சாணக்யா இணையதள ஊடகத்தின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே, துக்ளக் ஆசிரியர் மறைந்த சோவை போல, தமிழக அரசியலில் ராஜதந்திரி என்ற நிலையை அடைய முயற்சிக்கிறாரோ? என்று சந்தேகத்தை கிளப்பினார்கள், அவருக்கு மிகமிக நெருக்கமான விசுவாசிகள் சிலர்.
நல்லரசுவிடம் அவர்கள் மனம் திறந்து பேசியதை அப்படியே பதிவு செய்கிறோம். எந்தவொரு விருப்பு, வெறுப்பும் இல்லாமல்…..
தொலைக்காட்சி நேர்காணல் மற்றும் விவாதங்களில் தனித்துவமாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர் ரங்கராஜ் பாண்டே. அவரின் தனித்த பாணியின் காரணமாகவே, அவரின் நேர்காணல்கள், விவாதங்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் பார்க்க தொடங்கினோம். தொலைக்காட்சி பணியில் இருந்து விலகி வந்து சாணக்யா எனும் பெயரில் இணையத் தள ஊடகத்தை துவக்கி, குறுகிய காலத்திலேயே பல லட்சம் வாசகர்களை கவர்ந்து இழுத்திருக்கிறார் என்பதை நினைத்து பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
சாணக்யா ஊடகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் பல்வேறு அம்சங்களில், அதன் ஆண்டு விழா முதன்மையானது. கடந்த 2 ஆண்டுகளைப் போலவே 3 ஆம் ஆண்டு விழா நிகழ்வையும் கடந்த சனிக்கிழமை மார்ச் 19 ஆம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு பள்ளியில் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார் பாண்டே.
அந்த விழாவுக்கான அறிவிப்பை அவர் வெளியிட்ட நேரத்தில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மதுரை ஆதினம் ஆகியோருடன் ஆர்.எம்.வீரப்பன் பெயரையும் விளம்பரப்படுத்தியிருந்தார். விருது பெறுபவர் பட்டியலில் அவரின் பெயரும் இடம் பெற்றிருந்ததைப் பார்த்து எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாகிவிட்டது.
1991 ஆம் ஆண்டு வாக்கிலேயே அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போனவர் ஆர்.எம்.வீரப்பன். அறமற்ற அவரின் செயல்களால், அவரை ஆளாக்கிய மறைந்த முதல்வர் புரட்சித்தலைர் எம்.ஜி.ஆராலேயே ஒதுக்கி வைக்கப்பட்டவர்.
எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்போதே மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஆர்.எம்.வீரப்பன் இழைத்த கொடுமைகளை இன்றளவிலும்கூட அதிமுகவினர் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு தலைமை ஏற்ற செல்வி ஜெயலலிதா, துவக்கத்திலேயே ஆர்.எம்.வீரப்பனை செல்லா காசாக்கிவிட்டார்.
தன்னுடைய இருப்பை வெளிப்படுத்துவதற்காக மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியோடு நெருக்கம் காட்டியவர், ஆர்.எம்.வீரப்பன். அவரின் அனைத்து சித்து வேலைகளையும் நன்கு அறிந்தவர் என்பதால், கடைசி வரை அவரை கிட்டவே நெருங்க விடாமல், தூரத்திலேயே வைத்திருந்தார், கலைஞர். திமுக தலைவரின் வழியில் வந்த முன்னோடிகளில் பெரும்பான்மையானோர் இன்றைய தேதியிலும் கூட ஆர்.எம்.வீரப்பனுக்கு கிடைக்கும் எந்தவொரு முக்கியத்துவத்தையும் ரசிப்பதில்லை.
இப்படி, திராவிட அரசியலில் ஓரம் கட்டப்பட்ட ஆர்.எம்.வீரப்பனை எதற்காக தேர்வு செய்தார். சாணக்யா விழாவில் அவருக்கு விருது கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று யோசிக்கும்போதுதான், தன் மீது விழும் சங்கி எனும் விமர்சனத்தை தவிர்க்க, மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ பாணியான அரசியலை கையில் எடுத்து, தன்னையும் ஒரு ராஜதந்திரியாக தமிழக அரசியலில் நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறாரா பாண்டே என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனை நிரூபிக்கும் வகையில்தான் மார்ச் 19 ஆம் தேதி நடைபெற்ற 3 ஆம் ஆண்டு விழாவில் ஆர்.எம்.வீரப்பன் பேசிய பேச்சும் அமைந்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் நடத்தும் விழாக்களுக்கு வரும் பார்வையாளர்கள் பெரும்பான்மையானோர் ஒருசார்பு நிலை கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆர்.எம்.வீரப்பனுக்கு விருது கொடுப்பதன் மூலம் நடுநிலை நிலை பார்வையாளர்களை இழுத்து விட முடியும் என்று பாண்டே போட்டியிருந்த கணக்கு, 3 ஆம் ஆண்டு விழாவில் எடுபடவில்லை.
விழா அரங்கில் நிறைந்திருந்த இந்து முன்னணி நிர்வாகிகள், பாஜக ஆதரவாளர்கள், பிரதமர் மோடி பக்தர்கள் என்ற வகையில், அனைவருமே ஆர்.எம்.வீரப்பனின் பேச்சை கேட்டு மனம் வெதும்பினார்கள்
பாண்டே மீது ஒருசாரார் வை த்திருக்கும் நம்பிக்கை ஒவ்வொரு ஆண்டும் தளர்த்து கொண்டே போவதை பார்க்க முடிகிறது.
முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற விஐபிகள், இரண்டாம் ஆண்டு விழாவில் மிஸ் ஆனார்கள். அதேபோல, கடந்த ஆண்டு விழாவில் பங்கேற்றவர்கள், இந்த ஆண்டு விழாவில் பார்க்க முடியவில்லை. புதிய பார்வையாளர்கள் வருகை என்பது மிகமிக குறைவாகவே இருந்தது. அதுவும் ஊடகத்துறையில் கொடி கட்டி பறக்கும் ஜாம்புவானாக சித்தரிக்கப்படும் பாண்டே விழாவுக்கு ஒன்றிரண்டு ஊடகவியலாளர்கள் மட்டுமே தலையை காட்டியிருந்தார்கள். அவர்களும் கூட பாண்டே ஒரு பேட்டி கொடுத்தால் தங்களின் யூ டியூப் சேனல் பிரபலமாகிவிடாதா என்ற ஆசையில் வந்தவர்கள் மாதிரியேதான் தோன்றியது.
ஆளுநர், ஆதினம் அமர்ந்திருந்த மேடைக்கு பெருமை சேர்ப்பது போல அமையவில்லை ஆர்.எம்.வீரப்பனின் பங்களிப்பு என்று எங்களுக்கு தோன்றியதைப் போலவே, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் தோன்றியிருக்கிறது.
மாற்றுக் கருத்து கொண்டவர்களை எல்லாம் மேடையில் வைத்து துக்ளக் ஆண்டு விழாவை மறைந்த சோ நடத்தினார் என்றால், அவரது விழாவில் பங்கேற்ற அனைவருடனும் அவர் சமகாலத்தில் பயணித்தவர். அதைவிட சிறப்பாக தேசிய அளவில் செல்வாக்குமிகுந்த அனைத்து அரசியல் தலைவர்களிடமும் சோ கொண்டிருந்த அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு, அவரை உயர்ந்த மனிதராக பார்க்கும் பண்பாகவே அவரது இறுதிகாலம் வரை அமைந்திருந்தது.
நேரடி அரசியலில் சோ காலடி எடுத்த வைத்த நிமிடம் முதல் இறுதிகாலம் வரை திராவிடத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டே இருந்தார். அவரது இடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் இன்றைக்கு மட்டுமல்ல, வரும் காலத்தில் நினைத்தாலும் கூட அவர்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கும்.
தேசிய அளவில் ஒன்றிரண்டு பிரபலங்களிடம் கிடைத்திருக்கும் அறிமுகம், தன்னை தமிழகத்தின் ராஜதந்திரியாக மாற்றிவிடும் என்று நினைத்து பாண்டே செயல்படுவாரானால், அது விஷப்பரிட்சையாகதான் அமைந்துவிடும் என்பதுதான் எங்களுக்கு இருக்கும் கவலை.
சோவிடம் அரிய பண்புகள் நிறையவே இருந்தன. அவரை கடுமையாக எதிர்ப்பவர்களை கூட நேருக்கு நேர் எதிர்கொள்ள நேரிடும் நிகழ்வுகளில் மாறாத புன்னகையுடன் பேசுவதும், அவருக்கே உரிய கிண்டலடித்து கலாய்க்கும் தன்மையாலும், எதிரியை கூட இளக வைத்துவிடும். சோவிடம் காணப்பட்ட ஒன்றிரண்டு பண்புகளை பாண்டே வளர்த்து கொள்வது அவர் மேற்கொண்டிருக்கும் பயணத்திற்கு வலு சேர்க்கும். ஆனால் ராஜதந்திரியாகும் திட்டத்திற்கு கைகொடுக்காது.
தன் மீது குத்தப்படும் சங்கி என்ற அடையாளத்தை கண்டு பொங்கும் பாண்டே, தீவிர வலதுசாரி சிந்தனையில் இருந்து விடுபட்டு,ஊடகவியலாளருக்குரிய மாண்போடு நடந்து கொண்டால், அவரை பின்தொடர்பவர்களின் கூட்டம் ஒரு வண்ணத்தினராக இல்லாமல் பரந்த மனம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று ஒரே மூச்சில் கூறி முடித்தார்கள் பாண்டேவின் விசுவாசிகள்.
பாண்டேவின் நல்ல எண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல பேராற்றல் துணை நிற்கட்டும்….