பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு எதிரான புகார்கள் மீது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி செய்த பஞ்சாயத்தை கூட பொறுத்துக் கொண்ட அந்த துறை அமைச்சர் எ.வ.வேலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து நாள்தோறும் வரும் பிக்கல், பிடுங்கல்களை கண்டுதான் அதிகமாக எரிச்சல் அடைந்துள்ளார் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள். அவர் வசம் உள்ள இரண்டு துறைகளில்தான் கமிஷன் தொல்லை அதிகமாக இருப்பதாக வெளியுலகில் பரப்பப்படும் வதந்திகளை கண்டு நொந்து போய் விட்டாராம் அமைச்சர் எ.வ.வேலு.
துறை ரீதியான பஞ்சாயத்துகளால் தாங்க முடியாத தலைவலியை அனுபவித்து வரும் அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, சரண்டரான நிகழ்வை மிகுந்த வருத்தத்தோடு பேசுகிறார்கள் அமைச்சரின் நண்பர்கள். அவர்களிடம் பேசினோம். கடந்த பல நாட்களாக அமைச்சர் எ.வ.வேலு நிம்மதியின்றி தவித்து வரும் சோக கதையை விவரித்தனர்.
கடந்த பத்தாண்டு காலம் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் கவனித்து வந்தார். முதல்வராக 4 ஆண்டு காலம் அவர் பதவி வகித்ததையும் சேர்த்து ஒட்டு மொத்த பத்தாண்டு காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறையில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்காக அவர் பெற்ற கமிஷன், உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் என பல புகார்கள் கூறப்பட்ட போது கூட அந்த மனிதர் அலட்டிக் கொள்ளவில்லை.
கடந்த பத்தாண்டுகளில் இந்த இரண்டு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்து அதில் உள்ள தில்லுமுல்லுகளை கண்டு பிடிக்கவே பல மாதங்கள் ஓடிவிட்டன. மேலும், அந்த திட்டங்களின் லட்சணமும், அதன் ஒப்பந்ததாரர்களின் கோல்மால்களும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு. இதற்கிடையேதான், கடந்த காலத்தில் திட்ட பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களில் பெரும்பான்மையானோர் காந்தியின் வாரிசுகள் போல, தன் மீதே புகார்கள் அடுக்குவதை அமைச்சர் எ.வ.வேலுவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
நாளுக்கு நாள் அவரது துறையை குறி வைத்தே பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளால் மனம் வெறுத்துப் போன அமைச்சர் எ.வ.வேலு, கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உருக்கமாக ஒரு வேண்டுகோளை முன் வைத்தார். அவரது வாக்குமூலமாகவே தருகிறோம்.
இனிமேலும் சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ எனக்கு துளியும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சொத்துகள் இருக்கின்றன. மகன்கள் கல்வி நிறுவனங்களை கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களும் தங்கள் பொறுப்பில் உள்ள சொத்துகளே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் பதவியை கொடுத்து இருக்கிறீர்கள். இந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு திருவண்ணாமலை மாவட்ட மக்களை உள்ளடக்கிய தமிழக மக்களுக்கு என்னால் முடிந்த நல்ல காரியங்களை செய்துவிட்டு போகிறேன். அதனால், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை என இரண்டு துறைகளிலும் நிறைவேற்றப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வை, முதலமைச்சர் அலுவலகமே கவனித்து கொள்ளட்டும். எனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களுக்கு கூட நான் பரிந்துரை செய்ய மாட்டேன். துறை செயலாளர்கள் போல துறையை கவனித்து கொள்ளும் பணியை மட்டுமே என்னை செய்ய அனுமதித்தால் போதும் என்று ஒட்டுமொத்தமாக சரண்டர் ஆன மாதிரி உருக்கமாக பேசியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
அவரின் விரக்தியான பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆறுதலான வார்த்தைகளை கூறிவிட்டு, யார் என்ன சொன்னார்கள், என்ன விஷயம் என்றும் கேட்டிருக்கிறார். அப்போதுதான், தனது துறைகளில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் தலையீடுகள் அதிகரித்து வருவது குறித்து மனம் திறந்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களில் பலர், நேர்மையற்ற முறையில் தொழில் செய்து வருவதை அறிந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு, திமுக ஆட்சி அமைந்த நாள் முதலாக அவர்களை புறக்கணித்தே வந்துள்ளார். ஆனால், அவர்களோ, பல்லாண்டு காலம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனின் ஆதரவு பெற்றவர்கள். அவர்கள் நேரடியாக அவரிடம் போய் புலம்பியுள்ளனர். அதனை கேட்ட அமைச்சர் துரைமுருகன், தனக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்திருக்கிறார். இதையெல்லாம் குற்றச்சாட்டாக இல்லாமல், தலையீடுகள் அதிமாக இருப்பதால், துறை ரீதியிலான பணிகளையே நிம்மதியாக மேற்கொள்ள முடியவில்லை என நொந்து கொண்டுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
மேலும், பொதுப்பணித்துறையில் இருந்து நீர்வளத்துறையை தனியாக பிரித்த நாளில் இருந்தே இரண்டு துறைகளுக்குமான அதிகாரிகள், தனித்தனி அலுவலகங்களில் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர் எ.வ.வேலு வசம் பொதுப்பணி துறை இருந்தாலும் கூட அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் கூட, நீர்வளத்துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரியின் ஒப்புதல் வேண்டுமாம். இப்படிபட்ட சிக்கலால், தனது துறையில் புகாருக்கு உள்ளாகும் பொதுப் பணித்துறை அதிகாரிகளை கூட உடனுக்குடன் பணி மாறுதல் செய்ய முடியவில்லை. பொதுப்பணித்துறையில் இருந்து அனுப்பப்படும் இதுபோன்ற கோப்புகளை வேண்டும் என்றே நீர்வளத்துறை அமைச்சர் கிடப்பில் போட்டு வருகிறார்.
பொதுப்பணித்துறை தனித்து இயங்கும் வகையில், நீர்வளத்துறையின் உயரதிகாரியிடம் உள்ள அதிகாரத்தை மாற்றியமைத்து, பொதுப்பணித்துறை உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு, தனது துறையில் உள்ள நிர்வாக ரீதியிலான சிக்கல்களை விரிவாக கூறியுள்ளார்.
அமைச்சர் எ.வ.வேலுவின் கோரிக்கை குறித்து கேட்டறிந்த முதல் அமைச்சர், தனது செயலாளர்களிடம் பேசி தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததுடன், கட்சியிலும் ஆட்சியிலும் சீனியர் என்ற முறையில் அமைச்சர் துரைமுருகனுக்கு எல்லா விதமான மரியாதைகளையும் கொடுத்து வருகிறேன். ஆனால், தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் அவர் தலையிட்டு சிக்கலை ஏற்படுத்துகிறார். அவரைப் போலவே, அவரது மகன் கதிர் ஆனந்த்தும் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இருவருக்கும் பலமுறை அறிவுரை கூறியாகிவிட்டது. நடவடிக்கை எடுத்தால்தான் திருந்துவார்கள் என்று நிலைக்கு தள்ளிவிடுவார்கள் போல் இருக்கிறது என்ற வகையில் முதல்வர் நொந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளன என்கிறார்கள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமான நண்பர்கள்.
திமுக ஆட்சி பதவியேற்று ஆறு மாத காலம் நிறைவடைவதற்கு முன்பே இவ்வளவு குழப்பங்களா?