தமிழக ஆளுநர் என் ரவி, நாளை தூத்துக்குடி செல்கிறார். மூன்று நாள் அரசு முறைப்பயணமாக நாளை தூத்துக்குடி புறப்படும் ஆளுநர், இரண்டு நாள் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். மறுநாள் (15 ஆம் தேதி) நெல்லை மாவட்டத்திற்கு செல்லும் ஆளுநர், அந்த மாவட்டத்திலும் பல்கலைகழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளிலும், மறுநாள் 16 ஆம் தேதி மதுரை செல்கிறார்.
தூத்துக்குடி நாளை ஆளுநர் வருகை தரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூடுதல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் ஆளுநர் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வரவேற்கின்றனர். தொடாந்து, எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தை பார்வையிடும் ஆளுநர் அங்குள்ள பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
பிற்பகலில் காவல்துறை உயரதிகாரிகள், மாநகராட்சி ஆணையர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர் ஆகியோருடன் ஆளுநர் கலந்துரையாடுகிறார். பின்னர் வஉசி துறைமுகத்தையும் பார்வையிடுகிறார்.
மறுநாள் (14 ம் தேதி) காலை திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் தரிசனம் செய்யும் ஆளுநர், பின்னர் மகேந்திரிகிரி சென்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுகிறார். மாலையில் நெல்லை திரும்பும் அவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
மறுநாள் (15 ஆம் தேதி) காலை நெல்லையப்பர் கோயில் தரிசனமும் மனோன்மணியடத சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் ஆளுநர் கலந்து கொள்கிறார். அன்று மாலை மதுரைக்கு செல்லும் ஆளுநர், காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார்.
மறுநாள் 16 ஆம் தேதி காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனமும், அதனைத்தொடர்ந்து காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் அன்னை தெரசா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிலும் ஆளுநர் கலந்துகொள்கிறார்.
ஆளுநரின் வருகையையொட்டி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.