Sat. Nov 23rd, 2024

இல்லம் திரும்பிய மகிழ்ச்சியான நிகழ்வை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். ஒரு சில விநாடிகளிலேயே பல்லாயிரக்கணக்கானோர் அவரின் பதிவை பார்வையிட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்திய திரையுலகில் அளப்பரிய சாதனையை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, திரையுலகின் மிகப்பெரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு, நடிகர் ரஜினிகாந்திற்கு பால்கே விருதை வழங்கினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் கடந்த 28 ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் உயர்தர சிகிச்சைகளை அளித்தனர். மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட தொற்றின் காரணமாகவும், இருதயத்தின் இயக்கத்தில் உள்ள குறைகளை போக்கவும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கான மருத்துவமனையின் சிறப்பு பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல் நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது உறவினரும் நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினரும் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும், இரண்டொரு நாளில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கை தரும் வகையில் தகவல்கள் தெரிவித்தனர். ஆனால், அவர்களின் கருத்துக்கு மாறாக, ரஜினிகாந்த் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் விஷமிகள் பலர் வதந்திகளை பரப்பி வந்தனர்.

இந்த நிலையில், சற்றுமுன் சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர், போயஸ் கார்டன் இல்லத்திற்கு திரும்பினார். ஆரோக்கியமான உடல்நலத்துடன் காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், நடந்தே வீட்டிற்குள் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் போயஸ் கார்டன் திரும்பியதும், காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்ற புகைப்படத்தையும் பார்த்து அவரது ரசிகர்கள் நிச்சயம் நிம்மதியடைவார்கள்.

மேலும், உடல் ஆரோக்கியத்துடன் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிகழ்வின் மூலம், அவரது உடல்நிலை குறித்து பரப்பப்பட்ட பல்வேறு வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.