Sun. Nov 24th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் மற்றும் அபுதாபி சுற்றுப்பயணத்தை தமிழகம் மட்டுமின்றி தரணியெங்கும் நிறைந்திருக்கும் தமிழ்ப் பெருங்குடிமக்கள் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடி கொண்டு இருக்கின்றனர். முதல்முறையாக முதல்வராகவும் ஆட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வரும் மு.க.ஸ்டாலினின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பதால், அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர் என்ற ஒற்றைப் புள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசுமுறைப் பயணத்தை அவரவர் உள்ளத்தின் எழுச்சிக்கு ஏற்ப, முகநூலில், டிவிட்டரில் முதல்வரின் துபாய் நிகழ்வுகளின் புகைப்படங்களை ஏற்றி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதைப்போலவே, திமுகவில் எந்தவொரு பதவியும் வகிக்காத பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புகளும், சென்னையில் இருந்து முதல்வர் துபாய் புறப்பட்டுச் சென்ற மார்ச் 24 ஆம் தேதி முதல் நேற்றைய இரவு வரை அவர் பங்கேற்ற நிகழ்வுகளின் புகைப்படங்களை தங்கள் முகநூல் பக்கத்தில் அல்லது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஏற்றி லைக்குகளை அள்ளிக் குவிக்கின்றனர்.

இப்படி, திமுகவினரை உள்ளடக்கி ஒட்டுமொத்த தமிழர்கள் மனதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு, எம்பியாக இருக்கும் திமுக பிரபலங்களில் 95 சதவீதம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் அதிர்ச்சிக்குரிய தகவல்.

அதுவும் அவரது சகோதரியும் திமுக மாநில மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி, அவரது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து ஒரு புகைப்படத்தை கூட பதிவேற்றம் செய்யவில்லை.

இத்தனைக்கும் அவருக்கு மிகவும் பிடித்தமான இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசைக் கோர்வையில் ஒலித்த மூப்பில்லா தமிழே, தாயே பாடல் குறித்தோ, உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் செம்மொழியின் புகழைப் பரப்பிய வரலாற்றில் பதிவாகிவிட்ட ஒளிவெள்ளத்தைப் பற்றியே ஒரு வரியோ, ஒரு புகைப்படமோ கூட கனிமொழி கருணாநிதி டிவிட்டர் பக்கத்தில் பார்க்கவே முடியவில்லை. இத்தனைக்கும் அவரது டிவிட்டர் பக்கத்தில் நாள் தவறாமல் முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றே வந்து கொண்டிருக்கின்றன.

அவரைப் போலவே சகோதரி என்ற முறையில் உறவு கொண்டாடும் இன்னொரு விவிஐபியும் தனது சகோதரையும், முதல்வரையும் கண்டு கொள்ளாததுதான் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வரின் துபாய் சுற்றுப்பயணத்திற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து வரும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வருடன் இணைந்து துபாய் பயணம் மேற்கொண்டிருக்கும் மகத்தான, வரலாற்று நிகழ்வைப் பற்றி அவரது சகோதரியும் எம்பியுமான தமிழச்சி தங்கபாண்டியனும் ஒரு வரிச் செய்தியாகவோ, ஒரு புகைப்படமாகவோ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தனது சகோதரருக்கு புகழ் சேர்க்கும் எண்ணம் இல்லாமல் இருந்து கொண்டிருக்கிறார்.  

இவரும் டிவிட்டர் பக்கத்தில் நாள் தவறாமல் முக்கிய தகவல்களை பதிவு செய்ய தவறுவதே இல்லை..

திமுக என்ற அடையாளத்தை கடந்து ரத்த உறவுகளான இரண்டு பெண் பிரபலங்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கண்டு கொள்ளாதைப் போலவே, சென்னையில் மு.க.ஸ்டாலின் இருந்தால், அவரைச் சுற்றி அரண் போல வளைய வரும் மூத்த எம்பிக்கள், முன்னணி தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆ.ராஜா ஆகியோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஒரு வரி அளவுக்குக் கூட தகவல் தெரிவிக்கவில்லை. முதல்வர் பங்கேற்ற ஒரு போட்டோ கூட அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் இல்லை..

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தால் மட்டுமே கண்டு கொள்வோம். வெளியூரோ, வெளிநாடோ சென்றால் நமக்கென்ன வந்தது என்ற மனநிலையில் இருக்கிறார்களா இவர்கள் என்ற சந்தேகம்தான் எழுகிறது.

இந்தக் கூட்டத்திற்குள்ளேயே சூப்பர் எம்பிக்களாக ஒன்றிரண்டு விவிஐபிகளும் பாராட்டுகளை பெறுகிறார்கள். அவர்களில் முக்கியமானவராக, தஞ்சாவூர் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் நிகழ்வுகளை மார்ச் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி சபாஷ் பெறுகிறார்.

இளம் எம்பி என்ற வரிசையில், சேலம் எஸ்.ஆர்.பார்த்திபனையும் வெகுவாக பாராட்டலாம். அவரது டிவிட்டர் பக்கத்திலும் மார்ச் 24 முதல் 27 ஆம் தேதி வரையிலான முதல்வரின் நிகழ்வுகள் குறித்த தகவலும், புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

முதல்வரின் உறவினரும் மத்திய சென்னையின் எம்பியுமான தயாநிதி மாறனும், துபாய் சுற்றுப்பயணத்தை கண்டுகொள்ளவே இல்லை. அதைப்போலவே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தும் முதல்வரின் துபாய் பயணம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எதையும் பதிவேற்றம் செய்யவில்லை.

இதே லிஸ்டில்தான் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனும் வடசென்னை எம்பியுமான மருத்துவர் கலாநிதி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் புதல்வர் கௌதம சிகாமணி எம்பி ஆகியோரும் முதல்வர் துபாய் சுற்றுப்பயணம் குறித்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

தருமபுரி எம்பி மருத்துவர் செந்தில்குமார், திண்டுக்கல் எம்பி பி.வேலுசாமி, திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம்,  பொள்ளாச்சி எம்பி சண்முக சுந்தரம், தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார், காஞ்சிபுரம் எம்பி ஜி செல்வம் ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நான்கு நாள் அரசு முறைப் பயணம் குறித்த ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

திருவண்ணாமலை எம்பி சிஎன் அண்ணாதுரை, முதல்வரின் மீதான விசுவாசத்தை துளியளவு வெளிப்படுத்தியுள்ளார். ஒரே ஒரு பதிவும் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார்.

இவர்களில் மயிலாடுதுறை எம்பி திருவிடைமருதூர் எஸ்.ராமலிங்கம் கொஞ்சம் வித்தியாசமானர். முதல்வரின் 4 நாள் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைக் கூடாத பகிர்ந்து கொள்ளாத இவர், மார்ச் 27 ஆம் தேதியன்று  சுவாமிமலைக்கு வருகைப் புரிந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசிப் பெற்ற புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.  

உதயசூரியன் சின்னத்தில் நின்று எம்பி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரபலங்களின் நிலையே இப்படி என்றால், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாமக்கல் எம்பி ஏகேபி சின்ராஜ், விழுப்புரம் ரவிக்குமார், ஈரோடு கணேசமூர்த்தி, பெரம்பலூர் பாரிவேந்தர் (திமுக கூட்டணியில் தற்போது இல்லை) இவர்களும் முதல்வரின் துபாய் சுற்றுப்பயணத்தை கண்டு கொள்ளவே இல்லை என்பதில் என்ன அதிர்ச்சி வந்துவிடப் போகிறது..

ஆனால், அரசியலையே வாழ்வியலாக கொண்டவர்களை விட, துபாயில் களைகட்டிய நம்மில் ஒருவர், நம்ம முதல்வர் என்ற நிகழ்வில் வேட்டி சட்டையில் தோன்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினை உணர்ச்சிப் பொங்க வாழ்த்தி வரவேற்று உணர்ச்சிப் பொங்க முழக்கங்களை எழுப்பியவர்கள், சாதி, மதங்களைக் கடந்து தமிழர் என்ற ஒற்றைப் புள்ளியில் திரண்ட பல்லாயிரக்கணக்கானோர் பச்சைத் தமிழர்கள்தான்.அவர்கள் லாப,நட்ட கணக்கைப் பார்க்காமல் தாய் மண்ணை ஆளும் முதல் அமைச்சருக்கு அளித்த வரலாறு காணாத வரவேற்பு முழக்கங்களால் பன்முகத்தன்மை கொண்ட துபாயையே கிடுகிடுக்க வைத்துவிட்டது என்கிறார்கள் அந்நிய மண்ணில் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ள தமிழர்கள்.