கூலிக்கு மாரடிக்கிறவர் தனது செயல்பாடுகளை முதலில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்….
சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி….
சேலம் புறநகர் மாவட்ட செல்வி ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பி வருகின்றன. அந்த வரிசையில் நாஞ்சில் சம்பத்தும், ஆர்.இளங்கோவனுக்கு எதிராக ஆவேசமாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அல்லக்கை என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதேபோல நேற்றும், தொலைக்காட்சி விவாதத்தின் போதும் அதே வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதுடன், ஆர்.இளங்கோவனை ஒருமையில் பேசியதுடன், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வரும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியையும் ஒருமையில் பேசி, தரக்குறைவான விமர்சனத்தை முன்வைத்தார்.
ஊடக விவாதங்களில் அதிமுகவினர் பங்கேற்க அக்கட்சித் தலைமை தடை விதித்திருக்கும் நிலையில், அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பதை உணர்ந்திருந்த போதும், தனது விமர்சனத்திற்கு அதிமுக தரப்பில் இருந்து உடனடியாக மறுப்பு வராது என்று தெரிந்திருந்த போதும் கூட கண்ணியத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு, தரக்குறைவான வாதத்தையே தொடர்ந்து முன் வைத்தார், நாஞ்சில் சம்பத்.
ஆனால், அவரே எதிர்பார்த்திராத நேரத்தில் மூத்த ஊடகவியலாளரும், பாசத்திற்குரிய சகோதரருமான சத்யாலயா ராமகிருஷ்ணன், சுடச்சுட பதிலடி கொடுத்தார்.
அதிமுகவில் உள்ள ஒரு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களில் ஒருவர் கூட, துப்பினால் துடைத்து விட்டு போவோம் என்று சொல்லிவிட்டு போகும் அளவிற்கு மானங்கெட்டவர்கள் இல்லை என்று பொருள்பட கூறி நாஞ்சில் சம்பத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையை என்று கூட சொல்லமாட்டேன், அவரது பிறப்பையே அர்த்தமற்றதாக்கிவிட்டார்.
ஊடகங்கள் முன்பு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் பேசும்போது கூட பேரறிஞர் அண்ணா கற்பித்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளின் அடிப்படையில்தான் வார்த்தை பிரயோகங்கள் இருக்க வேண்டும்.
யாகாவாராயினும் நாகாக்க…. எனும் குறளை நாஞ்சில் சம்பத்திற்கு நான் நினைவூட்ட தேவையில்லை.
நாஞ்சில் சம்பத்தின் அண்மைக்கால செயல்பாடுகள் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நடவடிக்கைகளுக்கு ஒப்ப இருப்பதாகதான் பலர் கருதுகிறார்கள்.
ஆர்.இளங்கோவனை பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அதற்கு முன்பு அவரவர், நமக்கு அந்த தகுதியிருக்கிறதா? என்று சுயபரிசோதனை செய்து பார்த்து கொள்ள வேண்டும்.
ஆர்.இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை பற்றி இரண்டு செய்தி கட்டுரைகள் நல்லரசுவில் பதியப்பட்டன. இரண்டு செய்திகளின் தலைப்புமே வித்தியாசமானதுதான். அதில் இடம் பெற்றிருந்த கருத்துகளும் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக எழுதப்பட்டவை அல்ல. அவரின் செயல்பாடுகள் பற்றிய உண்மைகளை நெருக்கமாக அறிந்து வைத்திருப்பதால்தான், அப்படி எழுத முடிந்தது.
சரி, நாஞ்சில் சம்பத்தை பற்றி இப்போது ஏன் எழுத வேண்டும்?
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, அதிமுகவை ஆதரித்து மாநிலம் முழுவதும் பரப்புரை செய்தவர் நாஞ்சில் சம்பத். அவரின் பிரசாரத்திற்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள்தான் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார்கள். அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். இதற்கெல்லாம் செலவழிக்கப்பட்ட பணம், அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது சொந்த பணத்தில் இருந்து கொடுத்தது கிடையாது.
அரசியல் மூலம் சம்பாதித்த பணத்தைதான் நாஞ்சில் சம்பத்திற்கு அனைவரும் கொடுத்தார்கள். செலவழித்தார்கள். அப்படி நேர்மையான வழியை தவிர்த்து, முறைகேடாக சம்பாதித்த பணத்தில்தான் நாஞ்சில் சம்பத் குளிர் காய்ந்தார். அவரது குடும்பத்தினரின் செலவுகளையும் சமாளித்தார். அன்றைக்கு அப்படி அவருக்கு படியளந்தவர்களில் ஆர்.இளங்கோவனும் ஒருவர்.
2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயா டிவியில் நான் பணியாற்றி வந்தேன். எனது சொந்த விருப்பத்தின் பேரில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் நிலவரங்களை தெரிந்து கொள்ள சென்றேன். எடப்பாடி, மேட்டூர் தொகுதிகளை சுற்றிவிட்டு, கெங்கவள்ளி தொகுதிக்கு சென்றேன். அந்த தொகுதி உள்பட ஆத்தூர், ஏற்காடு ஆகிய தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் ஆர்.இளங்கோவன்தான். அவரை சந்தித்தேன்.
அன்றைய தினம், நாஞ்சில் சம்பத், ஆத்தூர், கெங்கவள்ளி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொண்டார். வெறும் வார்த்தை அலங்கார பேச்சுகள்தான். அன்றைய தினம்தான் செல்வி ஜெயலலிதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த வாக்குறுதிகள் மற்றும் இளங்கோவனுக்கு வந்த தகவல்கள் ஆகியவற்றை கோர்வையாக துண்டுச் சீட்டில் எழுதி நாஞ்சில் சம்பத்திடம் கொடுக்கப்பட்டது. அதை வைத்துதான் அவர் பரப்புரை மேற்கொண்டார்.
மாலை 6 மணிக்கு துவங்கிய பரப்புரை, இரவு 10 மணிக்கு முடிந்தது. நாஞ்சில் சம்பத் சிரமமின்றி பரப்புரை செய்வதற்கான சொகுசு வாகனம், தங்குவதற்கான இடம் என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். எனக்கு தெரிந்து ஒரு இடத்தில் பேசுவதற்கு 25000 ரூபாய் என்ற அடிப்படையில் 6 மணிநேர உழைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நாஞ்சில் சம்பத்திடம் மிகுந்த மரியாதையுடன் வழங்கியவர் ஆர்.இளங்கோவன். அன்றைக்கு தெரியவில்லை இளங்கோவன் அல்லக்கை என்று நாஞ்சில் சம்பத்திற்கு…
தனக்கு சொந்தமான விவசாய நிலையத்தில் விவசாயம் செய்து நேர்வழியில் சம்பாதித்து, அந்த பணத்தைதான் இளங்கோவன் தனக்கு தருகிறார் என்று நாஞ்சில் சம்பத் நினைத்து கொண்டார் போலும்…
கூலிக்கு மாரடிக்கிற நாஞ்சில் சம்பத்தை விடுவோம்.
ஆர்.இளங்கோவன் எப்படிபட்டவர்?
2004 ஆம் ஆண்டில் நாளிதழ் ஒன்றுக்காக சேலத்தில் பணிபுரிந்த நான், ஆர்.இளங்கோவனின் சொந்த ஊரான புத்திரகவுண்டம்பாளையம் வழியாகதான் ஆத்தூருக்கு செல்வேன். சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ள, நகராட்சி அந்தஸ்தோடு இருக்கும் ஆத்தூர் நகரத்தில் நாளிதழின் விற்பனையை அதிகரிப்பதற்காக அங்கேயே தங்கி மூன்று மாதங்கள் பணியாற்றினேன். அப்போதைய அதிமுக நகரச் செயலாளர் மோகன், நகராட்சி திமுக சேர்மன் பாலசுப்பிரமணியம்( பெயரில் சிறு மாற்றம் இருக்கலாம்). இருவரும் கூட்டணி வைத்து கொள்ளையடித்தார்கள். அவற்றை செய்தியாக்கியபோது ஆத்தூரே பரபரப்பானது.
யார் செய்தி எழுதுகிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு என் பணி இருந்தது. அப்போது ஆத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவைச் சேர்ந்த மஞ்சினி முருகேசன் இருந்தார். அதிமுக, திமுக, காங்கிரஸ் என பாரபட்சம் பாராமல் நாளிதழில் செய்தி வெளியானது. அன்றைய காலத்தில் ஆர்.இளங்கோவனை பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அப்போது அவர் மஞ்சினி முருகேசனிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். எம்எல்ஏவிடம் எனக்கு அறிமுகம் இருந்தது. இளங்கோவன் எப்படி எம்எல்ஏவிடம் ஒட்டிக் கொண்டார் என்பது பற்றி பின்னாட்களில் தகவல்கள் கிடைத்தன. 10 ஆண்டுகளில், அதாவது 2014 ஆம் ஆண்டில் அபார வளர்ச்சியை எட்டியிருந்தார் ஆர்.இளங்கோவன்.
2014 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்னை ஜெயா டிவியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது சேலத்தில் இருந்து எனக்கு ஒரு கைபேசி அழைப்பு வந்தது. அதன் சுருக்கம் இதுதான்.
சார். ஆத்தூர் பகுதியைச் சார்ந்தவன் நான். டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். எனது ஊரில் உள்ள மற்றொரு கடைக்கு பணி மாறி செல்வதற்காக இளங்கோவனை சந்தித்தேன். 50 ஆயிரம் ரூபாய் கேட்டார். ஒப்புக் கொண்டதால், என்னை பரிந்துரை செய்தார். ஒரு சில நாட்களிலேயே திமுகவைச் சேர்ந்த மேற்பார்வையாளர் ஒருவர் 75000 ரூபாய் கொடுத்து, நான் பணிமாறுதல் கேட்டிருந்த கடைக்கே இளங்கோவன் சிபாரிசு செய்துள்ளார். நான் அதிமுககாரன். உறுப்பினர் அட்டையெல்லாம் வைத்திருக்கிறேன். கூடுதலாக 25000 ரூபாய்க்காக நம்பிக்கை துரோகம் செய்கிறார் இளங்கோவன் என்று புலம்பினார்.
சேலத்தில் இருந்து அந்த தொலைபேசி அழைப்பு வராமல் போய் இருந்தால் ஆர்.இளங்கோவனைப் பற்றி இன்றைக்கு இப்படியெல்லாம் எழுதும் சந்தர்ப்பமே அமைந்திருக்காது.
அதுவரை நேரிலோ, கைபேசி வாயிலாகவோ பேசி பழகியிராத ஆர்.இளங்கோவனை, முதல்முறையாக கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எனது குற்றச்சாட்டை மறுத்தார். அதிமுக பிரமுகராக இருக்கும் நீங்கள், இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளலாமா? என சத்தம் போட்டேன். கடுமையான வார்த்தைகளைதான் பயன்படுத்தினேன். கைபேசி இணைப்பை துண்டித்த இளங்கோவன், என்னை பற்றி சேலத்தில் உள்ள ஜெயா டிவி நிருபர்களிடம் விசாரித்துள்ளார்.
மறுநாள் என்னை தொடர்பு கொண்ட அவர், அதிமுகவைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கே பணிமாறுதல் பெற்று தருவதாக உறுதியளித்தார். நாட்கள் நகர்ந்தன. செல்வி ஜெயலலிதா உள்பட நால்வர் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு வாரத்திற்குப் பிறகு சேலம் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. சொன்ன சொல்லை இளங்கோவன் மீறுகிறார். திமுவைச் சேர்ந்த மேற்பார்வையாளரைதான் பரிந்துரை செய்துள்ளார் இளங்கோவன். இரண்டொரு நாளில் தான் விரும்பிய கடையில் திமுகவைச் சேர்ந்த மேற்பார்வையாளர் பணியில் சேர்ந்துவிடுவார் என்று புலம்பினார்.
ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற நான், அந்த மேற்பார்வையாளரை சென்னைக்கு வரவழைத்து, அப்போது டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக இருந்த சவுண்டைய்யா ஐஏஎஸ்ஸிடம் அழைத்துச் சென்று நடந்த உண்மைகள் அனைத்தையும் சொன்னேன். எனது தரப்பில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட அவர், பணிமாறுதல் கோரும் விண்ணப்பத்தில் கைப்பட பரிந்துரை செய்து, சேலம் மண்டல டாஸ்மாக் மேலாளருக்கு (எஸ்ஆர்எம்) ஃபேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். இப்படிபட்ட நிகழ்வின் மூலம்தான் ஆர்.இளங்கோவன் எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு எப்போது அழைத்தாலும் சொல் தலைவா என்றுதான் ஆர்.இளங்கோவன் குறிப்பிடுவார்.
தலைமைச் செயலகத்தில் என்னை சந்திக்கும் போது ஒன்றிரண்டு அதிமுக அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று மிகுந்த மரியாதை கொடுத்தே என்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆர்.இளங்கோவன். ஆனால், அவர் மூலம் நான் சிறியளவிலான ஆதாயமும் அடைந்ததில்லை. 2011 அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த நாள் முதல், அவரின் வளர்ச்சி வேகமெடுத்தது. இன்றைக்கு விஸ்வரூபமாக காட்சியளிக்கிறார் இளங்கோவன் என்றால் அதற்கு முக்கிய காரணம், அவர் மீது எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைதான்.
செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து சசிகலா குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால், ஒத்த பைசா குறையாமல், ரகசியமாக பயணித்து ஒருவருக்கு ஒருவர் தெரிந்துவிடாமல் கச்சிதமாக கொடுத்து வந்தவர்தான் இளங்கோவன். அப்படிபட்ட இளங்கோவனை அல்லக்கை என்று சொல்கிற நாஞ்சில் சம்பத், அவர் மூலம் ஊழல் பணத்தை வாங்கி குவித்த சசிகலா குடும்ப உறுப்பினர்களை குற்றம் சாட்டுகிற ஆண்மை இருக்கிறதா? அவருக்கு என்பதுதான் எனது கேள்வி…
எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சரான பிறகு அவரை நேரில் சந்தித்ததே கிடையாது. இன்றைக்கும் அதே நிலைதான். ஆனால், ஆர்.இளங்கோவனை ஒரே ஒருமுறை தலைமைச் செயலகத்தில் சந்தித்து இருக்கிறேன். தலைமைச் செயலாளர் அறையில் இருந்து வெளியேறி பத்து மாடி கட்டடமான நாமக்கல் மாளிகை செல்லும் பாதையில் அவரை சந்தித்தேன். அப்போது அவரது பின்னால் 20 பேர் வந்தார்கள். தற்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸிடம் அவர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் சந்தித்தேன். அப்போதும் செய்தி தொடர்பாகதான்.
அதற்கடுத்து, 2019 ஆம் ஆண்டில் நான் பணிபுரிந்த அச்சு ஊடகத்திற்கு அவரைப் பற்றி நிழல் முதல்வர் என்று தலைப்பிட்டு ஒரு செய்திக் கட்டுரை கொடுத்தேன். அந்த கட்டுரையில் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் அனைத்தையும் எழுதி, அவரின் விளக்கத்தையும் பதிவு செய்திருந்தேன். ஆனால், ஆர்.இளங்கோவனைப் பற்றி நான் கொடுத்த செய்திக் கட்டுரை பிரசுரிக்கப்படவில்லை. நிழல் முதல்வராக வலம் வருகிறீர்களாமே? என்று நான் கேட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே இளங்கோவன் சொன்ன பதில், தலைவா., என்னை அழிச்சிடாதே என்பதுதான்.
2016 ல் எப்படி சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றினாரோ, அதைவிட பலமடங்கு அதிகமாக 2021 சட்டமன்றத் தேர்தலில் வேலை பார்த்தவர் ஆர்.இளங்கோவன். சேலம் மாவட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளை விட, கூடுதலாக பல தொகுதிகளில் வேலை பார்த்திருக்கிறார். அதுவும், சேலம் மாவட்ட திமுகவில் மிகப்பெரிய பொறுப்புகளில் அமர வைக்கப்பட்டவர்களை, மீசையை முறுக்கி கொண்டு திரிந்தவர்களை எல்லாம் கூட விலைக்கு வாங்கி, 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுகவும் கூட்டணி கட்சியும் வெற்றிப் பெறுவதற்கு உண்மையான அதிமுக விசுவாசத்தோடு உழைத்தவர்தான் ஆர்.இளங்கோவன்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்காதவர்களும், நேர்வழியில் மட்டுமே பணத்தை ஈட்டுபவர்களும் ஆர்.இளங்கோவனை விமர்சனம் செய்யலாம். மற்றவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா?
நிறைவாக, சட்டம் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்கிறதா? காத்திருப்போம்.
ஆனால், ஆர்.இளங்கோவன் என்ற தனிமனிதரோடு பழகிய நாட்களை வைத்து நான் முடிவுக்கு வந்திருப்பது இதுதான்.
நாலு பேருக்கு நல்லது நடக்கும் என்றால் எதுவும் தப்பில்லை என்ற நாயகன் திரைப்பட வசனத்திற்கு ஏற்பதான் ஆர்.இளங்கோவன் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்…
உப்பு தின்னவர் தண்ணி குடிக்கப் போகிறார்….
Super sir