Sun. Nov 24th, 2024

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்தார். இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

கோகுல்ராஜ் மரணம், இரு மாவட்டங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கோகுல்ராஜ், காதல் திருமணம் செய்ததால், சுவாதியின் சமுதாயத்தினர் ஆணவக் கொலை செய்துவிட்டதாக கூறி கோகல்ராஜ் மரணத்திற்கு பல்வேறு தரப்பினர் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். இந்த நேரத்தில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, கொங்கு மண்டலத்தில் பிரபலமான தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உள்பட கூட்டாளிகள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவரான ஜோதிமணி, வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார்
 
மாநில போலீசாரின் விசாரணையில் இருந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. நியாயமான விசாரணை வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்தநிலையில், தீர்ப்பு தேதி இன்று வழங்கப்படும் என்று குறிப்பிட்டு, சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்காக மார்ச் 5 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் இன்று காலை கூடியதும், கோகுல்ராஜ் கொலை வழக்கு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. கோகுல் ராஜ் கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். தீர்ப்பின் முழு விவரமும் யுவராஜ் உள்ளிட்ட 11 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்பு – வழக்கறிஞர் விளக்கம்:

நேரடி சாட்சி சுவாதி பிறழ் சாட்சியாக மாறினாலும் சிசிடிவி அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு வழக்கறிஞர் மோகன் கூறினார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அறிவியல் ரீதியாக குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கு இது என்றும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிசிடிவி காட்சி வழக்கின் பிரதான ஆவணமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.