Fri. Nov 22nd, 2024

ஜனவரி 24 ஆம் தேதி…

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் எல்லோருக்கும் மறக்க முடியாத நாள்..

25 ஆண்டுகளுக்கு முன்பு 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரும், இன்றைய தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் சிந்தனையில் உதித்ததுதான் நிலவொளி பள்ளி திட்டம்..

ஆன்மிகத் தலமாக போற்றப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திரும்பிய திசையெங்கும் வழிபாட்டுத்தலங்கள் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.  வழிபாட்டு தலங்களால் மட்டுமல்ல, கலைநேர்த்தி மிகுந்த பட்டுப்புடவைகளாலும் காஞ்சிபுரத்தின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த காஞ்சிபுரத்தில்தான், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் துயர்மிகுந்த வாழ்க்கை, வெளியுலக பார்வைக்கே தெரியாமலேயே இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்திருக்கின்றன. ஏழைக் குழந்தைகளின் துயர்மிகுந்த வாழ்க்கையை கண்டறிந்து ஒளியேற்றி வைத்துள்ளார் வெ.இறையன்பு ஐஏஎஸ் என்பதுதான் இன்றைய இளம்தலைமுறையினருக்கு வியப்பை ஏற்படுத்தும் செய்தி.

25 ஆண்டுகளுக்கு முன்பு நெசவாளர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த மக்கள், வறுமையின் காரணமாகவும், பெற்ற கடனை தீர்க்கவும் அவர்களின் வாரிசுகளான இளம் சிறார்களை, ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழிற்கூடங்களில் கொத்தடிமைகளாக வேலைபார்க்கும் கொடூர நிலைக்கு பழக்கி வைத்திருக்கின்றனர்.  இதனால், பல தலைமுறையே ஆரம்ப கல்வியே கற்க முடியாத நிலை ஏற்பட்டிருந்திருக்கிறது. அப்படிபட்ட நேரத்தில்தான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பு ஏற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரியான வெ.இறையன்பு, வளரும் தலைமுறையினரின் வலி நிறைந்த  வாழ்க்கையை, ஆய்வு பணிகளின் போது கண்டறிந்து வேதனைப்பட்டுள்ளார்.

அவர்களின் எதிர்காலம் ஒளிமிகுந்ததாக அமைய வேண்டும் என்ற சிந்தனையில் பகல் முழுவதும் தொழிற்கூடங்களில் வேலைப் பார்த்தாலும், மாலை முதல் இரவு வரை கல்வி கற்று தந்ததால், அந்த குழந்தைகளின் மீது படர்ந்திருக்கும் அடிமைச்சங்கிலி அறுக்கப்பட்டு, கல்விச் செல்வம் மூலம் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள முடியுமே என்று சிந்தித்து, நிலவொளி பள்ளி எனும் சிறப்பு திட்டத்தை பெரும் சிரமத்திற்கு இடையே துவக்கியுள்ளார்.

ஒன்றிரண்டாக முளைத்த நிலவொளி பள்ளிகள் அவரது ஆட்சியர் பணி தொடர்ந்த காலம் வரை 40 பள்ளிகளாக மூன்று ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது. ஆரம்ப கல்வி முதல் 12 ம் வகுப்பு வரையிலான படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தொழிற்கூடங்களில் சிறைப்பட்ட மாணவ, மாணவியர் உள்ளிட்ட மாணவச் செல்வங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து அவர்களுக்கு கல்வி போதிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார், வெ.இறையன்பு ஐஏஎஸ். 

மாலை நேரங்களில் துவங்கும் நிலவொளி பள்ளிகள் நள்ளிரவு வரை கூட மாணவர்களுக்கு கல்வியை போதித்துள்ளன. அர்ப்பணிப்பு உணர்வுடன் நடைபெற்ற இந்த நிலவொளிப்பள்ளியில் ஆசிரியர்களாக பொறுப்பு ஏற்றவர்கள், தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்ட எண்ணற்றோர், கல்வியறிவு இல்லாதவரே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக் கூடாது என்று சபதமெடுத்ததைப் போல சேவையாற்றியதால், நிலவொளிப் பள்ளிகளில் படித்த பல்லாயிரக்கணக்கான இளம் தலைமுறையினர், இன்றைக்கு இளங்கலை, முதுகலை பட்டதாரிகளாகவும், அரசு அதிகாரிகளாகவும், தனியார் நிறுவன அலுவலர்களாகவும் மாநிலம் முழுவதும் மக்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வெ.இறையன்பு ஐஏஎஸ் ஆட்சியராக இருந்த 1997 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பிறையில் இருந்து முழு நிலவாக மாறியதைப் போல பள்ளிகளின் எண்ணிக்கையும் 40 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. காஞ்சிபுரம் ஆட்சியர் பணியில் இருந்து வெ.இறையன்பு ஐஏஎஸ் மாற்றப்பட்ட பிறகு, கடந்த 20 ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில் ஆட்சியராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளின் அலட்சியத்தாலும், அக்கறையில்லாத தன்மையாலும், இன்றைக்கு இரண்டே இரண்டு நிலவொளிப் பள்ளிகள் மட்டுமே இயங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

 ஏன் இந்த நிலைமை?

நிலவொளி பள்ளிகள் மீது இன்றைக்கும் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் தன்னார்வலரிடம் பேசினோம். தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு தன் மனதில் உள்ள வேதனைகளை கொட்டித் தீர்த்தார் அவர்.

இளம் வயதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்ற வெ.இறையன்பு ஐஏஎஸ், மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் திறனில் அதிக அக்கறை காட்டினார். அந்த வேளையில்தான், அரசு பள்ளி கூடங்களுக்கு வரும் மாணவர்களின்  எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதை கண்டறிந்து, ஆய்வுகள் நடத்தியும் தொடர்ச்சியான விசாரணைகள், சோதனைகள் மூலம் இளம் சிறார்கள், பெற்றோர்களின் கடன்தொகைகளுக்காக ஆலை தயாரிப்பு கூடம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் அடகு வைப்பதைப் போல, பெற்றோர்கள் அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனைப்பட்டார். சமுதாய நலனில் அக்கறையுள்ள கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, மாலைநேரம் வகுப்புகள் நடத்தும் வகையில் நிலவொளி பள்ளி திட்டத்தை 1997 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி துவக்கினார். இந்த திட்டத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் பொறுப்பு ஏற்கும் வகையில் விதியை உருவாக்கினார்.

தொழிற்கூடங்களில் பணிகளை முடித்து வரும் இளம் சிறார்களுக்கு அரசு நிதி மற்றும் தன்னார்வலர்களின் நன்கொடைகளை மூலதனமாக்கி,  தொடர்ந்து கல்வி கற்கும் வசதியை மாலைநேரங்களில் உருவாக்கி தந்தார். கல்வி மீது தணியாத தாகம் கொண்ட சிறுவர்கள், நிலவொளி பள்ளிகளில் ஆர்வமுடன் கல்வி கற்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சிகள் வாயிலாக தயாரானார்கள். கடந்த 20 ஆண்டுகளாக நிலவொளி பள்ளியின் பயணம் வெற்றிகரமாகவே தொடர்கிறது. இந்த பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கானோர் பட்டதாரிகளாக, சமுதாயத்தில் இன்றைக்கும் மதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர், தலைமைச் செயலகம் முதல் மாவட்டங்கள் வரை அரசு அலுவலர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வெ.இறையன்பு ஐஏஎஸ் காஞ்சிபுரம் ஆட்சியராக இருக்கும் வரை சிறப்புடன் செயல்பட்டு வந்த நிலவொளிப் பள்ளிகள், அவரின் பணிமாறுதலுக்குப் பிறகு தேய்பிறையாக மாறத் துவங்கியது. அவருக்குப் பின்பு ஆட்சியராக பொறுப்பு ஏற்றவர்கள், நிலவொளிப் பள்ளிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தவில்லை. அவர்களின் அக்கறையற்ற தன்மையாலும், ஆட்சி மாற்றத்தாலும் நிலவொளிப் பள்ளிகளின் எண்ணிக்கை 40 என்று நிலையில் இருந்து இன்றைக்கு இரண்டுக்கு மேற்பட்ட பள்ளிகள் என்ற ஒற்றை இலக்கத்திற்குள் வந்துவிட்டது என்பதை மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்றுதான்.

கடந்த 22 ஆண்டுகளாக மற்ற ஆட்சியர்கள் நிலவொளி பள்ளிகள் மீது அக்கறை செலுத்தாத போதும், அரசுத்துறையின் எந்த பொறுப்பில்,  எந்த மாவட்டத்தில் பணியாற்றினாலும், நிலவொளி பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆர்வமாக கேட்டறிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் வெ.இறையன்பு ஐஏஎஸ். அதைவிட சிறப்பாக, நிலவொளி பள்ளிகளுக்கு தேவையான நிதியை திரட்டி தருவதிலும், நிலவொளி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் நேரங்களில், அவர்களுக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் தணியாத ஆர்வம் கொண்டவராக எப்போதுமே திகழ்ந்து வருகிறார் வெ.இறையன்பு ஐஏஎஸ்.

விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த செல்வங்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்விச் செல்வத்தை வாரி வாரி வழங்குவதில் தனித்த அக்கறையோடு சேவையாற்றி வரும் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸை, எல்லா நாட்களும் நினைத்துக் கொண்டிருந்தாலும் கூட, ஜனவரி 24 ஆம் தேதியன்று மட்டும் கூடுதலாகவே நெஞ்சம் நெகிழ அவரை நினைத்துக் கொள்வோம். 1997 ஆம் ஆண்டில் அவர் போட்ட சிறிய விதை இன்றைக்கு 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது என்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நிலவொளி பள்ளியில் பயின்று பட்டதாரிகளாகவும், அரசு அலுவலர்களாகவும் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் நேற்றைய தினம் (ஜனவரி 24) அவரவர் அங்கம் வகிக்கும் வாட்ஸ் அப் குரூப்புகளில் மனிதநேயர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு நெஞ்சம் நெகிழ பாராட்டு மழை பொழிந்தார்கள்.

செல்வத்திலேயே சிறந்த செல்வம், கல்விச் செல்வம் என்ற ஆன்றோரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் அறிவொளி ஏற்றி வைத்த வெ.இறையன்பு ஐஏஎஸ், நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, அவரைப் போல நேர்மையான, அறத்தில் இருந்து இம்மியளவும் பிறழாமல் கம்பீரமாக நடைபோடும் இளம் தலைமுறையினரை உருவாக்க துணை நிற்க வேண்டும் என்று தொடர்ச்சியான பிரார்த்தனையில் ஈடுபட்டு    கொண்டிருக்கிறோம் என்றார் ஆனந்த கண்ணீரோடு தன்னார்வலர்.

நெஞ்சம் உண்டு…நேர்மையுண்டு…ஓடு ராஜா….