Fri. Nov 22nd, 2024

வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ள தி.மு.க.வினர், பிப். 17 ஆம் தேதி முதல் விருப்பப் மனுக்களை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிவத்தைப் பெற்றுக் கொள்பவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பொதுத்தொகுதிக்கு 25,000 ரூபாயும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும் கட்டணத்துடன் வரும் 24 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் துரைமுருகன் அறிவுறுத்தியிருந்தார்

அதன்படி, முதல்நாளான இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமைக் கழகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள் காலை முதலே குவியத்தொடங்கினர். இதனால், விருப்ப மனு விற்பனை களைகட்டியுள்ளது. விருப்ப மனுக்களை போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமாக வாங்கிய தி.மு.க. நிர்வாகிகள், 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிகளவிலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வமாக உள்ளார்கள். அதனால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் சட்டமன்ற உறுப்பினர் ஆவது உறுதி என்பதால், துணிந்து தேர்தல் களத்தை சந்திக்கவுள்ளோம். தி.மு.க. தொண்டர்களிடம் இதுவரை இல்லாத அளவுக்கு உற்சாகம் காணப்படுவதால், மே மாத தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பது உறுதி என்று உரத்த குரல்களில் செய்தியாளர்களிடம் கூறினார்கள்.