Sun. Nov 24th, 2024

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையும், அரசு விழாவில் அவர் ஆற்றிய உரையும் வழக்கம் போல, பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிவிட்டுள்ளது. ஒருபக்கம் கோ பேக் மோடி என்பதும், மறுபக்கம் வெல்கம் மோடி என்பதும் டிவிட்டரில் டிரண்ட் ஆகியுள்ளது. பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ, அப்போதெல்லாம், இந்த இரண்டும் அரசியல் தளத்தை கடந்தும்  பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளியே விழாது என்ற வகையில்தான், ஒவ்வொரு முறையும் பிரதமரின் தமிழகம் வருகை சர்ச்சைக்குரிய ஒன்றாக, விவாதத்திற்குரிய ஒன்றாக மாறிவிடுகிறது.

பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, அரசு விழாவில் பங்கேற்று பல்லாயிரம் கோடி ருபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். அதுபோலவே, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸைப் பற்றியோ, தமிழக அரசியல் பற்றியோ எதுவும் பேசாமல், வழக்கத்திற்கு மாறாக இந்தியாவின், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பற்றி பேசியது, எதிர்க்கட்சியினராலும் வரவேற்கப்பட்டாலும் கூட, அவர் ஆற்றிய உரையில் இடம் பெற்ற ஒரு முக்கிய அம்சம், அறிவார்ந்த சமுதாயத்தால் விமர்சனம் செய்யப்படும் வகையில் அமைந்துவிட்டது.

தமிழகத்தை பெரியார் மண் என்று ஏன் கூக்குரல் எழுப்புகிறீர்கள் என்று  கேட்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, ஒரு அம்சத்திற்கு பிரதமர் மோடியின் பேச்சே ஒரு காரணியாக அமைந்துவிட்டதுதான் பரிதாபம்.

தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களில், ஏன் வெளிநாடுகளில் கூட, திருக்குறளையும், மகாகவி பாரதியார் கவிதைகளையும், சங்க இலக்கிய பாடல்களையும் மேற்கோள் காட்டி பேசுவதை பிரதமர் மோடி அண்மைகாலமாக வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், சென்னை அரசு விழாவில் பேசும்போது, மகாகவி பாரதியாரின் வீரம் சொறிந்த கவிதையான,                                                                                                      ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

 என்ற பாடல் வரிகைளயும், ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான தமிழ் மூதாட்டி ஒளைவையாரின் பாடலான     வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்

 என்ற பாடல் வரிகளையும் சுட்டிக் காட்டி உணர்ச்சிப் பொங்க பேசினார்.

பிரதமர் மோடியின் உணர்ச்சிக்கரமான பேச்சு, விழா அரங்கில் இருந்தவர்களை மட்டுமல்ல, தொலைக்காட்சி வாயிலாக பார்த்த அத்தனை மக்களையும் புல்லரிக்க வைத்திருக்கும். ஆனால், அதே பாரதியார், வெறும் கவிதை வரிகளாக தனது உணர்வுகளை பார்க்காமல்,  அந்த வரிகளைப் போல ஆயுள் முடியும் வரை வாழ்ந்து காட்டிய ஒரு கவிதைக்கே கொள்ளி வைப்பதைப்போல, அரசு விழா மேடையில் புளாங்கிதம் அடைந்து, பொங்கி தீர்த்தாரே பிரதமர் மோடி, அந்த விடயம்தான், பகுத்தறிவாளர்களிடம், தந்தை பெரியாரின் வழிநடப்பவர்களிடம், மகாகவியின் கனவு என்றைக்காவது நிறைவேறாதா என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்த நாடுகளைப் போல, நாகரிகத்தின் பிறப்பிடமாக உள்ள நாடுகளில் வாழும் மனிதர்களைப் போல, தமிழ்நாட்டில் வாழ்பவர்களும், ஏன் இந்தியாவில் வாழ்பவர்களும் போற்றப்பட வேண்டும் என்று கனவு கண்டவர்கள்தான் மகாகவி பாரதியாரும், தந்தை பெரியாரும்.  அவ்விரு தலைவர்களும், அடிமை விலங்காக உள்ள சாதிய கட்டமைப்பில் இருந்துதான் முதலில் மக்கள் விடுதலைப் பெற வேண்டும். அடுத்து கல்வியில், அதற்கடுத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற வேண்டும். பிந்தைய இரண்டிலும் அவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்றால், முந்தைய சாதியக் கட்டமைப்பு சுக்குநூறாக உடைக்கப்பட வேண்டும். அதைதான் மானுடத்தை நேசித்த, போதித்த மகாகவி பாரதியார், தன் உயிர் மூச்சாக கருதினார்.

அடிமைத் தளைகளில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக அவர் எப்படி பொங்கினாரோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் சாதிய கட்டமைப்புகளில் இருந்தும் மனித சமுதாயம் விடுதலை பெறுவது முக்கியம் என்று உயிர்போகும் தருவாயிலும் போராடினார் மகாகவி பாரதியார். அதனால்தான்,

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதிகல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
என்று குழந்தைப் பருவத்திலேயே அந்த உணர்வு அழுத்தமாக பதிய வேண்டும் என ஓங்கி குரல் கொடுத்தார்.  

சாதி என்ற பிணி மனித குழந்தையே அழித்துவிடும் என்று நம்பினார் பாரதியார். அதனால்தான் நூற்றாண்டு கடந்தும் போற்றப்படும் மாமனிதராக இன்றளவிலும் பாரதியார் உயர்ந்து நிற்கிறார். அதைதான் தந்தை பெரியாரும் தன் இறுதி மூச்சுவரை வழியுறுத்தினர். கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சாதிக் கட்டமைப்புகள் உடைந்தால்தான், ஆறறிவு மனிதனுக்கு உண்மையான விடுதலை என்று உரக்க முழக்கினார் தந்தை பெரியார்.

ஆனால், பட்டியலினத்தில் உள்ள 7 பிரிவு மக்களை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரால் இனிமேல் அழைக்கப்படுவர் என்று சாதிப் பெருமையை பேசும், காட்டுமிராண்டித்தனமான ஒரு பாதையை அடையாளப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி என்று பொங்குகிறார்கள் பகுத்தறிவாளர்கள்.

தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் அனைத்து மக்களும் சாதிகளை கடந்த திரள வேண்டும் என்ற முழக்கம், தமிழகத்தில் இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மண்ணில்  பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், பல்வேறு பண்பாடுகளைக் கொண்டு ஒரு நாட்டின் தலைவராக இருப்பவர், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பெருமை என்பதை உலக நாடுகள் எல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ள மக்களுக்கு கல்விக்கண்ணை திறக்காமல், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண பாதை அமைத்து தராமல், சாதியின் பெயரைக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் என்று ஒரு நாட்டின் பிரதமரே சொல்வார் என்றால், அந்த நாட்டு மக்கள் இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் நாகரிகமடைந்த மக்கள் என்ற உயர்ந்த நிலையை எட்டவே முடியாது.

இப்படிபட்ட நேரத்தில்தான் தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பு முழக்கங்களை மீண்டும் மனதில் ஆழமாக பதிய வைத்து, சாதியற்ற சமுதாயத்தில் வாழ வேண்டும் என்ற இலக்கை நோக்கி தீர்க்கமாக பயணப்பட வேண்டும் என்று இன்றைக்கும் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நரக வாழ்வாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரகவாழ்வு மட்டுமல்ல; அதைவிடப் பலகொடிய கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில நான் மனிதனாக மதிக்கப் பெறுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழிச்சாதி வாழ்வை விட சுகமான வாழ்வு என்று கருதுவேன் என்கிறார் தந்தை பெரியார்.

இதுதான் மானுடத்தை நேசித்த மாமனிதன் தந்தை பெரியாரின் பொன்மொழிகள்.

ஆனால், இன்றைக்கு பாரதத்தை வழிநடத்துகிறவர் என்ன சொல்கிறார், சாதிப் பெருமையை பேசித் திரியுங்கள் என்கிறார். அதனால்தான் சொல்கிறார்கள் பகுத்தறிவாதிகள், தமிழகம் தந்தை பெரியார் மண் என்று அழுத்தம் திருத்தமாக…

தந்தை பெரியாரின் சிந்தனைக்கு மாறாக தமிழர்களை சாதியின் அடிப்படையில் பிரித்தாள, பெருமைப் பேசி திரிந்திட எவனொருவன் அனுமதிப்பான் என்றாலும், அழைத்துச் செல்ல முயற்சிப்பான் என்றாலும் அவன் தமிழினத்தின் எதிரி மட்டுமல்ல, மானுடத்தின் எதிரியாகவே பார்க்கும் மனப்பாண்மையை தந்தை பெரியார் கற்பித்திருக்கிறார்.

   பட்டியலின மக்களுக்கு, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இடஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தாலும்கூட, அந்த சலுகைகளின் பயன்களை முழுமையாக அனுபவிக்க முடியாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இன்றைக்கும் இருக்கிறது. அந்த மக்களின் வாழ்விடங்கள், இன்றைக்கும் கூட 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியை கண்டிடாமல், பழங்கால மக்களின் வாழ்விடங்களாகதான் காட்சியளிக்கின்றன.

அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்டவை முழுமையாக, முறையாக சென்றடையாத எத்தனையோ கிராமங்கள் இன்றைக்கும் தமிழகத்தில் உள்ளன. அதைவிட, அதிகமாக பிற மாநிலங்களிலும் உள்ளன. அடிப்படை கல்விக் கூட கிடைக்காமல்  காலம் காலமாக பிற சமூகத்தினர் முன்பு கூனிக் குறுகி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு, முதலில் உயர்க்கல்வியை சாத்தியமாக்குங்கள்.. பிறகு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பை கொடுங்கள். இரண்டையும் உருவாக்கித் தந்தால், அவர்களின் பொருளாதாரம் தானாக உயரும். அதன் மூலம் தனி மனிதன் மட்டுமல்ல, அந்த சமூகவே சாதிப் பெருமையை தூக்கி எறிந்துவிட்டு, தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தோடு, நாகரிகமான மக்களோடு ஐக்கியமாவார்கள். அந்த நிலையை என்றைக்கு தமிழகம் எட்டுகிறதோ, அன்று வரை தந்தை பெரியாரின் வீரம் கொண்ட மண்ணாகவே தமிழகம் இருந்து கொண்டிருக்கும்.

நிறைவாக, அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளோடு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறோம்..

உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்று திரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.

சாதி என்பது ஒரு எண்ணம். ஒரு நிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பௌதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்.

சாதி புனிதமானது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருக்கும் மதம்தான் எல்லாக் கேடுகளுக்கும் மூலகாரணம்.