Sat. Nov 23rd, 2024

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த 1974 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்களை, எந்தவிதமான போக்குவரத்து ஆவணங்கள் இல்லாத போதும் அனுமதிக்க வேண்டும் என்றும், இந்திய மற்றும் இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள பிரிவுகளை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, மீனவர்கள் எதற்காக எல்லை தாண்டி செல்கின்றனர்? இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். அன்னிய நாட்டை இந்நீதிமன்ற உத்தரவால் நிர்வகிக்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், மீனவர்கள் கைதுக்கு அனுதாபம் தெரிவிக்க மட்டுமே முடியும். இந்திய அரசு ராஜாங்க ரீதியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கும் யோசனை தெரிவித்தனர்.

தொடர்ந்து, 68 மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த வழக்கை முடித்து வைத்தனர்.