முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இருந்தே ராஜ கண்ணப்பன் மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன.
வட்டாரப் போக்குவரத்துப் பிரிவில் வாகன ஆய்வாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகிய பதவிகளுக்கு முந்தைய அதிமுக ஆட்சியை விட அதிகளவு லட்சம் கேட்டு பெற்று, பணியிடம் மாற்றம் செய்யப்படுவதாக புகார்கள் அதிகளவில் எழுந்தன.
தொடர்ந்து, கடந்த ஆண்டு (2021) தீபாவளி திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக, ஆவின் நிறுவனத்திடம் இருந்து இனிப்புகளை கொள்முதல் செய்வதற்குப் பதிலாக தனியார் விற்பனையாளரிடம் இருந்து கொள்முதல் செய்ய அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசுத்துறை சார்பில் இனிப்புகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் போது ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே பெற வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் நிர்வகிக்கும் போக்குவரத்துத் துறையில் முறைகேடுகள் அதிகளவு நடைபெறுவதை அறிந்து அவர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தியடைந்துள்ளதாக ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின. அப்போதும், அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாமல் அதிகார திமிருடனேயே நடந்து கொண்டார்.
அவரது துறையின் கீழ் உள்ள வட்டாரப் போக்குவரத்துப் பிரிவில் அலுவலர்கள் பணியிட மாற்றத்திற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்படுகிறது என்று அந்த துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளே முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரிடையாக முறையிடும் அளவுக்கு போக்குவரத்துறையில் ஊழல்கள் அதிகரித்தன.
அடுக்கடுக்கான புகார்கள் வந்ததையடுத்து, போக்குவரத்துறையில் நடைபெற்று வரும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில் போக்குவரத்துத்துறையில் லஞ்ச வேட்டையில் தீவிரம் காட்டி வந்த உயரதிகாரிகளை குறி வைத்து ரகசியமாக கண்காணிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்த நடராஜன், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்காக லஞ்சப் பணம் பெற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார், நடராஜன் அறையில், அலுவலக நாளிலேயே அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது அறையில் கட்டுக்கட்டாக 35 லட்சம் ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை லஞ்ச ஒழிப்புப் போலீசார் பறிமுதல் செய்ததுடன் வழக்குப்பதிவு செய்தும் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ஆணையர் நடராஜனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு லஞ்சப் பணத்தை திரட்டி தருவதற்காக பதவி உயர்வு கேட்டு வந்த அலுவலர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பெற்றதாக நடராஜன் கூலாக தெரிவித்ததாக தகவல் கிடைத்தது.
லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கிய நடராஜன், திருநெல்வேலிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிகழ்வு உள்பட பல்வேறு நிகழ்வுகள் துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு எதிராக வரிசை கட்டியதையடுத்து, அவர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியடைந்திருந்தார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், அமைச்சர் கண்ணப்பனுக்கு எதிராக கடும் புகார் ஒன்றை சுமத்தினார். தன்னை சாதிப் பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தியதுடன், பணியிடம் மாற்றம் செய்திடுவேன் என்று மிரட்டியதாகவும் கண்ணப்பனுக்கு எதிராக புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து, முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது..ராஜ கண்ணப்பன் வசமிருந்த போக்குவரத்துத் துறையை பறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தூக்கியடித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது..
முதல்வர் கோபம்
பொதுவாக நிதிநிலை அறிக்கை தாக்கலைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை சார்பில் மான்ய கோரிக்கையை சட்டப்பேரவையில் அந்தந்த துறையைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். துறை மான்ய கோரிக்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அமைச்சருக்குதான் துறை ரீதியிலான அனைத்து விவரங்களும் முழுமையாக தெரியும் என்பதால் நிதிநிலை கூட்டத்தொடரில் அமைச்சரவை மாற்றம், துறை மாற்றம் என்பது எப்போதுமே நடைபெறாது.
ஆனால், ஏப்ரல் முதல் வாரத்தில் மான்ய கோரிக்கைக்கு தாக்கல் செய்வதற்காக மீண்டும் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், போக்குவரத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜகண்ணப்பன் நீக்கப்பட்டிருக்கிறார் என்றால், அவரது நாகரிகமற்ற நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் முதல்வர் மு.கஸ்டாலின் அதிர்ச்சி வைத்தியம் வழங்கியிருக்கிறார் என்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பிய நாளிலேயே செல்வாக்கு மிக்க துறையை பறித்து டம்மியான துறையை ஒதுக்கும் அளவுக்கு, ராஜகண்ணப்பன் மீது முதல்வருக்கு வெறுப்பு வந்துவிட்டது என்கிறார்கள் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள்.
மேலும் அரசு அதிகாரி மீது சாதி ரீதியிலான தாக்குதலை ராஜகண்ணப்பன் நடத்தியதும் அதிகளவு வருத்தத்தை முதல்வருக்கு ஏற்படுத்திவிட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள், ராஜகண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துறை பறித்ததையடுத்து, துறை அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் நிம்மதியடைந்துள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.