Tue. Apr 30th, 2024

தேநீர் கடை உரிமையாளர் விஜயன்.. வயது 76…

14 ஆண்டுகளுக்கு முன்பு உலகை சுற்றிப் பார்க்கும் ஆசை பிறந்தது. தனது மனைவி மோகனாவுடன் கடல்கடந்து வெளிநாடுகளுக்கு செல்லும் எண்ணத்திற்கு, அன்றாடம் கிடைத்த சில நூறு ரூபாய்களை சேமிக்க துவங்கினார். ஆசைப்பட்ட நாடுகளை எல்லாம் இளம் தம்பதிகள் போல சுற்றி சுற்றி வந்தனர். 6 கண்டங்களில் உள்ள 25 நாடுகளை சுற்றிப் பார்த்த அந்த தம்பதியினர், ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திற்கு பிறகும் அடுத்த சுற்றுலாவை திட்டமிட்டே உழைக்கத் துவங்கினர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஜயன், மோகனா தம்பதியினர், எர்ணாகுளம் அருகே உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் சாதாரண தேநீர் கடையில் 12 மணிநேரத்திற்கு மேலாக உழைத்தனர். விஜயன் தயாரித்து தந்த தேநீரை விட தம்பதியினரின் வெளிநாட்டு பயண அனுபவங்களை சுவைக்கவும், வெளிநாடுகளில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசிக்கவும் திரண்ட வாடிக்கையாளர்களால், அந்த சின்னஞ்சிறு தேநீர் கடை எப்போதுமே நிறைந்திருந்தது.

கொச்சி நகரம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் உள்ள செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளைவிட, செல்வந்தர்களை விட, விஜயன -மோகனா தம்பதியினர் பெயரும், புகழும் மண்ணின் மைந்தர்களின் மனங்களில் நிரம்பியிருக்கிறது.

5, 6 லட்சம் ரூபாய் செலவழித்து கூட வெளிநாடுகளில் சுற்றி வந்த அந்த ஆசை தம்பதிகள், வங்கிகளில் கடன் பெற்று கூட தங்களின் வெளிநாட்டு சுற்றுலா ஆசையை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள். தங்க நகைகளில் முதலீடு செய்தால் வாழ்வின் நிறைவு காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்..வாரிசுகளுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று செய்யப்பட்ட பரப்புரைகளை எல்லாம் புறம்தள்ளி, உலகை சுற்றிப் பார்ப்பதிலும், பலதரப்பட்ட பண்பாடுகளை அறிந்து கொள்வதற்கும், அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்திற்கும் முதலீடுகள் ஈடாகாது என்ற கொள்கையில் உறுதி காட்டியிருக்கிறார்கள்.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டே போனபோதும், தங்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்ட போதும், மனிதநேயத்தோடு ஒரு கோப்பை தேநீரை 5 ரூபாய் விலையிலேயே வாடிக்கையாளக்ளுக்கு கொடுத்து வந்திருக்கிறார் விஜயன். 40 ஆண்டு கால தேநீர் கடை தொழிலில், மற்றவர்களை நம்பி வாழாமல், கணவரும், மனைவியும் இணைந்து 12 மணிநேரத்திற்கு மேலாக உழைத்து, தங்கள் வாழ்க்கையையும், வாழ்நாள் கனவையும் நிறைவேற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தில் இவர்களுக்கு இணையாக, பரம்பரை பரம்பரையாக செல்வந்தவர்களாக இருப்பவர்கள் கூட இந்த தம்பதியினரைப் போல திட்டம் போட்டு 25 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பார்களா? சந்தேகம்தான் என்கிறார்கள், விஜயனின் நெருங்கிய நண்பர்கள்..

உலக வரைப்படத்தில் உள்ள நாடுகளில் ஒவ்வொன்றவாக வரிசைப்படுத்தி, திட்டமிட்டு சுற்றுலாவை மேற்கொண்டு வந்த விஜயனுக்காக, இன்னும் பல நாடுகள் காத்திருக்கின்றன.
ஆனால், 76 வயதான விஜயன், இன்று உயிரோடு இல்லை என்பதுதான் சோகம். இன்று காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, விஜயனின் ஜீவன் காற்றில் கரைந்துவிட்டது.

வாழ்வின் நிறைவு பகுதியை எட்டியபோதும் தேனிலவு தம்பதிகளாக சுற்றி வந்த விஜயன் மோகனா வாழ்க்கையில், தனித்து விடப்பட்டுள்ள மோகனாவுக்கு ஆறுதல் கூற மனவலிமையின்றி உறவுகள் தவித்துக் கொண்டிருக்கின்றன. அதைவிட, உலகையும், உழைப்பையும் நேசித்த விஜயனின் திடீர் மறைவால், அவரை பெரிதும் நேசித்த எர்ணாகுளம் நகர வாசிகள் உள்பட கேரள மக்களும், சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்…