Sun. May 5th, 2024

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஆளுநர் மாளிகை மேற்கொண்ட நடவடிக்கைகளை, அரசியலோடு தொடர்புபடுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளே சிக்கலை ஏற்படுத்தி வருவது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கசிகிறது. இந்த தகவல் உண்மையா ?  ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் மூத்த அதிகாரி ஒருவரை நல்லரசு தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மிகுந்த மன வேதனையோடு அந்த அதிகாரி மனம் திறந்து பேசினார்.

தமிழக அரசாக இருக்கட்டும், மத்திய அரசாக இருக்கட்டும், ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி சாதாரண ஒரு நபர் தகவலை கேட்டாலே, மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய தகவல்களை, ஆவணங்களை வழங்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. அண்மையில், பிஎம்கேர் எனப்படும் கொரோனா காலத்தில் பிரதமர் மோடி திரட்டிய நிதி தொடர்பாக ஆர்டிஐ கேட்ட கேள்விகளுக்கும்கூட பிரதமர் அலுவலகமே பதில் அளித்துள்ளது.

இப்படி டெல்லி முதல் கன்னியாகுமரி வரை எந்தவொரு அரசின் நடவடிக்கைகளையும் சாதாரண மனிதராலேயே தெரிந்து கொள்ள  முடியும் என்கிறபோது, தமிழகத்தின் ஆளுநராக பதவி வகிப்பவர், அவரின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஒரு மாநிலத்தில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வது எப்படி, அந்த ஆட்சி நிர்வாகத்தில் தலையிடும் செயலாக இருக்க முடியும்.. இந்த சாதாரண நடைமுறையைக் கூட புரிந்து கொள்ளாமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கூட சிக்கலை ஏற்படுத்தவில்லை. அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தான் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது என்பதுதான் ஆளுநர் மாளிகையில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பின்னணி என்ன?

அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக, அதிமுக்கியத்துவம் வாய்ந்த மத்திய அரசின் துறைகளில் பணியாற்றியவர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அணுகுமுறை,  நிர்வாகம் பற்றியெல்லாம்  அவர் தனது அனுபவம் மூலம் முழுமையாக புரிந்து வைத்திருப்பவர். இருந்தாலும், நாகாலாந்து போன்ற  சின்னஞ்சிறிய மாநிலத்தில் இருந்து தமிழகம் போன்ற பெரிய மாநிலத்திற்கு நியமனம் செய்யப்படுகிறார்.

ஆளுநருக்கு தமிழகத்தை பற்றிய புரிதல் எப்படியிருக்கும்?

சமூக நீதி கொள்கை என்றால் என்ன? அது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பற்றியெல்லாம் அவர் படித்திருந்தாலும் கூட, தமிழக அரசு அதை எப்படி அமல்படுத்துகிறது என்பதை ஆளுநர்  புரிந்துகொள்ள, தமிழக அரசிடம் தானே கேட்க முடியும்.. அதேபோல, இந்தியாவுக்கே முன்மாதிரியான எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு காலம் காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. குடிசை மாற்று வாரியம், மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு, கலப்பு திருமணம், பள்ளிகளில் சத்துணவு திட்டம், இலவச பாடப்புத்தகம், இலவசக் கல்வி, இலவச மிதிவண்டி, இலவச கணினி போன்ற நூற்றுக்கணக்கான நலத் திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்துவதைப் போல, இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலத்திலும் செயல்படுத்தப்படுவதில்லை.

அதுபோல, ஆரம்ப சுகாதார நிலையங்களில் துவங்கி மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை இந்தியாவிலேயே சுகாதார துறையில் முதன்மை மாநிலமாக தமிழகம்தான் விளங்கி வருகிறது.

இப்படிபட்ட திட்டங்களை பற்றியெல்லாம் செய்தியாக, தகவல்களாக மட்டுமே ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிந்து வைத்திருக்க கூடும்.  தமிழக ஆளுநராக அவர் பொறுப்பு ஏற்றவுடன், தமிழக அரசின் செயல்பாடுகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டாமா? இதில் என்ன தவறு இருக்கிறது?  இப்படி நான் விளக்கம் சொன்னால் உடனே உங்களிடம் இருந்து ஒரு கேள்வி வரும். ஆளுநராக பதவியேற்று ஒரு மாத காலம் முடிவடைவதற்கு முன்பாகவே ஏனிந்த அவசரம் என்பதுதானே உங்கள் எண்ணம்… அதற்கும் பதில் சொல்கிறேன்.

வரும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் குடியரசுத்தலைவர் தலைமையில் அனைத்து மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளவுள்ளார். அந்த மாநாட்டில் தமிழக அரசின் செயல்பாடுகள், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமூக நல திட்டங்கள்,  நிறைவேற்றப்பட்டு வரும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள்,  நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி ஆளுநர் உரையாற்ற வேண்டாமா? இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் போது, தமிழக அரசு எப்படி செயல்பட்டு வருகிறது என்று ஆளுநர் எடுத்துக் கூறினால்தானே பிற மாநிலங்களுக்கு தமிழக அரசு  நிர்வாகத்தின் சிறப்புகள் தெரிய வரும். ஆளுநர் மாநாட்டு நிகழ்ச்சி நிரலையொட்டிதான் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள ஆளுநர் விரும்பினார்.

அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்வதைப் போல, உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவே ஆர்வம் காட்டாத ஊடகங்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாகவும் உண்மைக்கு மாறான ஒரு தகவலை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆளுநர் எந்த கடிதமும் தமிழக அரசுக்கு எழுதவில்லை. ஆளுநர் அலுவலகத்தில் இருந்து தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஆளுநர் மாளிகைக்கும், தமிழக அரசுக்கும் இடையே நடைபெறும் அலுவல் ரீதியான செயல்பாடுகளை கூட அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் விமர்சனம் செய்தால், தமிழ்நாட்டிற்குதான் பாதகமாக அமையும் என்பதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டிருந்தாலும் கூட, அரசியல் லாபம் கருதியோ அல்லது பரபரப்புக்காகவோ உள்நோக்கத்துடன் வன்மமாக செய்யும் பிரசாரத்தை எப்படி எடுத்துக் கொள்வது.

இதுவரை பொதுப்படையாக பேசினேன். இப்போது இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.

ஒரு மாநில அரசின் அனைத்து செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆளுநரின் அனுமதியில்லாமல், மாநில அரசு தனித்தே திட்டங்களை அமல்படுத்தி விட முடியாது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டை சொல்கிறேன். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்தோடு இணைப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அப்படி ஒரு பல்கலைக்கழகம் மற்றொரு பல்லைகழகத்தோடு இணைக்க வேண்டும் என்றால் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். அப்போதுதான் மாநில அரசின் நடவடிக்கை விரைவு பெறும்.

அதேபோலவே, தமிழ்நாடு மாநில தேர்வாணையத்திற்கு தலைவரை நியமனம் செய்ய, உறுப்பினர்கள் நியமனம் செய்ய ஆளுநர்தான் உத்தரவிட முடியும். இதைப்போல, எண்ணற்ற மசோதாக்கள் சட்டமாக மாற வேண்டும் என்றால் ஆளுநரின் ஒப்புதல் தேவை. இப்படி நிறைய திட்டங்கள் உள்ள நிலையில், சிறப்புமிக்க சில மசோதாக்களை சட்டமாக்க குடியரசுத் தலைவரின் அனுமதி வேண்டும் என்றால், அதை ஆளுநர் பரிந்துரையின் பேரில்தான் சட்டமாக்க முடியும்.

இப்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கான அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அதிகாரம் எத்தகையது என்பதை எளிதாக புரியும்படி சொல்கிறேன்.  முதல்வர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டங்களில் விவாதித்து எடுக்கப்படும் முடிவுகளின் உள்ளடக்கம் குறித்தும் ஆளுநருக்கு தெரியபடுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

ஆளுநரின் அதிகார வரம்பை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக புரிந்து வைத்திருப்பவர்தான். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் புதல்வரான அவருக்கு, கொள்கை ரீதியாக மத்திய அரசுடன் எப்படி முரண்படுவது, அரசு நிர்வாகம் ரீதியாக எப்படி மத்திய அரசுடனும், ஆளுநர் மாளிகையுடன் நட்பு பாராட்டுவது என்பதை நன்றாக அறிந்து வைத்திருப்பவர்தான். கடந்த 6 மாத கால ஆட்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, மாநில அமைச்சர்கள், துறை செயலாளர்கள் மத்திய அரசை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதை நினைவுப்படுத்திக் கொண்டால், ஒரு குழப்பமும் இருக்காது.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட போது, நம்முடைய சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லிக்கே நேரில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதேபோல தொழில்துறை, நகராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்களும் மத்திய அமைச்சர்களை அடிக்கடி சந்தித்து, மாநிலத்திற்கு தேவையான நிதிகளை, திட்டங்களை பெற்று வருகிறார்கள். மேலும், ஒவ்வொரு நாளும் தமிழக அரசின் பல்வேறு துறை செயலாளர்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சக செயலாளர்களோடு பேசி, தமிழகத்திற்கு தேவையான நிதிகளை, திட்டங்களை பெற்று வருவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி தேவை என்றால், மத்திய அரசின் துறை செயலாளர்கள் கேட்கிற அனைத்து விவரங்களையும் கொடுத்துதானே ஆக வேண்டும்.

இன்றைய நிலையில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இணக்கமான உறவுதான் இருந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன்தான் மாநிலத்தில் பல்வேறு வளர்த்சித் திட்டங்கள், நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள், ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகத்தில் நடைமுறையில் இருக்கின்றன.

இதை நான் சொல்லவில்லை, தற்போதைய மத்திய அரசும் மட்டுமல்ல, முந்தைய மத்திய அரசுகளும், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் முன்மாதிரி திட்டங்களை பிற மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு நிகழ்வுகளின் வாயில்களாக அறிவுரை வழங்கியதை எல்லாம் நாங்கள் அறிவோம்.

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்பதை  பிற மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் எப்படி தெரியும். ஆளுநர் மாநாடு போன்ற நிகழ்வுகளில் பேசப்பட்டால்தானே அது சாத்தியமாகும்.

ஒடிசா மாநிலத்தை பாருங்கள். மத்திய அரசின் நிதியுதவிகளை பெறுவதற்காக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் மிகுந்த ராஜதந்திரத்தோடு, மத்திய அரசோடும், குடியரசுத் தலைவரோடும் நட்புறவுடனேயே செயல்பட்டு வருகிறார்.

நல்லரசு வாயிலாக தமிழக அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் நிறைவாக ஒன்றை சொல்லி கொள்கிறேன். கலைஞரின் புதல்வரான முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி குறித்து யாரும் பாடம் நடத்த தேவையில்லை. அதே சமயம், முதல்முறையாக முதல்வராகியுள்ள அவர், கடந்த 6 மாத கால  செயல்பாட்டின் மூலம் தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான ஆட்சிதான் நடைபெறும் என்பதை பட்டுவர்த்தனமாக தெரிவித்துவிட்டார்.

முதல்வர் ஒரு அரசியல்வாதி போல செயல்பட விரும்பவில்லை. தமிழினத்தின் தலைவராக, தனது தந்தையை போல, உலகம் முழுவதும் வாழும் தமிழ் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவராக மாற வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு இருக்கிறது. அதன் வெளிப்பாடுகள்தான், முதல்வரின் ஒவ்வொரு சொல்லிலும், செயல்பாட்டிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை விரும்பாத முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள மூத்த அமைச்சர்கள் சிலரும், தமிழக அரசு நேர்மையான வழியில் சென்று, இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற பெயரெடுத்து விடக் கூடாது என்று குறுகிய மனப்பான்மை கொண்ட சில அரசு துறை அதிகாரிகளும் கூட்டணி அமைத்து செயல்படுகிறார்கள் என்பதைதான் ஆளுருக்கும், தமிழக முதல்வருக்கும் இடையே பகையுணர்வை மூட்ட முயல்வோரின் எண்ணமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் இயற்கையாகவே எழுவதை தவிர்க்க முடியவில்லை.  

அப்படியொரு சிந்தனையோடு அரசியல் செய்பவர்கள், சூழ்ச்சி செய்பவர்களின் எண்ணம் ஒருபோதும் வெற்றியடைய விட்டுவிடமாட்டார் நமது  முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் தமிழக அரசின் அதிகாரிகளுக்கு முழுமையாக உள்ளது .

ஆளுநர் மாளிகை போன்ற அதிகாரமிக்க இடத்தில் இருந்து கொண்டு அரசியல் பேசக் கூடாது. ஆனால், இன்றைக்கு சிலரின் முகத்திரையை கிழித்தாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை சொல்கிறேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, எத்தனை மாநில அரசுகளை கலைத்து இருப்பார்கள்..அப்படி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக தலைவர்கள்தான் இன்றைக்கு மாநில சுயாட்சி பற்றி உரக்க கத்துகிறார்கள்.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்ணா அறிவாலயத்திலேயே வருமான வரி சோதனையை ஏவிவிட்டார்கள். ஒருபக்கம் சோதனை நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது, அண்ணா அறிவாலயத்தில் தலைவர்களோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடத்தியவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். தேசிய அளவிலான கட்சிகள், மத்தியில் ஆட்சியில் இருந்தால், மாநில அரசுகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் விடவே மாட்டார்கள். காங்கிரஸின் கடந்த கால செயல்பாடுகளை எல்லாம் மறக்க கூடியவரா இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

முதல்வர் பனங்காட்டு நரி.. அரசியல் ரீதியான சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டார்.

காங்கிரஸுக்கு அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைப் பற்றி நான் எதுவும் சொல்லக் கூடாது என்று கருதுகிறேன். தற்போது சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவி கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவரின் பார்வையில் பட வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி எவ்வளவு மெனக்கெடுகிறார்.

இப்படிபட்டவர்தான் தமிழக ஆளுநருக்கு எதிராக பொங்குகிறார். இப்படிபட்டவர்களிடம் இருந்து உஷாராக இருக்க வேண்டியது நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அவருக்கு எல்லா அரசியலும் புரியும். அவர் கலைஞரின் வார்ப்பு. போலி மாநில சுயாட்சி போராளிகளின் சூழ்ச்சிக்கு எல்லாம் முதல்வர் பலியாகிவிடமாட்டார் என்று ஒரே மூச்சாக அந்த அதிகாரி பேசியதன் வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகியது.

.