Sat. Nov 23rd, 2024

திராவிடம் குறித்து இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை. அதை சொல்லி கொடுக்காதது நமது தவறுதான். சுயமரியாதை என்பதன் மூலம் நமக்கு பல்வேறு உரிமைகள் கிடைத்தது. பெரியாரை மறந்தால் தமிழினம் அழிந்து போகும்..

இப்படி உணர்ச்சி பொங்க முழங்கி இருப்பவர் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்.

வேலூரில் நேற்று நடைபெற்ற கற்போம் பெரியாரையும், ஆர்எஸ்எஸ் எனும் டிரோஜன் குதிரை ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில்தான் இப்படி பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

மேடையில் ஒரு பேச்சு, உட்கட்சியில் சாதி வெறியோடு அரசியல் செய்வது என இரட்டை வேடத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன், உலக மகா நடிகனாகிவிட்டார் என்று சிரிக்கிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.

என்ன விவகாரம்?  நல்லரசுக்கு அறிமுகமான வேலூர் திமுக முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

அமைச்சர் துரைமுருகனின் சாதி வெறியையும், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு சொந்த கட்சியான திமுக நிர்வாகிகளுக்கே படுகுழி வெட்டிய கதையை விலாவாரியாக விவரித்தனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர் துரைமுருகனும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி.யும் செய்த சதி திட்டங்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று.

கடந்த 22 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் திமுகவினர் இருகோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொண்ட நிகழ்வு,  தமிழகம் முழுவதும் திமுகவுக்கு அவப்பெயரை தேடி தந்து விட்டது. அதில் இருந்து கூட பாடம் கற்றுக் கொள்ளலாமல், சாதி வெறியோடு கே.சி. வீரமணியுடன் கை கோர்த்து கொண்டு ஜோலார்பேட்டையிலும் திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக காய் நகர்த்திய, அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி., கே.சி.வீரமணி ஆகிய மூன்று பேரும் மண்ணை கவ்வியுள்ளனர்.

ஜோலார்பேட்டையை உள்ளடக்கிய திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் தேவராஜ் எம்.எல்.ஏ.. இவரின் மருமகள், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று தந்தையும், தனையனும் கே.சி. வீரமணியோடு கைகோர்த்துக் கொண்டு தீட்டிய சதித்திட்டத்தை, ஆலங்காயத்தில் சாலை மறியலில் குதித்து அம்பலப்படுத்தினார்கள் உள்ளூர் திமுக நிர்வாகிகள்.

மனைவி சங்கீதாவுடன் பாரி…

திமுக தலைமையின் அறிவிப்புக்கு எதிராக பாமக, அதிமுகவோடு கைகோர்த்துக் கொண்டு, தங்களது பண்ணை வீட்டில் பணியாளராக வேலை பார்த்து வரும் பாரி என்பவரின் மனைவி சங்கீதாவை, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தலைவராக்கினார் துரைமுருகனும், கதிர் ஆனந்த்தும். இதனால், அடிபட்ட புலியான தேவராஜ் எம்.எல்.ஏ., ஜோலார்பேட்டையில் துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோரின் சதித்திட்டதை முறியடிக்க, அதிரடியாக களம் இறங்கினார்.

தேவராஜ் எம்எல்ஏ

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு திமுக தலைமை ஒப்புதலோடு அறிவித்த சத்தியா சதீஷ்குமாரை ஒன்றியக் குழு தலைவராக்கும் முயற்சியில் உறுதியோடு இருந்தார் தேவராஜ் எம்.எல்.ஏ., ஆனால் சத்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய கதிர் ஆனந்த், சாதி வெறியை தூண்டிவிட்டார். வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்று கூறி, ஜோலார்பேட்டை ஒன்றிய தேர்தலில் வெற்றி பெற்ற வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக, பாமக ஆகிய கவுன்சிலர்களை, கே.சி.வீரமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி மூலம் திரைமறைவில் ஒன்றிணைக்க மெனக்கெட்டார் கதிர் ஆனந்த். ஆனால், அவரின் சாதி அரசியலுக்கு அடிபணியாத திமுகவைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கவுன்சிலர்கள், முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த சத்தியா சதீஷ்குமாரை, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வு செய்தனர்.

சத்யா சதீஷ்குமார்

இதன் மூலம் சாதி வெறியை தூண்டிவிட்ட அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் முகத்தில் கரியை பூசினார்கள் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிர்கள்.

தேவராஜ் எம்எல்ஏவுக்கு எதிரான காய் நகர்த்தலில் மண்ணை கவ்விய பிறகும் கூட அமைச்சர் துரைமுருகனுக்கும், கதிர் ஆனந்தத்திற்கும் புத்தி வரவில்லை. சாதிகளை மறந்து கட்சி மீதான விசுவாசத்தில் ஒன்றாக இருக்கும் திமுக கவுன்சிலர்களுக்குள் குரோதத்தை தொடர்ந்து ஏற்படுத்தியது, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலிலும் எதிரொலித்ததுதான்,அங்குள்ள திமுக நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது.

நந்தகுமார் எம்எல்ஏ

திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் தேவராஜ் எம்எல்ஏ, அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக  அதி தீவிரமான நிலைப்பாட்டை கொண்டவர். கொஞ்சம் அதிரடியாக செயல்படுபவர் என்றும் பெயரெடுத்தவர். ஆனால், வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் அணைக்கட்டு நந்தகுமார் எம்எல்ஏ, சாத்வீகமான அரசியலை கையாள்பவர். அவரது கட்டுப்பாட்டில் உள்ள குடியாத்தத்திலும் சாதி வெறியை தூண்டிவிட்டுள்ளார்கள் அமைச்சர் துரைமுருகனும், அவரது மகன் கதிர் ஆனந்த் என்பது, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடமே புகாராக சென்றுள்ளதுதான், தந்தையும், தனையனும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்…

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 31 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்த 18 பேரும், கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ஒருவரும் வெற்றிப் பெற்றனர். இங்கு போட்டியின்றியே திமுகவைச் சேர்ந்தவர் ஒன்றியக் குழு தலைவராக வெற்றி பெற்றுவிட முடியும் என்ற போதும், திமுக தலைமை ஒப்புதலோடு ஒன்றியக் குழுக் தலைவர் பதவிக்கு நந்தகுமார் எம்.எல்.ஏ அறிவித்த குடியாத்தம் ஒன்றிய (வடக்கு) திமுக செயலாளர் என்.இ.சத்யானந்தத்துடன் மோதுகிறார், அமைச்சர் துரைமுருகனின் பரம சிஷ்யரான கள்ளூர் கே.ரவி.  இங்கேயும் வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்ற கோஷத்தை முன்வைத்து, திமுக கவுன்சிலர்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் குடியாத்தம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவியை வைத்துக் கொண்டு கே.ரவி ஆடும் ஆட்டத்திற்கு இரையாகிறார் திமுகவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற கவுன்சிலர். இவர், துரைமுருகனின் நெருங்கிய நண்பரான சக்கரவர்த்தியின் மகன் ஆவார்..

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சத்யானந்தம்.

ரஞ்சித்குமாருக்கு ஆதரவாக, அதிமுக, பாமக தரப்பு கவுன்சிலர்களுடன் பகிரங்கமாகவே டீலிங் பேசுகிறார், கள்ளூர் கே.ரவி. அமைச்சர் துரைமுருகனின் ஆதரவு பெற்றவர் ரஞ்சித்குமார். எனவே அவருக்குதான் திமுக கவுன்சிலர்கள் ஓட்டு போட வேண்டும் என மிரட்டல் பாணியை கே.ரவி கையில் எடுக்க, அதிர்ச்சியடைந்த மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ, திமுக தலைமைக்கு புகார் அனுப்புகிறார். அப்போதும் அடங்காத கள்ளுர் கே.ரவி, துரைமுருகனும், கதிர் ஆனந்த் ஆகியோரின் விருப்பத்தை நிறைவேற்ற பாமக, அதிமுக கவுன்சிலர்களையும் வளைத்து விடுகிறார்.

திமுக கவுன்சிலர்களே இரண்டு அணியாக பிரிந்து நிற்கும் நிலையில், ஒன்றிய தலைவருக்கான தேர்தல் பரபரப்பாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 31 கவுன்சிலர்களில், 16 கவுன்சிலர்கள் சத்யானந்தத்திற்கு வாக்களிக்கிறார்கள். திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட ரஞ்சித்குமாருக்கு 15 வாக்குகள் கிடைக்கிறது. மயிரிழையில் உயிர் தப்பியதைப் போல, ஒரு வாக்கு வித்தியாசத்தில் சத்யானந்தம் வெற்றிப் பெறுகிறார். இவர் நாயூடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக வெற்றிப் பெற்ற சத்யானந்தம் உள்பட திமுக கவுன்சிலர்கள் 18 பேரையும் அழைத்துக் கொண்டு சென்னை அண்ணா அறிவாலயம் வந்த வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ,  சாதி வெறியோடு திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரையே தோற்கடிக்க முயன்று, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கிறார்.

அப்போது குடியாத்தம் தேர்தலில் நடைபெற்ற எந்தவொரு தில்லுமுல்லும் தனக்கு தெரியாததைப் போல அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, அங்கு அமர்ந்திருந்த திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனிடம், நந்தகுமார் எம்எல்ஏ கொடுத்த புகார் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். கட்சி விரோத நடவடிக்கைகளில் தன்னுடைய ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை காட்டிக் கொள்ளாமல், பாரி, கள்ளூர் கே.ரவி உள்பட பலரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கையெழுத்து போடுகிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். இவர்கள் எல்லோருமே கதிர் ஆனந்த்தின் தூண்டுதலின்பேரில் செயல்பட்டவர்கள். அம்பு மீது நடவடிக்கை பாய்கிறது. ஆனால், ஏவிவிட்ட கதிர் ஆனந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துரைமுருகனின் மகன் என்பதால் கதிர் ஆனந்த் தப்பித்து கொள்கிறார். இதென்ன நியாயம் என்று கோபமாக கேட்கிறார்கள் குடியாத்தம் திமுக நிர்வாகிகள்.

தலைவர் தளபதி முன்பு பெட்டி பாம்பு போல அடங்கி ஒடுங்கியிருந்த துரைமுருகனின் பாவனையைப் பார்த்த குடியாத்தம் திமுக கவுன்சிர்கள் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டனர்.

என்னம்மா நடிக்கிறார் துரைமுருகன்.. மேடையில ஏறினா ஒரு பேச்சு. காட்பாடிக்கு வந்தா ஒரு பேச்சு.. பொதுமக்களிடம், திமுக நிர்வாகிகளிடம் ஆதரவு இருக்கிறதோ, இல்லையோ, வன்னியர்களுக்குதான் பதவி கிடைக்க வேண்டும் என்ற சாதி வெறியோடு அதிமுகவுடனும், பாமகவுடனும் பகிரங்கமாக கூட்டணி வைத்துக் கொள்ளும் அமைச்சர் துரைமுருகன்தான், மேடையில் ஏறி திராவிட கொள்கைகளைப் பற்றி பொங்குகிறார். அவரின் சாதி வெறி அரசியலால்,  காட்பாடியிலும், வேலூரிலும்தான் திமுகவுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருந்தது. இப்போது, ஜோலார்பேட்டையிலும், குடியாத்தம் வரையிலும் நாறி போயிருக்கிறது.

காட்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளிமலை வேல்முருகன்…

வன்னியர் சாதியிலும் கூட ஏழையாக இருந்தால், அவர்களை அமைச்சர் துரைமுருகன் ஆதரிக்க மாட்டார் என்பதற்கு, காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக தேர்ந்தெடுப்பட்டவரை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். வள்ளிமலை வேல்முருகன் என்பவரை தனது சொந்த தொகுதியான காட்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு தலைவராக தேர்வு செய்ய வைத்துள்ளார், அமைச்சர் துரைமுருகன்.

பெங்களுரில் 500 லாரிகளை வைத்து தொழில் செய்து கொண்டிருக்கும் வள்ளிமலை வேல்முருகன், மாதத்தில் சில நாட்கள் மட்டுமே காட்பாடிக்கு வருபவர். இப்படிபட்ட மக்கள் தொண்டனைதான் காட்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பதவிக்கு நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். காட்பாடியிலேயே வாழ்ந்து திமுக நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று சிறை சென்ற ஒரு திமுக நிர்வாகி கூட, அமைச்சர் துரைமுருகன் கண்ணுக்கு படவில்லை. இதைவிட கொடுமை என்னவென்றால், வள்ளிமலை வேல்முருகனிடம் திமுக உறுப்பினர் அட்டையே இல்லை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள உறுப்பினர் பட்டியலை பார்த்தால் குட்டு வெளிப்பபட்டுவிடும் என்று பெரிய குண்டை தூக்கிப் போடுகிறார்கள் காட்பாடி திமுக நிர்வாகிகள்.

உறுப்பினர் அட்டை இல்லையென்றால் என்ன? நடமாடும் தங்க நகை கடை போல ஜொலிக்கிறாரே வேல்முருகன். அதில் மயங்கி விழுந்திருப்பார் அமைச்சர் துரைமுருகன் என்று கூறி சிரிக்கிறார்கள் காட்பாடி திமுக நிர்வாகிகள்.