Sat. Nov 23rd, 2024

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதை

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி….

எனும் பாடலுக்கு ஏற்ப பக்கத்து மாநிலத்தில் ஆளுமை மிகுந்த பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தை சேர்ந்த விவிஐபியின் புகழுக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் ஒரு விவகாரம் நீறு பூத்த நெருப்பாக டெல்லியில் புகைந்து கொண்டிருக்கிறது என்று கிசுகிசுக்கிறது தலைநகரில் உள்ள பட்சி ஒன்று.

தேர்தல் களத்தில் வெற்றி பெறாத அந்த விவிஐபிக்கு, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த அதிர்ஷ்டக் காற்று, பக்கத்து மாநிலத்தில் அதிகாரம் செய்யும் நல்வாய்ப்பை உருவாக்கிவிட்டது. ஒருமுறை அடித்த அதே அதிர்ஷ்டக் காற்று மறுமுறையும் அடிக்க, அதேபோல மற்றொரு ஆட்சி அதிகாரம் செய்யும் வாய்ப்பையும் டெல்லி மேலிடம் வாரி வழங்கியது.

இப்படி இருமுறை அடித்த அதிர்ஷ்டக் காற்று, தொடர்ந்து வீசிக் கொண்டே இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு தேசத்தின் உயர்ந்த பதவிக்கும் தமிழக விவிஐபியின் பெயர் பலமாகவே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிர்ஷ்டக் காற்று எப்போது திசை மாறும் என்பது தெரியாது. கொஞ்சம் திசை மாறினால் முதலுக்கே மோசம் ஆகிவிடும் என்பதை போல, அந்த விவிஐபியின் வாரிசால் ஏற்பட்ட இழுக்கு, அந்த தமிழக விவிஐபியின் மீது டெல்லி தலைமை கடும் கோபம் கொள்ள வைத்துவிட்டது என்பதுதான் டெல்லியில் இருந்து கிடைத்திருக்கிற அதிமுக்கியமான தகவல்.

தமிழகத்தில் சேவை மிகுந்த படிப்பை முடித்து, தந்தையை போல தேசிய கட்சியில்  இணைந்து, பாரம்பரியமாக குடும்பம் பின்பற்றிய தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி எதிர்துருவமாக விளங்கிய மற்றொரு தேசிய கட்சியில் இணைந்து செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, அக்கட்சியின் தமிழகத் தலைமை பொறுப்பை ஏற்றார் அந்த போராளி.  அனுதினமும் போராட்ட களத்தில் முழங்கியதால், அவரின் துணிச்சலை கண்டு வியந்து போன டெல்லி மேலிடம், அக்கட்சியின் முன்னணி தலைவர்களே அதிர்ச்சியாகும் வகையில், அதிகாரமிக்க கீரிடத்தை சூட்டி, பக்கத்து மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது. 

இயல்பாகவே இளகிய மனம் படைத்தவரும், நேர்மையில் இருந்து துளியும் தடம் மாறாமல் அரசியலையும், அரசு நிர்வாகத்தையும் கையாள வேண்டும் என உறுதி கொண்டவருமான அந்த தமிழக விவிஐபிக்கு, சென்ற இடத்திலும் சிறப்புகள் சேர்ந்தன.

கண்ணியத்துடன் அரசு நிர்வாகத்தை வழிநடத்திச் செல்லும் அவரின் நேர்மைக்கு வெகுமதியாக, நாட்டின் உச்சபட்ச பதவிக்கு அவரை தேர்வு செய்யலாம் என்று டெல்லி தலைமை யோசித்துக் கொண்டிருந்தது. டெல்லியில் ராஜபாட்டையோடு வாழும் வாய்ப்பு கை கூடி வரும் நேரத்தில், அவரது வாரிசால் அந்த வாய்ப்பு பறிபோய்விட்டது என்பதுதான் சோகம் என்கிறார் டெல்லி பட்சி.

தென்னகத்தில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஒரு தகவல், அசகாயசூரரான அக்கட்சியின் தேசிய தலைமையையே கொந்தளிக்க வைத்துவிட்டதாம். டெல்லியின் நிதியுதவியோடு இயங்கும் இரண்டு கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்கு இரண்டு உயர் அந்தஸ்திலான அதிகாரிகளை நியமனம் செய்யும் விவகாரத்தில், இரண்டு பதவியிடங்களுக்கும் சுளையாக காசு பார்த்துவிட்டார் அவரது ஆண் வாரிசு என்றும், அது தெரியாமல் வாரிசு பரிந்துரைத்த இரண்டு பேரையும் டிக் அடித்து தமிழகத்து விவிஐபி கையெழுத்து போட்டுவிட்டாராம்.

மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ தகவல் தெரிவிக்காமல் அந்த விவிஐபி, புத்திரர் பாசத்தில் செய்த நியமன விவகாரம் டெல்லி தலைமைக்கு புகாராக சென்று விட்டது. நேர்மையின் சின்னம் என பெயரெடுத்த அந்த விவிஐபிக்கு, தேசத்தின் உயர்த்த பதவியை வழங்கலாம், டெல்லியிலேயே வாழ வைக்கலாம் என இறுதி முடிவு எடுத்திருந்த டெல்லி மேலிடத்தின் அசகாயசூரர், தமிழக விவிஐபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்றும், பணத்தை பெற்றுக் கொண்டு உயர் கல்வியாளர்களுக்கு வழங்கிய நியமன விவகாரம் விஸ்வரூபம் எடுத்தால், அந்த விவிஐபி தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் அதிகாரமிக்க பதவியும் கூட பணால் ஆகும் என்கிறார்கள் டெல்லியில் இருந்து பேசிய நம்பிக்கைக்குரிய பல்கலைக்கழக அதிகாரிகள்.

ஆசைக்கு ஒன்றாகவும் ஆஸ்திக்கு ஒன்றாகவும் அழகான குடும்பத்தை வழிநடத்திய அந்த விவிஐபிக்கு, ஆஸ்தி வாரிசால்தான் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறது என்று கூறும் அந்த குடும்பத்திற்கு நெருக்கமான விசுவாசிகள், ஏற்கெனவே ஒருமுறை சென்னை விமான நிலையத்தில் ஆஸ்தி வாரிசு போட்ட கூச்சலால், அந்த விவிஐபி கூனி குறுகிப் போனது இன்றைக்கும் கண் முன்னே விரிகிறது என்றார் அந்த விசுவாசி.

தமிழகத்திற்கு மீண்டும் ஒருமுறை தேசிய அளவின அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்பு கைகூடி வந்த நேரத்தில், வாரிசின் பேராசையால், தமிழக விவிஐபி டெல்லியில் வாழும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் பறிபோய்விட்டது என்றார் சோகமாக அந்த விசுவாசி..