Thu. Nov 21st, 2024

சிங்காரச் சென்னைக்கு மேலும் ஒரு அழகான அடையாளமாக அமைந்துள்ள சென்னை சென்ட்ரல் மத்திய சதுக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மத்திய சதுக்கம்

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தை மெட்ரோ ரயில் நிலையத்துடனும் இணைக்கும் வகையில் மத்திய சதுக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான கட்டமைப்பில் ஒரு பகுதி முடிவடைந்த நிலையில், கலைநேர்த்தியுடன் அழகுற அமைக்கப்பட்ட சதுக்கத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. சுரங்க நடைபாதை ரூ.34.22 கோடியில் நிலமேம்பாட்டு வசதிகளுடன் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்ட மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான சுரங்க நடைபாதை திறப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் அங்கு அமைக்கப்பட்ட சென்னை மாநகரின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையிலான புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து சுரங்க நடைபாதையில் அமைக்கப்பட்ட தானியங்கி படியில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை மத்திய சதுக்கம், நிழல் தரும் செடிகள், அழகிய செடிகள் மற்றும் நீரூற்றுகளுடன் பார்ப்போரின் கண்களுக்க விருந்து வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

500 கார்கள், 1500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் எளிதாக நடந்து செல்லும் வகையிலான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தில் சுரங்கப்பாதை வழியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொதுமக்கள் சிரமமின்றி செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னைக்கு அழகு சேர்க்கும் வகையில் எண்ணற்ற அடையாளங்கள் உள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் இருந்தும் ரயில் மூலம் சென்னைக்கு வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அழகுற அமைக்கப்பட்டுள்ள மத்திய சதுக்கம், மேலும் ஒரு சிறப்பான அடையாளமாக திகழும் என்கிறார்கள் கலை ஆர்வலர்கள்.