முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
30 வருடங்களுக்குமேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தன்னை ஜாமீனில் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று நண்பகல் நடைபெற்றது.
அப்போது மத்திய அரசு வழக்கறிஞரை நோக்கி, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்பது மாநில அமைச்சரவையின் முடிவுதானே? ஆளுநர் தனது விருப்பப்படி முடிவெடுப்பதற்கு அதிகாரம் உள்ளவரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. .
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்றும் தற்போது ஆயுள் தண்டனையை குறைக்க சொல்லி மனு அளித்துள்ளார் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதில் உச்சநீதிமன்றம் தீர்மானமாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்ததுடன், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் செய்த கால தாமதத்தை ஏற்க முடியாது. பேரறிவாளன் உள்ள்ளிட்டோரை விடுதலை செய்யவேண்டும் என்பது மாநில அமைச்சரவையின் முடிவு என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தபோதும் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதில் உறுதியாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. .
அதனைத்தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர், குடியரசுத் தலைவர் தனது 72-வது அரசியலமைப்பு பிரிவின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தியே முடிவெடுக்க முடியும். தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்றும் இந்த விவகாரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும்போது, தமிழக அரசு முடிவெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே அவருக்கான மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது, தற்போது மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்கி அவரை சிறையிலிருந்து விடுவிப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கேள்வி எழுப்பினர்.
பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட வாதங்களை முன்வைத்து வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கைதிகள் விடுதலை, தண்டனை குறைப்பு தொடர்பாக முடிவெடுக்க அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.
ஜோலார்பேட்டையில் மாதத்தின் முதல் வாரத்தில் அரசு அதிகாரி முன்பு ஆஜராகி பேரறிவாளன் கையெழுத்திட வேண்டும் என்றும் ஜாமீன் உத்தரவில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு, பேரறிவாளனுக்கு 3வது முறையாக பரேல் வழங்கியுள்ளதால், தற்போது அவர் ஜோலார்பேட்டையில் பெற்றோர்களுடன் தங்கியுள்ளார்.
30 ஆண்டு கால சிறை வாசத்திற்குப் பிறகு பேரறிவாளனுக்கு பிணை கிடைத்துள்ளது மிகுந்த மனநிறைவை தருவதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.