சென்னை நோக்கி இன்று நண்பகல் புறப்பட்டுள்ளார். அவரது காரில் கட்டு கட்டுக்காக பணம் எடுத்துச் செல்லப்படுவதாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விழுப்புரம் புறவழிச்சாலையில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சரவணக்குமார் காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது காரில், துணிப் பை ஒன்றில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மொத்தமாக ரூ.40 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்து சரவணக்குமாரையும் அவருடன் வந்த உதவியாளர் மணி என்பவரையும் அழைத்துக் கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
40 லட்சம் ரூபாய் எப்படி வந்தது? திருச்சியில் இருந்து சென்னைக்கு எதற்காக கொண்டு செல்லப்பட்டது? அங்கு யாருக்கு இந்தப் பணம் கொடுக்க திட்டமிட்டிருந்தீர்கள் என்பன உள்பட பல்வேறு கோணங்களில் சரவணக்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆதிதிராவிட நலத்துறை அலுவலரிடம் இருந்து ரூ.40 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர் என்ற தகவல் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் பரவியவுடனேயே, அந்த துறையில் கட்டட ஒப்பந்தம், சமையல் பணிநியமனம், விடுதி பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பலரிடம் லஞ்சப் பணம் வசூலித்து சென்னைக்கு எடுத்து வந்தார்? என சந்தேக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்..
அவர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் எழிலகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரக உதவி செயற்பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை.மேற்கொண்டு வருகின்றனர்.. அடுத்து யார் சிக்குவார் என ஆதிதிராவிடர் துறை பணியாளர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
.