திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 9 இடங்களை திமுகவும் எஞ்சிய பொன்னேரி தொகுதியை அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது. 10 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றிய நிலையில், அந்த மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எம்.நாசரை, பால்வளத்துறை அமைச்சராக நியமித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏற்கெனவே உள்ளூரிலும், கட்சியிலும் சர்ச்சைக்குரியவரான நாசர், அமைச்சராக பணியை துவக்கிய சில மாதங்களிலேயே அவரது மனைவி, மகன் ஆகியோர் துறை ரீதியிலான நடவடிக்கைகளில் தலையிடுவதாக புகார் எழுத் துவங்கியது.
எஞ்சிய 8 எம்எல்ஏக்களில் திருவள்ளுர் வி.ஜி.ராஜேந்திரன், மாதவரம் எஸ்.சுதர்சனம், திருவொற்றியூர் கே.பி.சங்கர் ஆகியோரின் பெயர்களும் கூட அமைச்சர் பதவிக்கு அடிபட்டது. மூவருமே ஆளுமைமிக்கவர்களாக இருக்கும் நிலையிலும் மூன்று பிரமுகர்களும் தனித்தனியாக செல்வாக்குமிக்க சாதி பின்புலத்தில் இருபபவர்கள்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 9 மாதங்கள் கடக்கும் நிலையில், மாவட்ட அமைச்சர் எஸ்.எம். நாசரால், திருவள்ளூர் மாவட்டத்தில் எந்தவொரு சிறப்பான திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கம் எழுந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அரசு அதிகாரிகளை நாகரிகமற்ற முறையில் பேசுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மட்டுமல்ல, திமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கூட அமைச்சர் எஸ்.எம்.நாசர் மீது அதிருப்தியோடுதான் இருந்து வருகிறார்கள். இதேபோல, மற்ற திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் வாக்காளர்களை மட்டுமின்றி திமுகவினரிடமும் விரக்தியைதான் ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் சுதர்சனம் (பொங்கல் பரிசு தொகுப்பு கரும்பு புகழ்) எம்எல்ஏவாக மட்டுமின்றி சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். திமுக அமைச்சரை உள்ளடக்கி 9 எம்எல்ஏக்கள் ஆட்சி அதிகாரத்தை வைத்து கோலோச்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், தனித்தொகுதியான பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துரை சந்திரசேகர், தன்னுடைய தொகுதி மக்கள் மட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் வியந்து பார்க்கும் வகையில் மனிதநேயத்துடன் மக்கள் பணி ஆற்றிவருவதாக பூரிப்புடன் பேசுகிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர்.
துரை சந்திரசேகர் எம்எல்ஏ
தன் தொகுதி மக்களை அன்றாடம் பொன்னேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்திக்கும் துரை சந்திரசேகர், மிகுந்த கனிவுடன் குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறாராம். வழக்கமாக இதுபோன்ற பணிகளில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்கூட, தன்னுடைய அலுவலகத்திற்கு கோரிக்கையோடு வரும் மக்கள், அமர்வதற்காக இருக்கைகளை அமைத்து, தேநீர் கொடுத்து உபசரிக்க ஏற்பாடு செய்துள்ள மனிதநேயத்தில்தான் துரை சந்திரகேசர், தனித்துவமாக திகழ்கிறார் என்கிறார்கள் பொன்னேரியில் உள்ள சமூக ஆர்வலர்கள்.
அவர்களின் வியப்பிற்கு மற்றொரு காரணம், மதிய வேளையில், அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் பசியாறும் வகையில், சமையலர்களை ஊதியத்திற்கு அமர்த்தி, அலுவலகத்திலேயே உணவு சமைத்து, சுவைத்து உண்பதற்கும் வசதியை உருவாக்கியுள்ளார் துரை சந்திரசேகர் என்பதால்தான், சமூக ஆர்வலர்கள் காங்கிரஸ் எம்எல்ஏவின் கருணை குணத்தை பெரிதாக பாராட்டி வருகின்றனர்.
10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத நிலையிலும், கட்சிப் பணிகளில் ஈடுபட்டு நிறைய செலவழித்துவிட்டோம். கடன்களை அடைப்பதற்காக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஒப்பந்தம், பணி மாறுதல் போன்றவற்றில் காசு பார்ப்பது குற்றமா-? என்று கண்கள் சிவக்கும் ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு மத்தியில், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லாத போதும், இனிமேலும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில்லாத போதும், காங்கிரஸ் எம்எல்ஏவான துரை சந்திரசேகர், தன்னுடைய சொந்த கதையை, சோகக்கதையை பற்றியெல்லாம் புலம்பமால், ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற சித்தாந்தத்தின்படி, தொகுதி மக்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறார்.
.பெருந்தலைவர் காமராஜரின் எளிமையை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் மக்களோடு ஒருவராக பழகுவதுடன் அம்பாசிட்டர் காரில் தான் பயணம் செய்கிறார்..திமுக,அதிமுக உள்ளிட்ட சிகளைச் சேர்ந்த வார்டு செயலாளர்களே 20 லட்சம் ரூபாய் இன்னோவா காரில் அலம்பல் செய்யும் நேரத்தில் தெருவோர தேநீர் கடைகளில் மக்களில் ஒருவராக அமர்ந்து அரசியல் பணியாற்றும் காங்கிரஸ் எம்எல்ஏவை இளம் தலைமுறையினர் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் என்று பாராட்டு மழை பொழிகிறார்கள் பொன்னேரி தொகுதி சமூக ஆர்வலர்கள்.
மருத்துவர் பரிமளம்
ஒற்றை காங்கிரஸ் எம்எல்ஏவின் மனிதாபிமானம், மாவட்டத்தை கடந்த பிற மாவட்டங்களுக்கும் பரவி வரும்நேரத்தில், திமுகவிற்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதி அரசியல்தான் மிகுந்த வேதனையளிக்கிறது என்கிறார்கள் திருவள்ளூர் மாவட்ட திமுக மூத்த முன்னோடிகள் சிலர்.
பொன்னேரி நகரத்தில் திமுகவின் செல்வாக்கு கொடிகட்ட பறக்க, தன் வாழ்நாளையும் சொந்த காசையும் அர்ப்பணித்தவர், மறைந்த திமுக நகரச் செயலாளர் டாக்டர் விஸ்வநாதன். இவருடைய மனைவி பரிமளமும் மருத்துவர்தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இருவருமே திமுகவின் வளர்ச்சிக்காக தங்கள் மருத்துவப் பணியை மட்டுமின்றி லட்சக்கணக்கில் தங்கள் சொந்த வருமானத்தையும் இழந்தவர்கள்தான். கொரோனோ தொற்று துவங்கிய நாள் முதலாக, தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஏழை, விளிம்பு நிலை உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ சேவையாற்றியவர்கள் இந்த மருத்துவ தம்பதியினர்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பொன்னேரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் மருத்துவர் பரிமளம். மீண்டும் 2021 தேர்தலில் போட்டியிடலாம் என்ற கனவோடு மருத்துவ தம்பதிகள் இருந்து வந்த நிலையில், திடீரென்று கடந்த டிசம்பர் 31 ல் விஸ்வநாதன் உயிரிழந்தார்.
அவரின் இழப்பை தாங்கி கொள்ள முடியாத சோகத்தில் இருந்த பரிமளம், கட்சி தன்னை கைவிடாது என்ற நம்பிக்கையில், கணவர் வகித்து வந்த நகரச் செயலாளர் பதவியை தன்னிடம் கட்சி தலைமை ஒப்படைக்கும் என எதிர்பார்த்தார்.
துக்கம் விசாரிக்க வந்த கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கோவிந்தராஜிடமும் வேண்டுதல் வைத்தார். ஆனால், பொன்னேரி நகரச் செயலாளர் பதவி இளங்கோவன் என்ற திமுக பிரமுகருக்கு தாரை வார்க்கப்பட்டது. அதனால் அதிர்ச்ச்யிடைந்த மருத்துவர் பரிமளம், கணவரின் அஸ்தியை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். அவரின் போர்க்குணம், திமுக தலைமை வரை எட்டியது.
பொன்னேரி நகரை தலைமையிடமாக கொண்டு தனித்தொகுதியாக இருக்கும் பகுதியில், சாதி அரசியல்தான் செல்வாக்கு பெற்றிருக்கிறது என்று கூறும் திமுக நிர்வாகிகள், கோவிந்தராஜும், இளங்கோவனும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதன் காரணமாக, பரிமளத்தின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர, அவரை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட வைத்த கோவிந்தராஜ், கட்சிப் பணியில் உரிய முக்கியத்துவம் கொடுப்பதாக 8 மாதத்திற்கு முன்பு அளித்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை என்று விரக்தி கலந்த குரலில் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள பொன்னேரி நகராட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு தன்னை பரிந்துரைப்பார் கோவிந்தராஜ் என்ற நம்பிக்கையோடு, கட்சிப் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார் மருத்துவர் பரிமளம் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.
கோவிந்தராஜ், இளங்கோவன், விஜி ராஜேந்திரன் ஆகியோர் சாதி அரசியலை முன்னெடுக்க, குடும்ப அரசியலில் குறியாக இருக்கிறார் மூத்த முன்னோடி கும்மிடிப்பூண்டி வேணு. மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலத்து அரசியல்வாதியான அவர், திருவள்ளூர் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறார்.
தற்போதைய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பேரன்பை பெற்ற கும்மிடிப்பூண்டி வேணு, தனது புதல்வி உமா மகேஸ்வரியை மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும், தனது புதல்வர் ஆனந்தகுமாரை கும்மிடிப்பூண்டி ஒன்றிய திமுக செயலாளராகவும், அரசியல் வாரிசுகளாக, அங்கீகாரம் பெற வைத்துள்ளார்.
ஆக மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரின் செல்வாக்குதான் திமுகவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதாக பிற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் குமறி வருகிறார்கள் என்கிறார் திமுக கூட்டணியில் உள்ள தோழமை கட்சி நிர்வாகி ஒருவர்.
10 தொகுதிகளையும் வாரி வழங்கிய பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்றால், தன்நலம் கருதாமல் பொதுநலத்துடன் உழைக்கும் வகையில் திமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளை வழங்க வேண்டும். இதைவிட முக்கியமாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போதாவது, கட்சிக்காக உழைக்கும் அடிமட்ட நிர்வாகிகளுக்கு உரிய வாய்ப்பை வழங்கி, அவர்களுக்கும் அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அவர்.
தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஹெச்.சேகர் திமுகவுக்கு வந்த பிறகு, கட்சிக்கு விசுவாசகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போல மாற்றுக்கட்சியில் இருந்து வந்த பல பிரமுகர்கள், பல்லாண்டு காலமாக திமுகவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உழைப்புக்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில், சாதி மற்றும் குடும்ப அரசியலை தவிர்த்து அனைவருக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்ட திமுக செயல்பாடுகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரத்தில் 2013 ல் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இன்றைக்கும் இழுபறியாகவே உள்ளது. அதை முழுமையாக நிறைவேற்ற விரைந்து நடடிவக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மாவட்ட அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் முதல்வர் சாட்டையை சுழற்ற வேண்டும் என்கிறார்கள் கலைஞர் காலத்து மூத்த உடன்பிறப்புகள் பலர்.