Fri. Nov 22nd, 2024

கோவையில் ‘விடியலை நோக்கி ஓராயிரம் இளைஞர்கள்’ திமுகவில் இணையும் விழா, திமுகவுக்கு வாக்களிப்பது ஏன் என்னும் நூல் வெளியீட்டு விழா, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா இன்று (பிப். 13) நடைபெற்றது.

இதில், கோவை மாநகர மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலினை வெளியிட்டார். முதல் பிரதியை திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் ஆ. ராசா பேசியதாவது

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்று சொல்லி, நமது அடையாளத்தை தவிர்க்கும் வகையில், இந்துத்துவத்தின் பெயரால் மிகப்பெரிய சூழ்ச்சியை இங்கே நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

நாடு முழுவதும் உள்ள தொகுதிகளை பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி கைப்பற்றினாலும், தமிழகத்தில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. இதற்கு பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் தான் காரணம்.

1932-ம் ஆண்டுக்கு முன்பு வரை மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்றால், அவர்கள் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும். அதனை மாற்றி அமைத்தது திராவிடம். தற்போது சமஸ்கிருதம் போல் நீட் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்கிற நிலை உள்ளது. இதனை மாற்றியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும்.

மத்திய அரசு கொள்கையை மாநில அரசிடம் திணிக்க முயல்கிறது. இதனை தடுக்க திமுகவால் மட்டுமே முடியும்.

இவ்வாறு ஆ. ராசா கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஆ.ராசா பேட்டியளித்தார்.

விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, முதல்வர் பழனிசாமியின் அரசு, கடனை ரத்து செய்ய சாத்தியம் இல்லை என பதில் மனுவை தாக்கல் செய்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், திடீரென தேர்தல் நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதற்கு முழுக் காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் தான். ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடனை ரத்து செய்வோம்’ என ஸ்டாலின் அறிவித்ததால், முதல்வர் பழனிசாமி ரத்து செய்துள்ளார். விவசாய கடன் ரத்து செய்யப்பட்டதற்கான முழு நன்மையும் திமுகவுக்கே.

மத்திய அரசின் பட்ஜெட்டில் புதிய சாலை பணிகள் குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை. பழைய திட்டங்களை கவர்ச்சிக்காக அறிவித்துள்ளனர். வழக்கம் போல், தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட் தான்.

பிரதமர் நரேந்திரமோடியும், பாஜகவும் என்ன கூறினாலும், எதை செய்தாலும், அதை வரவேற்று, நல்ல திட்டம் என பேசக்கூடிய அடிமை அரசாக, முதல்வர் பழனிசாமி செயல்படுகின்றார் என்பதற்கு உதாரணமாக அவர்கள் பட்ஜெட்டுக்கு வரவேற்பு அளித்ததை எடுத்துக் கூறலாம்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நாங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதை சிபிசிஐடி விசாரித்து அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறினர். சிபிசிஐடி-யின் அந்த விசாரணை அறிக்கையை நாங்கள் கேட்டாலும், நீதிமன்றம் உத்தரவிட்டாலும் ஓராண்டாக தராமல் சிபிசிஐடி போலீஸார் தாமதப்படுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகை எந்த விதத்திலும் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இவ்வாறு ஆ.ராசா கூறினார்.