Sun. Nov 24th, 2024

2005 ஆம் ஆண்டில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தை நடிகர் விஜயகாந்த் தொடங்கியபோது, தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகதான் தன் கட்சியை முன்னிலைப்படுத்தினார். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே நடிகர் விஜயகாந்த்தின் செயல்பாடுகளும் அமைந்திருந்தன. 2011 ஆம் ஆண்டுக்கு முன்புவரை  அவர் தனித்து தேர்தல் களங்களைச்  சந்தித்த போது, அவரின் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் பெற்ற வாக்கு சதவிகிதம் அதிகரித்து கொண்டே வந்தது. அவருக்கு முன்பாக, அரசியல் கட்சிகளைத் தொடங்கிய நடிகர் சிவாஜி கணேசன், நடிகர் பாக்யராஜ், நடிகர் டி.ராஜேந்தர் போன்ற பிரபலங்களின் மீது மக்களுக்கு ஏற்படாத நம்பிக்கை நடிகர் விஜயகாந்த்தின் மீது ஏற்பட்டிருந்தது. அதற்கு முக்கிய காரணம், அவரின் வெள்ளந்தியான பேச்சு மற்றும் வெளிப்படையான நடிவடிக்கைகள்தான். இயல்பாகவே கொடைத்தன்மை கொண்ட அவர், திரையுலகில் உச்சத்தை தொட்ட காலம் வரை, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வாரி வாரி வழங்கியிருக்கிறார். திரையுலகில் யாருக்கும் அமையாத நிரந்தர பட்டப் பெயராக கேப்டன் என்று அடைமொழியோடு திரையுலகினர் இன்று வரை  புகழும் அளவுக்கு நற்குணங்களுடன், போலித்தனங்களை சுமக்காத நல்ல மனிதராகவே உண்மையில் விஜயகாந்த் இருக்கிறார்.

அவரின் செயல்பாடுகளும், எடுத்தெறிந்து பேசும் முறையும் கூட மக்களுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அதனால்தான், தனித்து அவர் தேர்தலை சந்தித்தபோது ஒரு தேர்தலுக்கும் மற்றொரு தேர்தலுக்குமான இடைவெளியில் அவரின் செல்வாக்கு அரசியல் வரலாற்றில் ஆச்சரியப்படும் வகையிலும், செல்வாக்கு மிக்க திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. 2011 க்கு முன்பாக நடைபெற்ற தேர்தலில் அவருக்கு 10 சதவிகிதம் வாக்கு வங்கி உருவாகியிருந்தது. பொதுமக்கள் எந்தளவிற்கு அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார்களோ, அதைவிட பல மடங்கு ரசிகர்களான அவரது கட்சித் தொண்டர்களும் விஜயகாந்த் மீது சஞ்சலமற்ற அன்பை காட்டினார்கள்.

2011 ஆம் ஆண்டில் அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு இருந்தால், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவரது தலைமையில் அமைத்த மக்கள் நல கூட்டணி மிகப்பெரிய வெற்றிக்ளைப் பெற்றிருக்கக் கூடும் என்று இன்றைக்கும் அரசியல் கள ஆய்வாளர்கள் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

வெள்ளை மனதோடு அவர் எப்படி மக்களைப் பார்த்தாரோ, அதேபோலதான் கூட்டணி அமைக்கும் காலங்களில் பிற அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் பார்த்தார். அந்த பார்வைதான் அவரது அரசியல் வீழ்ச்சிக்கே அடித்தளம் அமைந்துவிட்டது என்று இன்றைக்கும் கவலையோடு பேசுகிறார்கள் அவரது நலம் விரும்பிகள். தேர்தல் பரப்புரை கூட்டங்களிலோ, அல்லது பொது நிகழ்ச்சிகளிலோ அவர் மக்கள்தான் எனக்கு கடவுள். மக்களின் முடிவே என் முடிவு என்று வெளிப்படையாக பேசி, அரசியல் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த ஆதாயமும் தேவையில்லை, அதை நோக்கியும் தான் செல்லப்போவதில்லை என்று உறுதியாக கூறினார். அதுபோன்ற நேரங்களில் அவர் மக்கள் நலன் சார்ந்து முன்வைத்த சில யோசனைகளும் இன்றைக்கு நடைமுறைப்படுத்தும் அளவிற்கு சாத்தியமாகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

தே.மு.தி.க. தலைமையில் ஆட்சி அமைந்தால் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று அவர் பத்தாண்டுகளுக்கு முன்பு கூறியது, ஆந்திராவில் இன்று நடைமுறைக்கு வந்திருக்கிறது. கொரோனோ காலங்களில் வீடு, வீடாக டோக்கன் கொடுக்கும் முறையை தமிழகமும் கண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால், தமிழகத்திலும் அது சாத்தியமாகக் கூடும். அதுபோலவே, தமிழக நலன் சார்ந்து நடிகர் விஜயகாந்த் வைத்த வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள், கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைக்கு வ்ந்துள்ளன. இப்படி, தனிப்பட்ட முறையில் நடிகர் விஜயகாந்த் நல்லவராக இருந்த போதும், அவரது மனைவி பிரேமலதா, அவரது தம்பியும் விஜயகாந்த்திற்கு மைத்துனருமான சுதீஷ் ஆகியோர் கட்சியில் ஆதிக்கம் செலுத்தியவுடன், விஜயகாந்தின் கொள்கைகளுக்கும், சிந்தனைகளுக்கும் ஆபத்து ஏற்பட தொடங்கி, அரசியல் வாழ்க்கையில் மாபெரும் சரிவை  விஜயகாந்த்  சந்திப்பதற்கு வழிவகுத்துவிட்டன.

2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்தான், யாருடன் தே.மு.தி.க  கூட்டணி அமைக்க வேண்டும் என்று மக்களைப் பார்த்து கேட்டார். அங்கு திரண்டிருந்த  ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தனித்துப் போட்டியிடுங்கள் என்று சொன்னார்கள். அதே அளவுக்கு அப்போதைய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வையுங்கள் என்றும் குரல் கொடுத்தாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த மேடையில் தனது முடிவை வெளிப்படுத்தாத விஜயகாந்த், மக்களின் கட்டளைக்கு அடிபணிவேன் என்று கூறிவிட்டு சென்னை திரும்பினார். அந்த நேரத்தில், தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. இன்றைக்கு பலர் சொல்வதைப் போல, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய சசிகலாதான் முக்கிய பங்கு வகித்தார் என்று பலர் பீற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை.

2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அப்போதைய துக்ளக் வார இதழின் ஆசிரியர் மறைந்த சோ, தீவிரமாக முயற்சி மேற்கொண்டார்.  அந்த நேரத்திலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நடிகர் விஜயகாந்த் தயக்கத்திலேயே இருந்திருக்கிறார். ஆனால், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் உடனடி அரசியல் ஆதாயத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற வெறியோடு இருந்ததால், அவர்களின் வற்புறுத்தலால் அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்க விஜயகாந்த் அரைமனதோடு தயாரானார். அப்போது அதை உணர்ந்து கொண்ட ஆளும்கட்சியான தி.மு.க., உளவுத்துறையை பயன்படுத்தி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேராமல் தே.மு.தி.க.வை தனித்துப் போட்டியிட வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், தி.மு.க. மற்றும் ஆளும்கட்சியின் உளவுத்துறையின் காய் நகர்த்தல்களை எல்லாம் உடைத்தெறிந்து, ஜெயலலிதாவுடன், விஜயகாந்த் கூட்டணி அமைக்கும் முயற்சியில் துக்ளக் ஆசிரியர் சோ வெற்றிப் பெற்றிருக்கிறார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில்  தே.மு.தி.க சேர்ந்து தேர்தல் களத்தை சந்திக்க, சோ முக்கிய பங்கு ஆற்றியிருந்தாலும் கூட, இந்த விவகாரத்தில் அவருக்கு உறுதுணையாக துக்ளக் இதழின் தலைமைச் செய்தியாளர் ரமேஷ், அப்போது விகடன் செய்தியாளராக இருந்த மை.பா.நாராயணன் ஆகியோர், முழு மூச்சாக சில, பல காரியங்களை ஆற்றியிருக்கிறார்கள். இந்த விஷயம் நமக்கு எப்படி தெரியும் என்றால், துக்ளக் தலைமைச் செய்தியாளர் ரமேஷ், தனது 40 ஆண்டுகால ஊடக வாழ்க்கைப் பயண அனுபவங்களை சுயசரிதைப் போல தனி புத்தகமாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதில், இந்த விஷயம் விரிவாக கூறப்பட்டிருப்பதாக ஊடக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

திராவிட அரசியலுக்கு மாற்றாக புதிய சிந்தனையோடு வந்த நடிகர் விஜயகாந்தின் உறுதியான மனதையே கரைத்து, அவரது புகழுக்கு இழுக்கு சேர்த்தவர் பிரேமலதாவும், அவரது தம்பியுமான சுதீஷ் ஆகிய இருவரும்தான். 2011 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தும் பெற்றார் நடிகர் விஜயகாந்த். அவரது எழுச்சியால் அன்றைய காலகட்டத்தில் சட்டப்பேரவையில் மூன்றாவது இடத்தில்தான் தி.மு.க. இருந்தது.  தனது தனித்த குணத்தால் எளிதாக நட்பாக்கிக் கொள்ளும் தன்மை இருந்தபோதும், நடிகர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் குறுகிய காலத்திலேயே பகையுணர்வை வளர்த்துக் கொண்டார். அதற்கு காரணம், இருவருக்கும் அடிப்படையில் இருந்த திரையுலக மனப்பான்மைதான். அதன் விளைவாக, சட்டப்பேரவையில் இருவருமே நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டார்கள். இன்றைக்கு டி.டி.வி.தினகரனும், அமைச்சர் சி.வி.சண்முகமும் அநாகரிக வார்த்தைப் போரில் ஈடுபட்டார்களே, அதற்கு முன்னோடியாக அமைந்ததுதான், ஜெயலலிதாவும், விஜயகாந்த்துக்கும் இடையிலான மோதல்.

கொள்கை அடிப்படையில், தமிழக மக்களின் நலன் சார்ந்து அல்லது ஒருமித்த பரஸ்பர நம்பிக்கையில் ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் 2011 ஆம் ஆண்டில் இணைந்திருந்தால், தனிப்பட்ட முறையில் இன்று இருக்கும் நிலைக்கே நடிகர் விஜயகாந்த் வந்திருக்க மாட்டார். அவரை வைத்து அவரது மனைவி பிரேமலதாவும், சுதீஷும் அவரையும், அவர் தொடங்கிய கட்சியையும் கூவிகூவி விற்பனை செய்யும் பரிதாப நிலையும் இன்றைக்கு ஏற்பட்டிருக்காது. இந்த வேலையை 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, இருவரும் செய்து பொதுமக்களிடம் அவமானப்பட்டார்கள். ஜெயலலிதாவால் படுகேவலமாக அவமானப்படுத்தபட்டவர்  விஜயகாந்த் என்ற ரேஷம், கோபம் எதுவும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆசைப்பட்டு அ.தி.மு.க.கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க தேர்தலை சந்திக்கிற முடிவை எடுத்தனர் பிரேமலதாவும், சுதீஷும். ஆனால், அன்றைக்கு தொண்டர்களின் மனநிலையோ தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.  பா.ம.க.வுக்கு வாரி வழங்கியதைப் போல, தே.மு.தி.க.வுக்கும் கிடைக்கும், சுதீஷை  ராஜ்ய சபா எம்.பி. ஆக்கி விடலாம் என்ற நப்பாசையில் அக்கா பிரேமலதா காய் நகர்த்த, அதற்கு தூபம் போட்டவர் சுதீஷ். அன்றைக்கு இருவரும் ஆடிய கேவலமான ஆட்டத்தை ஒட்டு மொத்த தமிழகமும் காறித் துப்பியது. அதை உணர்ந்து கொள்ளும் மனநிலையில் விஜயகாந்த் இருந்திருந்தால் தற்கொலையே செய்து கொண்டிருப்பார்.

அதன் பிறகும் பிரேமலதாவும், சுதீஷூம் அரசியல் பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்பதைதான அணமைகால அவர்களின் நிகழ்வுகள் காட்டுகின்றன. பா.ம.க.வுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற வெறி, பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் அதிகமாகவே இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே இருவரும் அவர்களது செயல்கள் மூலம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர் ராமதாஸுக்கு இருக்கும் அரசியல் சாமார்த்தியம், சாதுர்யம் இருவருக்கும் சுட்டுப் போட்டாலும் வராது. இன்றைக்கு தே.மு.தி.க. எந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மையே அவர்களுக்கு தெரியவில்லை. 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரீரு தொகுதிகளில் மட்டுமே அவர்கள் 5000 முதல் 10000 ஆயிரம் வாக்குகளை அதிகபட்சமாக வாங்க முடியும். ஏறக்குறையாக 220 தொகுதிகளில், தே.மு.தி.க.வுக்கு ஆயிரம் முதல் அதிகபட்சமாக 5000 வாக்குகள் கிடைப்பதே சந்தேகம் என்ற நிலையில்தான் இன்றைய கள நிலவரம் இருக்கிறது.

இப்படி தே.மு.தி.க. அழிவு நிலையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தாலும், நடிகர் விஜயகாந்த்தின் மீது கொண்ட மாறாத அன்பின் காரணமாக, அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட அளவிலான நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், வாழ்வோ, சாவோ விஜயகாந்த்தின் ரசிகன், தொண்டன் என்ற அடையாளத்தோடு வாழ்வதே பெருமை என்ற மனஉறுதியோடு இருக்கிறார்கள். தங்கள் பகுதிகளில் அ.தி.மு.க.மற்றும் தி.மு.க.வுக்கு இணையாக அவர்களும் சுயமரியாதையோடு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஜயகாந்த்தால் அடையாளமும், அங்கீகாரமும் பெற்ற பிரேமலதாவும், சுதீஷும், தே.மு.தி.க.வை தேர்தல் சந்தையில் கூவி கூவி விற்றுக் கொண்டிருப்பது தே.மு.தி.க கட்சியின் சாபக்கேடு. நல்லவேளை இந்த இழிவான செயலை உணர்ந்து கொள்ளும் நிலையில் நடிகர் விஜயகாந்த் இல்லை என்பதுதான் அவரது தொண்டர்களுக்கு ஆறுதல் தரும் விடயம். திராவிட கட்சிகளுக்கு மாற்றுச் சக்தி என்று அடையாளப் படுத்திய தே.மு.தி.க., நடிகர் விஜயகாந்த்த கண் முன்னாலேயே  அழிந்து போவது காலக் கொடுமை.