இயற்கை சக்தி எப்போதுமே அறிவியலாளர் களுக்கு சவாலாகவே இருந்து வருகின்றன.. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அதிசயங்களை அறிவியல் மூலம் கண்டறியவும் புதிய படைப்புகளை உருவாக்கவும் அறிவியலாளர்கள் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்கின்றனர்.. அவர்களின் தியாகத்தால் இயற்கை சக்தியை முழுமையாக வென்றிட முடியும் என்ற நம்பிக்கையை, பூமி பந்தில் ஒவ்வொரு நாளும் அரங்கேற்றப்படும் அதிசயங்கள் நீருபித்துக் கொண்டே இருக்கின்றன..
சாதனையை மூலம் சரித்திரம் படைத்திருக்கும் அமெரிக்க மருத்துவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்களாக நிற்கிறார்கள்…
மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உலக மருத்துவத்தில் மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது.
அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்தவர் டேவிட் பென்னட். 57 வயதான இவர் இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
வேறு இதயத்தை பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவர் இருந்தார்.
இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர்.
இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன.
இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்ததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.
எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது
இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும்.
உலகெங்கும் உறுப்பு தானத்திற்காக காத்துள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு மரபணு மாற்ற யுக்தி மிகப்பெரும் தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.