Sat. Nov 23rd, 2024

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்ட முன்வடிவு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஐஏஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோர சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணையின் போது, தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில், அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதிய தலைமைச் செயலாளர், முழுமையான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் நிலவரம் தொடர்பான முழுமையான அறிக்கையை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதமே மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலம் குறித்த புள்ளிவிவரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் நிலம் என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. அதில், அனைத்து நீர்நிலைகளின் விவரங்களும் வட்டம் வாரியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த பட்டியலை போர்க்கால அடிப்படையில் தயாரித்துள்ளோம். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களுடன் அறிக்கையாகத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.4, 762 அரசு கட்டடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை நேரடியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிவதற்கு 12 மாத கால அவகாசம் தேவைப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின்படி அகற்றப்பட்டுவருகிறது.


அனைத்து நீர்நிலைகளையும் இந்தச் சட்டத்தின்கீழ் கொண்டுவரும் வகையில் புதிய சட்ட முன்வடிவை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படுகிறது. ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே கண்டிப்பான ஒரு செய்தியை அரசு தெரிவித்துள்ளது.


இவ்வாறு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.