Sun. Nov 24th, 2024

 குமுதம் குழுமத்தின் முன்னாள் மூத்த செய்தியாளர் மணி ஷ்யாமை சந்தித்து பேசும் வாய்ப்பு நேற்று முன்தினம் (மார்ச்19) கிடைத்தது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான துறை வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டுக் கொண்டிருந்த அவர், நிதிநிலை அறிக்கைகளைப் பற்றி மேலோட்டமாக செய்திகள் ஒளிப்பரப்படுகின்றன. வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி துளியளவு புகழுரையே இல்லை என்றார்.

முந்தைய ஆட்சிக்காலங்களில் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, முதல்வர்களை வானுயர புகழ்ந்து பேசுவதை காது கொடுத்து கூட கேட்க முடியாத நிலையில்தான் இருந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில், அதுபோன்ற புகழுரைகளே இடம் பெறவில்லை என்பது கவனிக்கதக்க அம்சம் என்றார் மணி ஷ்யாம்.  

எனக்கும் கூட நியாயமாகதான் தோன்றியது. தன்னைப் பற்றிய புகழுரையே வேண்டாம் என்று கண்டிப்பு காட்டுகிற முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்வது, இளம்தலைமுறையினருக்கு புதிய அரசியல்பாதையை காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

புகழ்வதற்கு தனக்கொரு வாய்ப்பு கிடைத்திருக்கிற போது முதல்வரின் உள்ளத்தை மகிழ்விக்கும் அருமையான தருணத்தை தவிர்க்கும் அளவுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் துணிவு காட்டியிருக்கிறார்.  

நிதி நிலை அறிக்கையைப் போலவே, வேளாண்மைத் துறைக்கும் தனியாக தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையிலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றிய புகழுரைகள் இடம் பெறவில்லை. நிதியமைச்சரோடு வேளாண் துறை அமைச்சரை ஒப்பிடுகிற போது, கட்சியிலும், ஆட்சியிலும் முதன்மை பெற்றிருப்பவர் என்பதால், சுய சிந்தனையோடு செயல்பட்டு இருக்கிறார் என்பதும் பாராட்டுதலுக்குரியதே. (நல்லரசுக்கும் அமைச்சருக்கும் இடையே வாய்க்கால் தகராறு இருந்தது என்பது தனிக்கதை)

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த மே மாதம் பதவியேற்றவுடனேயே குறுகிய நாட்களிலேயே பொது மற்றும் வேளாண் துறைக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. அந்த இரண்டு அறிக்கையில் இடம் பெற்ற அம்சங்கள் அனைத்துமே, இதற்கு முன்பு ஆட்சிக்கட்டிலில் இருந்த அரசாங்கங்களை விட, புதிய பாதையில் பயணிக்கிற அரசாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திகழப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுபவையாகவே அமைந்திருந்தது.

இந்த வாரம், இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நிதிநிலை அறிக்கைகளுக்கும் தயாரிப்புக்கான கால அவகாசம் போதுமானதாக இருந்ததால், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாத விழிகளை விரிய வைக்கும் அம்சங்கள் தற்போதைய நிதிநிலை அறிக்கைகளில் இடம் பெற்று, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன.

 தமிழக மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை ஆழ்ந்து, ஆராய்ந்து ஆழ்கடலில் முத்துகளை எடுக்கும் போது உயிரையே துச்சமென நினைப்பார்களே மீனவர்கள், அதற்கும் மேலாக, இரண்டு நிதி நிலை அறிக்கைகளுமே தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒவ்வொரு அறிவிப்புகளையும் ஆச்சரியத்தோடு விவரித்துக் கொண்டிருக்கிறார்கள் பல்துறை நிபுணர்கள்.

இரண்டு துறைக்கான நிதி நிலை அறிக்கைகளுமே தொலைநோக்குப் பார்வையோடு தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பது இவர்களின் பார்வை.  இரண்டு நிதி நிலை அறிக்கைகளுக்கும் பின்னணியில், சரியான தூக்கம், ஓய்வு இன்றி உழைத்த தமிழக அரசின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் பலரின் பங்களிப்பை பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை, ஊடகங்களுக்கு உண்டு.  அமைச்சரவையோடு அன்றாடம் தொடர்பில் இருக்கும் உயர் அதிகாரிகளின் பணி என்பது, பூமிக்கடியில் பரவும் வேர் போன்றது.

பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், நிதித்துறை செயலாளர் நா.முருகானந்தம் ஐஏஎஸ், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் சி. சமயமூர்த்தி ஐஏஎஸ் மற்றும் துறை வாரியான உயர் அதிகாரிகள், அலுவலர்கள் பலரின் கடும் உழைப்பு, நிதி நிலை அறிக்கைகளில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. 

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்த நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கொள்கை முழக்கங்கள் அதிமான இடத்தைப் பிடித்திருந்தாலும்கூட, வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு வரியுமே, புதுமையை, பசுமையை படைக்கும் தமிழகத்திற்கான அஸ்திவார கற்களாக அமைந்திருக்கின்றன என்கிறார்கள், பல்துறை நிபுணர்கள்.

உணவே மருந்து என நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வாழ்வியல் நெறிமுறைகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கும், கலப்படமற்ற,பாரம்பரிய உணவுகளே நோய்நொடியற்ற ஆரோக்கிய வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதை உயிர்க்கொல்லி தொற்று காலத்தில் நிலைநிறுத்த திட்டமிட்டிருப்பதும், அதற்கான செயல்திட்டங்களையும் வடிவமைத்திருப்பதிலும் அரசு உயர் அதிகாரிகளின் அசாத்திய திறமைகள் வெளிப்பட்டு இருக்கின்றன. 

ரூ.33 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை தாங்கி நிற்கும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள எண்ணற்ற புதுமையான அறிவிப்புகளில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு, உணவுப் பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு, மானாவரி நில மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.132 கோடி, புதிதாக 10 உழவர் சந்தை அமைத்தல், இயற்கை வேளாண்மை ஊக்குவித்தல், உணவுப் பூங்காக்கள், சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு மண்டலங்கள், வேளாண் பணிகளை இயந்திரமயமாக்குதல் என்ற திட்டங்களாகட்டும், இல்லங்களில் அமைக்கப்படும் மாடிவீடு தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்கு வீடு தென்னங்கன்று, மாலை நேர உணவு சந்தை என அறிவிக்கப்பட்டுள்ள 57 திட்டங்களுமே இதற்கு முந்தைய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்த்திருக்க முடியாது.

நிறைகளை சொல்வதைப் போலவே, குறைகளையும் பட்டியலிடலாம். ஆனால், புதுமையாக செய்ய வேண்டும், நிறைவாக செய்ய வேண்டும் என்ற உந்துதல், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசிற்கு இருக்கிறது என்பதை நடப்பாண்டிற்கான இரண்டு நிதிநிலை அறிக்கைகளும் பட்டுவர்த்தனமாக நிரூபித்திருக்கின்றன.

பின்லாந்து கல்விமுறையை நோக்கிய பயணமும், இஸ்ரேல் பாணியில் வேளாண்மையை மேம்படுத்தவும், தொழில்துறையில் ஜப்பான், ஜெர்மனி ஆகிய வளர்ந்து நாடுகள் வகுத்துக் கொண்டுள்ள அதிநவீனதொழில்நுட்ப மேலாண்மையை பின்பற்றுவதற்கும் தரமான பாதை வகுக்கப்பட்டிருக்கின்றன என்று மெய் சிலிர்க்கிறார்கள் பல்துறை ஆராய்ச்சி மாணவர்கள்.

ஆக மொத்தத்தில், முதல்முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின், பத்து மாத கால ஆட்சிப் பணி அனுபவத்திலேயே செஞ்சுரி அடித்திருக்கிறார். தலைமைச் செயலகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற அரசு உயர் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டங்களில் முதன்மையான ஒரு வேண்டுகோளை வைக்க தவறியதே இல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அது என்ன?.

எப்போதும் புதிதாக  மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை மேம்படுத்தும் திட்டங்களை தாருங்கள். இந்தியாவில் முதன்மை மாநிலம் என்பதை விட வளர்ந்த நாடுகளின் வழியில் தமிழகம் என்பதுதான் நமக்கு மகிழ்ச்சியளிக்கும்.

இவ்வாறாக, ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விதைத்த விதைகள், இரண்டு நிதி நிலை அறிக்கைகளிலும் வீரியமாக தலையை காட்டியிருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அதன் பயன் சிந்தாமல், சிதறாமல் அனுபவிக்கும் வரை, தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் கண் துஞ்சாது உழைக்க வேண்டும்.

முன் ஏர் காட்டும் பாதையில் தமிழக அரசை செலுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு ரிங் மாஸ்டர் ஆன தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கே இருக்கிறது.

வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்து அறிவிப்புகளையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த, சிறப்பு வல்லுனர் குழுவை அமைத்து, அதன் தலைவராக வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸை நியமித்து, அவரது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் தந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

தமிழக அரசை வழிநடத்தும் மாபெரும் பொறுப்புடன் கூடுதலாக தேசிய அளவில் தனக்கு கிடைக்கும் அங்கீகாரத்தைவிட,  தமிழ்நாட்டிற்கு தனித்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற மனப்பாங்கில் உறுதியாகவும், உண்மையாகவும் இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் முழு சுதந்திரம் கொடுத்திருப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபணமாகி கொண்டே இருக்கின்றன.

நிறைகளை மட்டுமே இன்றைய நேரத்தில் பேசி இருக்கிறோம். குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் இன்னும் அழுத்தமாக பேசுவோம்…

சிறப்புச் செய்தியாளர் தாரை வே இளமதி…