Fri. Nov 22nd, 2024

பாஜக,அமமுக பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதிமுக கொடி பறக்க வாய்ப்பில்லை…

தமிழகத்தின் தலைநகரான சென்னை, தமிழக தேர்தல் வரலாற்றில் திமுக கோட்டையாகவே திகழும் என அக்கட்சி முன்னணி நிர்வாகிகள் பெருமிதமாக கூறி வந்தாலும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையால், 1991லும் அதற்கடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவும், சென்னை மாநகரில் தனது வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டும் வகையில், சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக மீண்டும் சென்னை கோட்டையை மீட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 178 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுகவும் அதன் முன்னாள் கூட்டணி கட்சிகளும் பரிதாபமாக தோல்வியை தழுவியிருக்கின்றன.

கூட்டணி பலத்தால்தான் திமுக வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதும், ஆளும்கட்சி என்ற அதிகாரப் பலத்தால்தான் திமுக வாகை சூடியிருக்கிறது என்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இரட்டை தலைவர்கள் புழுதிவாரி தூற்றினாலும், அவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாதம் எந்தளவுக்கு சொத்தையானது என்பதை, தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன.

அதுவும், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழன்று கொண்ட பாஜகவால், அதிமுகவுக்குதான் பேரிழப்பு என நடைபெற்று வரும் பிரசாரத்திலும் உண்மையில்லை என்று அடித்துக் கூறுகிறது, தேர்தலில் பதிவான வாக்கு சதவீதங்கள்.

சென்னை மாநகராட்சிக்குப்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் திமுகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பலம் சேர்த்திருந்தாலும் கூட, அதிமுகவைப் போல திமுக தனித்து போட்டியிட்டிருந்தால், 10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக பெற்ற அவமானகரமான தோல்வியைப் போல திமுக பெற்றிருக்காது என்பதற்கும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐந்து மற்றும் நான்கு இலக்கம் என்ற அடிப்படையிலேயே திமுகவின் வாக்குகள் இருக்கும் நிலையில், கிட்டதட்ட 50 வார்டுகளில் மூன்று இலக்கம் என்ற அடிப்படையில்தான் அதிமுகவின் வாக்குகளின் எண்ணிக்கை சரிந்திருக்கும் பரிதாபத்தை தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.

ஜனநாயகத்தில் வலுவான ஆளும்கட்சியை வழிநடத்த எதிர்க்கட்சியும் பலமிகுந்ததாக இருக்க வேண்டும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் ஆணித்தரமான வாதம். அந்த வகையில், அதிமுகவும் எதிர்கால அரசியலை ஆரோக்கியமாக எதிர்கொள்ள, தனது ஈகோவை கைவிட்டு, வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும். அப்போதுதான பிரதான எதிர்க்கட்சி என்ற மரியாதையை அதிமுக தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்தை பிடிக்கும் நோக்கத்துடன் அரசியல் காய்களை நகர்த்தும் பாஜகவின் ராஜதந்திரத்தையும் தவிடிபொடியாக்க முடியும் என்கிறார்கள் அதிமுக பற்றாளர்கள்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் செல்வாக்கை மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் மாநில கட்சிகளான பாமக,  தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகளும் தேர்தல் நேரங்களில் தாங்கள் வகுக்கும் வியூகங்கள் எந்தளவுக்கு மக்கள் செல்வாக்கை பெற்று தருகின்றன என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய ஒரு நெருக்கடியை, இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள் தேர்தல் அரசியலில் ஆழ்ந்த அனுபவமுள்ள மூத்த அரசியல் தலைவர்கள். திராவிட சிந்தாந்தத்தை கடந்து மாற்று அரசியலை முன்னெடுத்துள்ள நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் மிகுந்த விழிப்புடன் களப்பணியாற்ற வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என்கிறார்கள் நேர்மையான அரசியலை விரும்பும் சமூக ஆர்வலர்கள்.

அந்தவகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்காததால், அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சென்னை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டுவதுடன், தான்தோன்றித்தனமாக செயல்படுவதையே வழக்கமாக கொண்டால், இன்றைய நிலைலயில் திமுகவுக்கு அடுத்த 2 வது பெரிய கட்சி என்ற அந்தஸ்ததையும் அதிமுக இழக்க வேண்டியிருக்கும் என்பதை சென்னை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி நிரூபித்திருக்கிறது. அதிமுகவை பின்னுக்குக் தள்ளி பாஜக 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.  

சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 200 வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அபார வெற்றி பெற்றிருந்தாலும், அதிமுக, பாஜக கட்சிகளிடையே கூட்டணி அமையாததால், அவ்விரு கட்சிகளுக்கும் ஏறக்குறைய 20 க்கும் மேற்பட்ட வார்டுகளில் அதிர்ச்சி தோல்வியை கண்டிருக்கிறது.

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும். அதுவும் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலாவின் தலைமைதான் சரியான வழிகாட்டுதலை வழங்கும் என கூறி வரும் டிடிவி தினகரனின் தலைமையிலான அமமுகவும் மிகவும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

ஒன்றிரண்டு வார்டுகளைத் தவிர, போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் அமமுக 200 வாக்குகளைக் கூட பெற முடியாமல் 5, 6 என்ற இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் பரிதாப நிலையையும் சுட்டி காட்டியுள்ளது, தேர்தல் முடிவுகள். அதே துயரமான முடிவுதான் பாமகவுக்கும் ஏற்படுத்தியிருக்கிறது சென்னை மாநகராட்சி தேர்தல்.

சென்னை புறகர் பகுதியாகவும், திருவள்ளூர் மாவட்டத்திற்குள்ளும் இடம் பெற்றுள்ள திருவொற்றியூர் மண்டலத்தில் (மண்டலம் 1) 1 வது வார்டிலேயே அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறதும் பரிதாப தோல்விக்கு நாம் தமிழர் கட்சி காரணமாக அமைந்துவிட்டது. அந்த வார்டில் திமுக பெற்றிருக்கும் 5,390 வாக்குகளை விட அதிமுக, நாம் தமிழர், அமமுக, பாஜக ஆகிய கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை கூட்டினால், திமுக பெற்ற வாக்குகளை விட 317 வாக்குகள் அதிகமாக இருக்கிறது.

அதே மண்டத்தில் 4 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இங்கு அமமுக பிரித்த வாக்குகள் மூலம், இந்த வார்டையும் அதிமுக இழந்துள்ளது. அதிமுக, அமமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்குகளை கூட்டினால், திமுக கூட்டணி கட்சியான சிபிஎம் பெற்ற வாக்குகளை விட ஆயிரத்து 316 வாக்குகள் அதிகமாக இருக்கிறது. இந்த வார்டில் பாஜக 646 வாக்குகளை தனித்தே பெற்று 4வது இடத்தில் உள்ளது.

வார்டு 6ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக பெற்றுள்ள வாக்குகள், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் பெற்ற வாக்குகளை விட 51 வாக்குகள் அதிகம். இந்த வார்டில் பாமகவும், அமமுகவும் முறையே 360, 265 வாக்குகளைப் பெற்றுள்ளன.

அதே மண்டலத்தில் வார்டு 9 ல் திமுகவிடம் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், நாம் தமிழர் பிரித்த வாக்குகள் திமுகவுக்கு சாதமாகிவிட, சட்டமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணியைப் போல அதிமுகவுக்கு இல்லாததால், நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது அதிமுக.

மாதவரத்தை உள்ளடக்கிய மண்டலம் 3ல் உள்ள 30 வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாமக தடுத்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகள் , திமுக கூட்டணியை விட 809 வாக்குகள் அதிகம்.

அதே மண்டலத்தில் 33 வது வார்டில் திமுக, 3,450 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக,பாஜக,பாமக ஆகிய மூன்று கட்சிகளும் முறையே 931-952-932 என வாக்குகள் பெற்று, பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

தேனாம்பேட்டையை உள்ளடக்கிய மண்டலம் 9ல் 123 வார்டில் திமுக கூட்டணி கட்சியான சிபிஎம் 6,790 வாக்குகுள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக 4,165 வாக்குகளும் பாஜக 3,446 வாக்குகளும் பெற்று, சிபிஎம்யை விட கூடுதலாக பெற்றுள்ளன.

கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள 128 வார்டில் திமுக 9,783 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக, பாஜக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் முறையே 6,406-2,318-773 என கூட்டணி வாக்குகள் வெற்றியை தேடி தரும் வகையில் உள்ளன.

அதே மண்டலத்தில் உள்ள 131 வார்டில் திமுக 5,527 வாக்குகள் பெற்று வாகை சூடியிருக்கும் நிலையில், அதிமுக 3,471 வாக்குகளும் பாஜக 2,451 வாக்குகளும் பெற்று, வெற்றி வேட்பாளரை விட கூடுதலாக வாக்குள் பெற்று இருக்கின்றன.

அதே போல, 135 வார்டில் திமுக கூட்டணி விசிக 6,218 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடிக்க, 4,317 வாக்குகளுடன் அதிமுகவும், 1,926 வாக்குகளுடன் பாஜகவும் முறையே 2 மற்றும் 3 ஆம் இடத்தில் உள்ளன.

வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள 146 வது வார்டில் திமுக 7,899 வாக்குகளுடன் வெற்றியை நிலைநாட்ட, அதிமுக 4,827, பாஜக 1,890, பாமக 642 என கூட்டணி பலத்தின் மூலம் வெற்றிக் கனியை பறிப்பதை கோட்டை விட்டிருக்கிறது அதிமுக.

வார்டு 151ல் திமுக 4,453 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடிக்க, அதிமுக 2,196 வாக்குகள், பாமக 1,,242, அமமுக 753 வாக்குகள் என வாரி வழங்கியிருக்க, இந்த வார்டிலும் கூட்டணி இல்லாததால் தோல்வியை தழுவியுள்ளது அதிமுக.

வடசென்னையைப் போலவே, தென் சென்னையிலும் கூட்டணி பலம் இல்லாததால் பல வார்டுகளை அதிமுக இழந்துள்ளது. அந்த வகையில், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட 167 வது வார்டில் திமுக 3,591 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றியை சுவைக்கும் நேரத்தில், அதிமுக 3,319 வாக்குகளும் 2,680 வாக்குகள் பாஜகவும் கிடைத்திருக்கும் நேரத்தில் கூட்டணி கைகொடுக்காததால், இங்கேயும் அதிமுகவுக்கே இழப்பு.

அடையாறை உள்ளடக்கிய மண்டலம் 13ல் உள்ள 173 வது வார்டில் காங்கிரஸ் 6,442 வாக்குகளுடன் கவுன்சிலராகிவிட, அதிக 4,226 வாக்குகளும் பாஜக 2,967 வாக்குகளும் பெற்ற போதும் கூட்டணி இல்லாதது,  தோல்விக்கு வழி வகுத்துவிட்டது.

இதே மண்டலத்திற்குட்பட்ட வார்டு 179 ல் திமுக 6,240 வாக்குகள் பெற்று வெற்றிக் கோட்டை எட்டிவிட, அதிமுக 4,301 வாக்குகளும், பாஜக 2,266 வாக்குகளும் பெற்ற போதும் இரண்டு கட்சிகளும் ஈகோ யுத்தத்தால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்துவிட்டன.

பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட 187 வது வார்டில் திமுக 3066 வாக்குகளை பெற்று வெற்றியை சுவைக்க, பாஜக 2341 வாக்குகளும், அதிமுக 1,629 வாக்குகளும் பெற்ற போதும் கூட்டணி இல்லாததால், இங்கேயும் கோட்டை விடடுவிட்டன.

திமுகவைப் போல வலுவான, மெகா கூட்டணியை அமைக்காததால், சென்னை மாநகராட்சியில் மட்டும் 20 வார்டுகளை அதிமுக இழந்துள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை சுவாரஸ்யம் என்னவென்றால், முதல் மற்றும் இரண்டாவது இடங்களை கடந்து பெரும்பான்மையான இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. வாக்குகள் வியக்கத்தக்க வகையில் இல்லை என்றாலும்கூட, 3 வது இடம் என்பது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.