வேலூர் மாவட்ட அரசியலில் இருந்து திமுக பொதுச் செயலாளராக, திமுகவில் இரண்டாம் நிலைக்கு வந்துவிட்ட பிறகும்கூட அமைச்சர் துரைமுருகனின் குணம் மாறவில்லை என்பதற்கு அண்மைக்கால உதாரணம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகிகள் மோதிக் கொண்டதை சொல்லலாம் என்கிறார்கள் அவரது தீவிர ஆதரவாளர்கள்.
ராணிப்பேட்டை நீங்கலாக, வேலூர், திருப்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்து தந்தைக்கும், தனையனுக்கும் எதிராக நாள்தோறும் கிளம்பும் புகார்கள், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் எங்குமே நடைபெற்றிராத கொடூரம் என்கிறார்கள் காட்பாடி திமுக நிர்வாகிகள்.
தங்களுக்கு துதிபாடுபவர்களுக்கு பதவியை பெற்று தருவதற்காக அமைச்சர் துரைமுருகனும் அவரது மகனுமான கதிர் ஆனந்த் எம்.பி.யும் எவ்வளவு கீழ்த்தரமான அரசியலை கையில் எடுத்துள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்வுகள், வேலூர் மாவட்டத்தை கடந்து தமிழகம் முழுவதும் பரவி, சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது.
அமைச்சர் துரைமுருகன் பாணியில் என்று கூட சொல்ல முடியாது, அதைவிட கேவலமான அரசியலை கையில் எடுத்திருக்கிறார் கதிர் ஆனந்த் என்பதுதான் உச்சகட்ட வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் வேலூர் மாவட்ட திமுக முன்னோடிகள். உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து, தலைவர், துணைத் தலைவர்கள் பதவியேற்ற பிறகும் கூட, கதிர் ஆனந்த்தின் கீழ்த்தரமான அரசியல் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி, திமுகவுக்கே மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கிறது என்று நொந்து கொள்கிறார்கள் அவர்கள்.
குறுக்கு வழியில் பணம் படைத்தவர்களுக்கு தகுதி இருக்கிறதோ, இல்லையோ, திமுக தலைமை மீது விசுவாசம் இருக்கிறதோ இல்லையோ அதைபற்றியெல்லாம் தந்தைக்கும் கவலைகிடையாது. தனையனுக்கும் கவலை கிடையாது. அவர்கள் மூலம் தங்களுக்கு ஆதாயம் என்றால், கட்சிக்காக உயிரை கொடுத்து பணியாற்றி வரும் முன்னோடிகளின் வயிற்றில் அடிக்கும் மாபாதக செயல்களை இருவருமே தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதன் உச்சக்கட்ட கொடுமைதான், கதிர் ஆனந்த் பற்றி தற்போது வெளியாகியிருக்கும் தகவல் என்கிறார்கள் காட்பாடி திமுக முன்னோடிகள்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை தனது புதல்வர் கதிர் ஆனந்திடம் ஒப்படைத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். இந்த விவகாரத்தில், அந்த மாவட்டத்தின் திமுக செயலாளராக இருக்கும் நந்தகுமார் எம்எல்ஏ ஒதுங்கி கொள்ள, கதிர் ஆனந்த் தன் இஷ்டத்திற்கு பூந்து விளையாடி இருக்கிறார்.
காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு மொத்தம் 21 கவுன்சிலர்கள். அதேபோல, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் அதே எண்ணிக்கையிலான கவுன்சிலர்கள்தான். ஆக மொத்தம் 42 கவுன்சிலர்கள் பதவிக்கு வேட்பாளர்களை திமுக சார்பில் நிறுத்த, அந்தந்த பகுதியைச் சேர்ந்த திமுக முன்னோடிகளை அழைத்து, தேர்தலில் செலவு செய்வதற்கு உங்களுக்கு எல்லாம் தகுதியிருக்கிறதா என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, ஒவ்வொரு வேட்பாளரிடம் இருந்தும் தலா 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளார்.
அதாவது ஒரு ஒன்றிய கவுன்சிலருக்காக வார்டில் 5000 வாக்குகள் என்ற அடிப்படையில் ஒரு வாக்குக்கு ரூ 500 வீதம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு ஏற்ப பணம் கேட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட எப்படியாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து 42 வேட்பாளர்களில் பெரும்பான்மையானோர் அடித்து பிடித்து தங்க நகைகளை, வீடு, நிலம் ஆகியவற்றின் பத்திரத்தை அடகு வைத்து அவரவர் சக்திக்கு ஏற்ப, லட்சக்கணக்கில் பணம் கட்டியுள்ளனர். இந்த வகையில் மட்டும் மொத்தமாக 6 அல்லது 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளார் கதிர் ஆனந்த் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அதுபோலவே, காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் பதவியை பெற்று தருவதாக கதிர் ஆனந்த் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதால், நடமாடும் நகை கடை வேல்முருகன் ஒரு கோடி ரூபாய் மதிப்பிற்கு மேலான சொகுசு காரை பரிசளித்திருக்கிறாராம். இதேபோல, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கும் ரேட் பேசி முற்பட, அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார், மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ.
42 கவுன்சிலர்களிடமும் தேர்தல் செலவுக்காக ஒட்டுமொத்தமாக பணத்தை வாங்கி தனது கல்லாவில் கதிர் ஆனந்த் நிரப்பி கொண்ட நேரத்தில், வேலூர் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமித்தது. களத்திற்கு வந்த அவர், ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட ஒரு திமுக வேட்பாளரை கூட செலவு செய்ய விடாமல், அன்றாட தேர்தல் செலவு, வாக்காளர்களுக்கு பணம் என கோடிக்கணக்கில் வாரி இறைத்திருக்கிறார்.அமைச்சர் செந்தில் பாலாஜி.
தேர்தலுக்கான மொத்த செலவையும் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துக் கொண்டதால், வேட்பாளர் தேர்வின் போது, கதிர் ஆனந்திடம் கொடுத்த தொகையில் சல்லிக்காசு கூட வேட்பாளர்கள் ஒருவருக்கும் திருப்பி தரப்படவில்லை. தேர்தல் பரபரப்பில் வெற்றி பெற்றால் போதும் என்று இரண்டு ஒன்றியங்களிலும் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள், அவரவர் சக்திக்குட்பட்டு கூடுதலாக தேர்தல் செலவுகளை செய்துள்ளனர்.
இரண்டு ஒன்றியங்களிலுமே திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய நிலையில், கவுன்சிலர்களாக தேர்வான திமுக நிர்வாகிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அவரை தவிர வேறு எந்தவொரு அமைச்சரையும் தேர்தல் பொறுப்பாளராக நியமித்து இருந்தாலும், காட்பாடி, கே.வி.குப்பத்தில் திமுகவின் வெற்றி கேள்விக்குறியாக மாறியிருக்கும் என்கிறார்கள் வெற்றியாளர்களான திமுக கவுன்சிர்கள்.
வெற்றி விழா கொண்டாட்டங்கள் முடிந்த பிறகுதான் திமுக கவுன்சிலர்கள் அனைவருக்கும் கதிர் ஆனந்தின் மோசடி விவகாரம் தெரியவந்திருக்கிறது. தங்களிடம் வாங்கிய லட்சக்கணக்கான ரூபாயில் ஒரு பைசாவை கூட தேர்தல் செலவுக்காக கதிர் ஆனந்த் செலவிடவில்லை, அமைச்சர் செந்தில் பாலாஜியை செலவு செய்ய வைத்து தந்தையும், தனையனும் தங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமானதையடுத்து ஆவேசமாகியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, திமுக கவுன்சிர்கள் அனைவரும் கதிர் ஆனந்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இப்படி உள்கட்சிக்குள்ளேயே தனக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை கிளம்பியிருந்த போதும், அதை பற்றி துளியும் கவலைப்படாமல் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு, கொழுத்த பணம் படைத்த நடமாடும் நகை கடையை நிறுத்தி வெற்றி பெறவைத்து விட்டார் கதிர் ஆனந்த். ஆனால், கே.வி. குப்பத்தில் ஒன்றிய துணைத் தலைவர் பதவி தருவதாக வாக்குறுதி அளித்து 50 லட்சம் ரூபாய் வரை ஆட்டையை போட்ட தனையனுக்கு கே.வி.குப்பத்தில் சறுக்கல் ஏற்பட்டுவிட்டது.
கதிர் ஆனந்த் பரிந்துரைத்த நபருக்கு துணைத் தலைவர் பதவி கிடைக்கவில்லை. வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ.வின் பரிந்துரையின் பேரில் வேறொரு பெண் கவுன்சிலர், துணை தலைவராக வெற்றி பெற்றுவிட, கதிர் ஆனந்திடம் பணம் கொடுத்த பெண் கவுன்சிலரின் கணவர், கடந்த 21 ஆம் தேதி கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் வேட்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட இருவரிடமும் சண்டை போட்டுள்ளார். இந்த விவகாரம் காவல்நிலையத்திற்கு சென்றவுடன், கதிர் ஆனந்தின் தலையீட்டால் அங்கு சமரசம் நடைபெற்றுள்ளது.
இந்த பிரச்னை வெடித்தவுடன் ஒட்டுமொத்தமாக இரண்டு ஒன்றியங்களிலும் வேட்பாளர்களாக களம் இறங்கிய திமுக பிரமுகர்கள், தாங்கள் கொடுத்த லட்சக்கணக்கான ரூபாயை உடனடியாக திருப்பி தர வேண்டும். இல்லையென்றால் கும்பலாக சென்னைக்கு சென்று அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராகவும், கதிர் ஆனந்த் எம்.பிக்கு எதிராகவும் முழக்கம் எழுப்புவோம் என்றும் ஆவேசமாக பேச தொடங்கியிருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்த தனது தந்தை மூலம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் கதிர் ஆனந்த் என்பதுதான் வேலூரில் இன்றைய ஹாட் டாக்…